என் சரித்திரம் 40 : ஏக்கமும் நம்பிக்கையும்
(என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி)
அத்தியாயம் 23
ஏக்கமும் நம்பிக்கையும்
களத்தூரில் இருந்தபோது எங்களுக்கு வந்த தானியங்களில் கம்பு முதலியன அதிகமாகவும் நெல் குறைவாகவும் இருந்தன. கம்பு முதலியவற்றைக் கொடுத்துவிட்டு நெல்லாக மாற்றிக்கொள்வது வழக்கம்.
அன்னையார் கம்பஞ் சாதம் உண்டது
ஒருநாள் என் தாயார் உண்ணும்போது நான் கவனித்தேன். அவர் இலையில் இருந்த உணவு புதியதாகத் தோற்றியது; அவர் கம்பஞ்சாதத்தை உண்டுகொண்டிருந்தார். நெல்லின் அருமையை உணர்ந்த அவர் எனக்கும் என் தந்தையாருக்கும் நெல்லரிசியுணவை அளித்துத் தாம் மட்டும் கம்பஞ்சாதத்தைச் சில நாட்களாக உண்டு வந்தாரென்பது தெரிய வந்தது.
“ஏன் அம்மா இப்படிச் செய்கிறாய்?” என்று நான் கேட்டேன். “கம்பு உடம்புக்கு நல்லதுதானே? அதை நெல்லுக்காக மாற்றுவது ஏனென்றெண்ணி இப்படிச் செய்கிறேன்.” “அப்படியானால் எங்களுக்கு மாத்திரம் அரிசிச் சாதம் போடுகிறாயே?” என் அன்னையாருக்கு விடை கூற வழியில்லை. அப்பால் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அவரும் எங்களைப்போல அரிசிச் சாதம் உண்ண ஆரம்பித்தார்.
இராகவையரிடம் பாடம் கேட்டது
ஐப்பசி மாதம் தீபாவளி வந்தது. எனக்குத் தலைத் தீபாவளியாதலால் என் மாமனாருடைய அழைப்பின்மேல் நானும் என் தாய், தந்தையரும் உத்தமதானபுரம் சென்றோம். மாளாபுரத்தில் தீபாவளிப் பண்டிகை நடந்தது. அதனுடன் ஆறு மாதமும் நடந்தது. தீபாவளிக்காக ஏழு ரூபாய்க்கு சரிகை வாத்திரமும் ஆறாம் மாதத்திற்காகப் பதினான்கு ரூபாயும் கிடைத்தன. அதற்குமுன் நான் கையில் வெள்ளிக்காப்பை மட்டும் அணிந்திருந்தேன். என் தாயார் விருப்பத்தின்படி அந்தப் பதினான்கு ரூபாய்க்கும் வெள்ளிச்சங்கிலி செய்து எனக்கு அணிவித்தார்கள். தீபாவளியான பிறகு என் தந்தையாருக்கு சுரம் வந்தமையின் ஆறுமாத காலம் உத்தமதானபுரத்திலேயே தங்க நேர்ந்தது. அக்காலத்தில் பாபநாசத்தில் சிறுபள்ளிக்கூடம் ஒன்றின் உபாத்தியாயராக இராகவையர் என்பவர் இருந்தார். அவர் தமிழ் நூல்களைக் கற்றவர். கும்பகோணம் காலேசில் தமிழாசிரியராக இருந்த தியாகராச செட்டியாரிடத்திலும் மகாவித்துவான் சிரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்திலும் பாடங் கேட்டவர். அவரைப் பற்றிக் கேள்வியுற்ற நான் ஊரிலிருந்த காலத்தை வீணாக்காமல் அவரிடம் சென்று பாடங் கேட்கலாமென்று எண்ணினேன்.
அப்படியே ஒருநாள் பாபநாசம் சென்று அவரைப் பார்த்துப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவர் சம்மதித்தார். நன்னூல் காண்டிகையுரையை அவர்பால் கேட்கத் தொடங்கினேன். தினந்தோறும் காலையில் உத்தமதானபுரத்திலிருந்து பாபநாசம் செல்வேன்; பகல் முழுவதும் அங்கே தங்கியிருந்து அவருக்குள்ள ஓய்வு நேரங்களில் பாடங் கேட்டு வருவேன்.
அக்காலத்தில் அவர் சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் தியாகராச செட்டியாரைப் பற்றியும் அடிக்கடி பாராட்டிப் பேசுவார்; “நன்னூல் பாடம் கேட்க வேண்டுமென்றால் தியாகராச செட்டியாரிடம் கேட்கவேண்டும். நன்னூலின் வரையறையை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். ‘நடவாமடிசீ’ என்ற சூத்திரத்தின் உரை விசேடத்தை அவரைப் போலச் சிக்கின்றிச் சொல்பவர் வேறு யாரும் இல்லை. அதனைப் பிள்ளையவர்களிடம் அவர் அறிந்துகொண்டார்” என்று அவர் சொல்லுவார். அவர் இவ்வாறு சொல்லச் சொல்ல எனக்கு நெடுங்காலமாக இருந்துவரும் ஆவல் பெருகி ஏக்கத்தை உண்டாக்கும். “கும்பகோணத்துக்குப் போய்ச் செட்டியாரிடம் பாடங் கேட்கலாமா? அது நமக்குக் கிடைக்குமா? கவர்ன்மெண்ட்டு காலேசில் வேலைபார்க்கும் அவர் நம்மை ஒரு பொருட்படுத்திப் பாடஞ் சொல்லுவாரா!” என்று பல பலவிதமாக நினைந்து நினைந்து மறுகினேன்.
