(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ –  தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உலகத் தாய்மொழி நாள்

பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்

பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு! இரண்டு, தாய்மொழி அல்ல, தாய்மொழிகள்!

உலகம் முழுமைக்கும் ஒற்றைத் தாய்மொழி இல்லை, பல மொழிகள், பல தேசங்கள், பல நாடுகள் என்பதே உண்மை. ஒவ்வொரு தேசமும் தன் தாய்மொழியைப் போற்றிக் காக்க வேண்டும். தன் தாய்மொழியைப் பிற தேசங்கள் மீது திணிக்கக் கூடாது. அப்படிச் செய்வது மொழி ஒடுக்குமுறை ஆகும். மொழி ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு! மொழிப் பன்மையத்துக்கு அறிந்தேற்பு! இந்த இரண்டும் உலகத் தாய்மொழி நாள் என்ற பெயரில் மறைந்து விடுகிறது.

மனிதவுரிமைகள் நாளை மனிதவுரிமை நாள் என்றாற்போல் தாய்மொழிகள் நாளை தாய்மொழி நாள் என்று சொல்லக் கூடாதா? என்ற கேள்வி எழும். மனிதவுரிமைகள் உரிச்சொல்லாகும் போது மனிதவுரிமை என்று சுருங்குவதில் கருத்துச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் ஒரே நாடு ஒரே மொழி பேர்வழிகள் தாய்மொழி நாளை எப்படி வைத்துக் கொள்வார்கள்? என்று எண்ணிப் பாருங்கள். பாரதத் தாய் தேசத்துக்கு! இந்தித் தாய் மொழிக்கு! என்று கிளம்பி விடுவார்கள். உரிச் சொல்லே ஆயினும் பன்மையைப் பன்மையாகவே பயன்படுத்தினால் சரிப்படும் என்பதற்கு ஒரு பழைய எடுத்துக்காட்டு தருகிறேன்:

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கு என்ன பெயர்? (இ)ராச்சிய சபா! மேலவை உண்மையில் எப்படி இருக்க வேண்டும்! மக்களவை நாடு முழுவதற்குமானது என்றால் இ)ராச்சிய சபா மாநிலங்களுக்கானதாக இருக்க வேண்டும். இ)ராச்சிய சபா என்பதை மாநில அவை என்று சொல்லாமல் மாநிலங்களவை (மாநிலங்கள் + அவை) என்று அழைத்தது திமுகதான் என்று நினைக்கிறேன். பொருள் பொதிந்த சொல்லாக்கம்!

மாநிலங்கள் அவை! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு! இன்னும் இது போன்ற எடுத்துக்காட்டுகள் இருந்தால் கொடுங்கள்! சிஐடியு – Centre of Indian Trade Unions என்பதை நம் தோழர்கள் தமிழாக்கம் செய்ய முற்படுவதே இல்லை. அப்படியே செய்தாலும், இந்தியத் தொழிற்சங்க மையம் என்பார்கள். இந்தியத் தொழிற்சங்கங்கள் மையம் என்று சொல்வதில் என்ன குறை?

ஆகவே பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் கொண்டாடுவோம்! எல்லாவகை மொழித் திணிப்பையும் எதிர்த்துப் போராடுவோம்!

[தாய்மொழிகள் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். உடல் நலம் சற்றே குன்றி இருப்பதால் உடனே இயலவில்லை. விரைவில் எழுதுவேன்.] 

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 107