(உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர் தொடர்ச்சி)

பெரும்புலியூர்

பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த (இ)ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோசமடைந்தார். (இ)ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விசயங்களையே பேசிக் கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது எனக்குப் பேரானந்தத்தை உண்டாக்குகின்றது. இது பெரிய புண்ணியம். தமக்குப் பாடம் சொல்பவர் ஒருவரும் இல்லையே என்று குன்னத்தில் இவர் தவித்துக் கொண்டிருந்தார். இவருக்கு உங்களுடைய பழக்கம் கிடைத்தது அதிர்ட்டமே” என்று (இ)ராயர் பாராட்டிப் பேசினார். முன்பு வாக்களித்திருந்தபடி தம்மிடமிருந்த திருக்குறட் பிரதியை எனக்கு ஆசீர்வாதத்துடன் கொடுத்தார். அப்பால் நாங்கள் இருவரும் விடைபெற்றுச் செங்கணம் வந்து சேர்ந்தோம்.


வரும்வழியில் (இ)ரெட்டியார் என்னை அயலிலுள்ள ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு பனைமரத்தைக் காட்டினார். அதில் நான்கு பக்கங்களிலும் பல கிளைகள் இருந்தன. நான் பார்த்து வியந்தேன். அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குப் பலர் வருவதுண்டென்றும் சொன்னார். செங்கணம் வந்தது முதல் பின்னும் ஊக்கத்துடன் குறளைப் படித்து இன்புறலானேன். அப்புத்தகத்தில் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதப்பெற்ற பதவுரை, கருத்துரை, விசேடவுரைகள் இருந்தன. அது நளவருடம் ஆனி மாதம் (1856) காஞ்சீபுரம் சபாபதி முதலியாராற் பார்வையிடப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.


பிள்ளையவர்கள் பிரஸ்தாபம்


(இ)ரெட்டியார் பாடஞ்சொல்லும் காலத்தில் இடையிடையே தமக்குத் தெரிந்த வித்துவான்களைப் பற்றியும் சொல்லுவார். நான் அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் பாடம் கேட்டதை அறிந்த அவர் அவ்வையங்காருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்று சொன்னார். கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியாரைப் பார்த்திருப்பதாகவும் அவர் சிறந்த இலக்கண வித்துவானென்றும் கூறினார். சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் அவர் அடிக்கடி சொல்வார்; திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக்காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம்போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புத்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார். செய்யுட்களாயுள்ள பகுதிகளின் எண்ணும், உரைப் பகுதிகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. மேலும் மேலும் படிக்கும் நூல்களில் சந்தேகம் எழுந்தால் அந்தச் சுவடியில் அவர் எழுதி வைத்துக்கொள்ளுவார்.


‘அவரிடம் போங்கள்’

இவ்வாறு பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சு வரும் சமயங்களில் நான் ஆவலாகக் கேட்பேன். மேலும் விசயங்களை விசாரிப்பேன். நான் அவர்களிடம் படிக்க வேண்டுமென்று எண்ணியதையும் திருவிளையாடற் புராணத்திற் கயிறுசார்த்திப் பார்த்ததையும் சொல்லியிருந்தேன். இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். (இ)ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்கு நிறைவு உண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். பலரிடம் இக்கருத்தையுடைய வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு ஏங்கிய எனக்கு (இ)ரெட்டியாருடைய வார்த்தைகள் பின்னும் உறுதியை உண்டாக்கின.


(இ)ரெட்டியார் என்னிடம் சொல்வதோடு நில்லாமல் என் தந்தையாரிடமும் இக்கருத்தை வெளியிட்டார்: “என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டா. நீங்கள் எவ்வளவு வருடம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற மனநிறைவைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” என்று அவர் கூறிப் பின்னும் பலமுறை வற்புறுத்தினார். என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற்கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். (இ)ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தைவிட்டுப் புறப்படச் சித்தமாயினர்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.