இராகவையரிடம் தொடர்ச்சியாக ஒரு வாரம் பாடங்கேட்டு வந்தேன். அவரோடு பழகும் ஒருவர் ஒரு நாள் என்னைப் பார்த்து, “தினந்தோறும் இவரிடம் பாடங்கேட்கிறீரே. இவர் ஏழை. இவருக்கு ஏதாவது திரவிய சகாயம் செய்யவேண்டாமோ?” என்றார். அவர் கூறியது உண்மைதான். ஆனால் நான் பொருளுதவி செய்யும் நிலையில் இல்லையே! என் தந்தையாரிடம் இந்த விசயத்தைக் கூற அஞ்சினேன். நான் அவருக்குச் சிரமம் கொடுப்பது பிழைதான் என்பதை உணர்ந்து அன்று முதல் தினந்தோறும் அவரிடம் சென்று வருவதை நிறுத்திக்கொண்டேன். இடையிடையே சென்று சில விசயங்களை மட்டும் கேட்டு வந்தேன்.
பிற்காலத்தில் இராகவையர் மதுரைக் காலேசில் தமிழ்ப் பண்டிதராக இருந்து அப்பால் சந்நியாசம் பெற்று வாழ்ந்து வந்தார்.
‘இங்கிலீசு படிக்கச் சொல்லுங்கள்’
ஒருநாள் நானும் என் தந்தையாரும் கும்பகோணத்திற்கு ஒரு வேலையாகப் போயிருந்தோம். அங்கே வக்கீலாக இருந்த வேங்கட(இ) ராவு என்பவர் எந்தையாருக்கு நண்பராதலின் அவர் வீட்டிற்குச் சென்றோம். தந்தையார் அவரோடு பேசுகையில் என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “இவன் தமிழ் படிக்கிறான்; சங்கீத அப்பியாசமும் செய்து வருகிறான். யாரிடமாவது இருந்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இங்குள்ள தியாகராச செட்டியார் மிகச்சிறந்த வித்துவானென்று கேள்விப்படுகிறோம். அவரிடம் படிக்க வேண்டுமென்று இவன் விரும்புகிறான்” என்று தந்தையார் சொல்லிவிட்டு நான் இயற்றிய செய்யுட்கள் சிலவற்றைச் சொல்லிக்காட்டச் செய்தார்.
அவற்றைக் கேட்ட வேங்கடராவு, “நன்றாக இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் இவற்றால் என்ன பிரயோசனம்? எதற்காக இவ்வளவு கட்டப்பட வேண்டும்? இதை விட்டுவிட்டு இங்கிலீசு படிக்கச் சொல்லுங்கள். நான் உதவி செய்கிறேன்; என் அன்பர்களையும் செய்யச் சொல்லுகிறேன். இன்னும் சில வருடங்களில் இவன் முன்னுக்கு வந்துவிடுவான்” என்றார்.
எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை; அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை. அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. “தியாகராச செட்டியாரிடம் படிக்க வழிகேட்டால் இவர் இங்கிலீசு படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீசு ம் வேண்டா; அதனால் வரும் உத்தியோகமும் வேண்டா” என்று நான் சிந்தனை செய்தேன்.
என் தந்தையார், “இங்கிலீசு படிக்க முன்பே இவன் முயன்றதுண்டு; தெலுங்கும் படித்தான். ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. தமிழ்ப் படிப்பிலேதான் இவனுக்கு ஆசையும் தீவிரமும் இருக்கின்றன. வேறு வழியில் இவன் புத்தியை மாற்றுவது சாத்தியமாகத் தோற்றவில்லை” என்று கூறி விடைபெற்று என்னுடன் உத்தமதானபுரம் வந்துவிட்டார்.
‘உடம்பு வளைந்து வேலை செய்வது’
உத்தமதானபுரத்தில் எங்கள் நிலங்களை என் சிறிய தந்தையார் கவனித்து வந்தார். நான் அவ்வூரில் தங்கியிருந்த ஆறுமாத காலங்களில் அவருடன் வயற்காடுகளுக்குச் செல்வேன். புன்செய்களில் பயிரிட்டிருக்கும் செடி, கொடிகளைப் பாதுகாப்பதில் உதவி புரிவேன்; வேலி கட்டுவேன்; சலம் இறைப்பேன்; காய்களைப் பறிப்பேன். என் மாமனார் வீட்டினர் பார்க்கும்போது பின்னும் சுறுசுறுப்பாக அவற்றைச் செய்வேன்; ‘படித்துச் சோம்பேறியாகிவிட்டான்’ என்று எண்ணாமல், ‘கருத்துள்ள பிள்ளை; பிழைத்துக்கொள்வான்’ என்று அவர்கள் எண்ண வேண்டுமென்பது என் நினைவு. இத்தகைய சிறு வேலைகளை இளமை முதலே செய்துவருவது கிராமத்தாருக்கு இயல்பு. உடம்பு வளைந்து வேலை செய்வது அகௌரவம் என்ற எண்ணம் அக்காலத்தில் அதிகமாகப் பரவவில்லை.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply