(என் சரித்திரம் 40 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி)

தந்தையார் சிவ பூசை


அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் படிக லிங்க பூசையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சிசுந்தரேசுவர ரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூசையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூசையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிசேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூசை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூசையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார். தம் பூசையில் நிவேதனமான அன்னத்தையன்றி வேறு அன்னத்தை உண்ணும் வழக்கத்தை நிறுத்திக்கொண்டார்.

இராமாயணப் பிரசங்கத்தில் அவர் தம் வாழ்க்கையில் பல வருடங்கள் ஈடுபட்டவர். இராமபிரானுடைய அரிய குணங்கள் அவர் நெஞ்சத்தை உருக்கின. ஆயினும் சிவபெருமானிடத்து அவருக்கு உண்டான தீவிரமான பக்தி இராமபிரானிடம் உண்டாகவில்லை. இராமபிரானை எல்லாக் குணங்களும் நிறைந்த மூர்த்தியாக எண்ணி வழிபடுவதில் அவர் குறைவதில்லை. ஆயினும் அவர் தம் இருதய அந்தரங்கத்தைச் சிவபிரானுக்கே உரிமையாக்கினர். அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் அவருடைய சங்கீதத் திறமை அவர் புகழுக்கும் மதிப்புக்கும் காரணமாக நின்றது. பிற்பகுதியில் அவருடைய சிவபூசையும் சிவபக்தியும் அவருடைய மதிப்புக்கு முக்கிய காரணமாயின. கோபம், உறவினர்களிடத்தில் ஒருவகையான வெறுப்பு முதலிய குறைகளும் விடாமுயற்சி, கட்டங்களைச் சகிக்கும்தன்மை, சங்கீதத் திறமை என்னும் குணங்களும் அவர்பால் இருந்தன. ஆனால் அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்தக் குறைகளையும் நிறைகளையும் கடந்து நின்று முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது சிறந்த சிவபக்திச் சிறப்பேயாகும்.

அரும்பாவூர் நாட்டார்

சில காலத்துக்குப் பிறகு சூரியமூலையிலிருந்து நேரே குன்னத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். என் தந்தையார் வழக்கம்போலவே காலட்சேபம் செய்துவந்தார். எனக்குப் பழைய உற்சாகம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது. படித்த பழம்புத்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும் திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த நாட்டாராகிய பெருஞ்செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில் குன்னத்தில் எங்கள் சாகையில் தங்கினர். அவர் சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர்.

அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை உணர்ந்தார். பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்? பிள்ளையவர்களிடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப் படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப்போய் ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத் திருப்தியாக இல்லை” என்றார்.

“அவரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடம் சொல்லித் தருவாரென்பது என்ன நிச்சயம்?” என்று என் தந்தையார் கேட்டார்.

“என்ன அப்படிக் கேட்கிறீர்களே! அவர்களிடத்தில் எவ்வளவு பேர் கற்றுக்கொள்ளுகிறார்கள்! எவ்வளவு பேர் பாடங்கேட்டு நல்லநிலைக்கு வந்திருக்கிறார்கள்! பாடம் சொல்வதைப்போல அவர்களுக்கு விருப்பமான செயல் வேறொன்றும் இல்லை. இப்போது அவர்கள் நாகபட்டினத்தில் அந்த தலபுராணம் அரங்கேற்றி வருகிறார்கள். நான் போய் ஒரு மாதம் இருந்துவிட்டு வந்தேன் அவர்களிடம் எப்போதும் சில மாணாக்கர்கள் பாடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.”

“எல்லாம் சரி தான். ஆனாலும் இவனைத் தனியே அனுப்புவதற்கு என் மனம் துணியவில்லை. தவிர அவர்களிடம் சென்றிருந்தால் ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்குத் திரவியம் வேண்டுமே. இப்போதுதான் இவனுக்குக் கல்யாணம் நடந்தது. அதற்கு அதிகப்பணம் செலவாகிவிட்டது. இப்படி இருக்கையில் மேலும் எப்படி என்னால் பணம் செலவு செய்ய முடியும்?” என்றார் தந்தையார்.

“என்னவோ, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பிள்ளையவர்களைத் தவிர இவருக்குத் திருப்தி உண்டாகும்படி பாடம் சொல்வோர் வேறு யாரும் இல்லை. யோசித்துக்கொண்டு செய்யுங்கள்” என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர்பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகிவிட்டது. கடவுள் திருவருள் கைகூட்டுமோ என்று ஏங்கலானேன்.

நம்பிக்கை உதயம்

ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புத்தகத்தில் கயிறுசார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.

நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறுசார்த்தச் செய்து, புத்தகத்தைப் பிரித்தேன். சென்ற துருமதி வருடம் பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புத்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தட்சிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன். “என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புத்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என் மனம் திக்குத்திக்கென்று அடித்துக்கொண்டது. நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.


சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது. மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தட்சிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால், என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சிசுந்தரக் கடவுள் முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.

என் தந்தையார் பூசையிலுள்ள மூர்த்தியும் சிரீ மீனாட்சிசுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

“எவ்வாறு அவர்களிடம் போய்ச் சேர்வது? செலவுக்கு என்ன செய்வது? தனியே போய் இருக்க முடியுமா?” என்ற கேள்விகள் எழுந்து பயமுறுத்தினாலும், திருவிளையாடற் பாட்டின் தோற்றம் அந்தப் பயத்தை மேலெழும்ப வொட்டாமல் அடக்கி நின்றது. அருணோதயத்தை எதிர்பார்க்கும் சேவலைப்போல நல்ல காலத்தை எதிர்பார்த்து நாட்களைக் கழித்து வந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.