உ.வே.சா.வின் என் சரித்திரம் 9
(உ.வே.சா.வின் என் சரித்திரம், 8 இன் தொடர்ச்சி)
அத்தியாயம் 6
என் தந்தையார் குருகுலவாசம்
“எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன். அவர் என் விசயமாக உள்ளத்தே கொண்டிருந்த கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர அதிகரித்ததே யொழியக் குறையவில்லை.
இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு இலௌகிகத்தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது. அவருடைய ஆசாரசீலமும் சிவபூசையும் பரிசுத்தமும் சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு என்பாலுள்ள வாத்சல்யம் வெளிப்படையாகத் தோற்றாது. அவரது உள்ளமாகிய குகையிலே அது பொன்போற் பொதியப்பட்டிருந்தது. அதன் ஒளியைச் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன்.
என் தந்தையாருடைய இயல்பான பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயரென்பது; வேங்கட சுப்பையரென்றே அது மருவி விட்டது. அவரது பெயர் முன்னோர்களின் பெயரானமையின் வீட்டிலுள்ளவர்கள் அதைக் கூறமாட்டார்கள். அதனால் “சாமி” என்றே அவரை அழைத்து வந்தனர். என்னுடைய தந்தையாருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருந்தார். இவருக்கு சிரீநிவாசையரென்பது முதற்பெயர். சாமி என்று என் தந்தையாரை அழைத்த காரணம் பற்றி அவரை யாவரும் ‘சின்னசாமி’ என்று வழங்கலாயினர். அவருக்கு அதுவே பெயராக நிலைத்துவிட்டது. என் தந்தையாருக்கு ஒரு தமக்கையார் இருந்தார்.
என் தந்தையாருக்கும் சிறிய தந்தையாருக்கும் இளமையில் என் பாட்டனாரே வடமொழியையும் தமிழையும் கற்பித்தார். என் பாட்டியார் சங்கீதப் பழக்கம் உடையவராதலின் அவருடைய அம்சம் என் தந்தையாரிடமும் இருந்தது. அவருக்குச் சங்கீதத்தில் இளமை தொடங்கியே விருப்பம் உண்டாகி வளர்ச்சி யடைந்து வந்தது.
என் தந்தையாருக்கு உபநயனம் ஆயிற்று. பாட்டியாருக்கு அவரைச் சங்கீதத் துறையில் ஈடுபடுத்த வேண்டுமென்ற அவா இருந்து வந்தது. தம்முடைய அம்மானாகிய கனம் கிருட்டிணையர் உடையார்பாளையம் சமசுதானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து சிறப்படைந்திருந்தமையின் அவரிடமே தம் மூத்த குமாரரை ஒப்பித்துக் குருகுலவாசம் செய்யும்படிவிடலா மென்று எண்ணினார். என் பாட்டனாரும் இதற்குச் சம்மதித்தார். என் தகப்பனாருக்கோ சங்கீத அப்பியாசத்தில் இருந்த ஆவல் சொல்லும் அளவினதன்று. தமக்கு வாய்க்கப்போகிற குரு தாய்வழியினர் என்று தெரிந்தபோது அவரோடு சுலபமாகப் பழகலாமென எண்ணி மிக்க சந்தோசத்தை அடைந்தார்.
“சாமி, எங்கள் மாமாவைப் பற்றி நீ நன்றாகத் தெரிந்துகொண்டிருக்க மாட்டாய். அவரால் திருக்குன்றத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு பெருமை உண்டாயிருக்கிறது தெரியுமா? அவருக்கு இதுவரையில் நல்ல சிசுயன் ஒருவனும் கிடைக்கவில்லை. நீ அவரிடம் சாக்கிரதையாகப் பழகி அவர் மனம் குளிரும்படி நடந்து வந்தால் அவருடைய வித்தை முழுவதும் உனக்கு வராவிட்டாலும் முக்காற் பங்காவது வரும். சங்கீதத்தில் அவருடைய மார்க்கமே தனி. அதை நீ கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் நீயும் கியாதியை அடைவாய்” என்று என் பாட்டியார் கூறினார். அவ்வாறு கூறுகையில் அவர் தம்முடைய குமாரரும் பிற்காலத்தில் ஒரு சமசுதானத்தில் பலரும் பாராட்டும் வண்ணம் சங்கீத வித்துவானாக இருந்து விளங்குவதாகப் பாவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தன் மகனைப் பற்றி இவ்வாறு காணும் கனவுகளுக்குக் கணக்கு உண்டோ?
ஒரு நல்ல நாளில் என் பாட்டியார் தம் அருமைப் புதல்வரை அழைத்துக்கொண்டு உடையார்பாளையம் சென்றார். தன் அம்மானிடம் தம் குமாரரை ஒப்பித்துத் தம் கருத்தையும் கூறினார். கனம் கிரு்டிணையர், “அடே, ஏதாவது பாடு பார்க்கலாம்” என்றார். என் தந்தையாருக்கு என் பாட்டியார் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் சிலவற்றைக் கற்றுக் கொடுத்திருந்தார். அவற்றில் ஒன்றை என் தந்தையார் பாடிக் காட்டினார். அது சுவர சுத்தமாக இருந்தது கண்ட கிருட்டிணையர், “உன் பிள்ளைக்குச் சாரீரம் இருக்கிறது; நீயும் கொஞ்சம் சொல்லித் தந்திருக்கிறாய். முன்னுக்கு வருவான்” என்று கூறினார்.
“மாமா, உங்களிடம் இவனை ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவனுக்கு ஒரு குறையும் இல்லை” என்றார் பாட்டியார். “
எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவனுக்குத் தேக புசுட்டிதான் போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும். உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்” என்று கிருட்டிணையர் கூறினார்.
“நமக்குச் சொந்தக்காரராக இருப்பதனால்தான் நம்முடைய தேக சௌக்கியத்தைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்லுகிறார்” என்று எந்தையார் நினைத்துக் கொண்டார். ஆனால் உண்மை வேறு.
கனமார்க்க சங்கீதம் எல்லோராலும் சாதித்துக்கொள்ள இயலாதது. யானையின் பலமும் சிங்கத்தின் தொனியும் இருப்பவர்களே அதை முற்றும் கடைப்பிடிக்கலாம். கனம் கிருட்டிணையருக்குச் சரீரவன்மையும் சாரீரபலமும் நன்றாகப் பொருந்தியிருந்தன. அதனால் அவர் அந்த மார்க்கத்தில் நல்ல சாதனை பெற்றார். சங்கீத வித்துவான்கள் சாரீரத்தை மாத்திரம் பரீட்சை செய்து பார்ப்பார்கள். கனமார்க்க சங்கீத வித்துவானாகிய அவர் சரீரத்தையும் சாரீரத்தையும் ஒருங்கே பார்த்தார். இரண்டு வன்மையும் சேர்ந்தால்தான் தம்முடைய வழி பிடிபடுமென்பது அவர் தம் அநுபவத்திற் கண்டதல்லவா?
“இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புசுட்டிப்படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாகக் காப்பாற்றிக் கொண்டால் போதும்” என்று என் பாட்டியார் சொல்லிச் சில நாள் அங்கே தங்கியிருந்து பிறகு விடை பெற்று உத்தமதானபுரம் போய்ச் சேர்ந்தார்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply