(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 5/5 தொடர்ச்சி)

10. சான்றோர் பெருந்தகை மு.. 1/3


வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாசா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் முனைவர்மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும்.

பிறப்பு

சொந்த ஊர் வேலம் என்றாலும், முனைவர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த முனைவர் அவர்களின் தொடக்கக் கல்வி திருப்பத்துாரிலும், பின்னர் வாலாசாவிலும் கழிந்தது. இவர்களின் பாட்டியாரே இவர்களைப் பாராட்டிச் சீராட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள். இவர்களின் இனிய நினைவினை நினைவுகூர எழுந்ததே முனைவர்அவர்களின் ‘விடுதலையா?’ என்ற சிறுகதை. தம்மை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரை நினைத்துக் கொண்டால், முனைவர் அவர்கள் பழைய நினைவுகளையெல்லாம் உணர்ச்சியோடு பேசுவார். முனைவர் அவர்களின் குடும்பம் ஊரில் செல்வாக்காக விளங்கிய குடும்பம். மேலும் முனைவர் அவர்கள் குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாராவர். உடன் பிறந்தவர் இருவரும் தமக்கையும் தங்கையும் ஆவர். தந்தையாரின் அறிவுத் திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் முனைவர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். முனைவர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C) எழுதி வெற்றி பெற்றார்கள்.

முதற் பணி

அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் முனைவர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தமிழ்க் கல்வி

உடலை ஓம்பிய நேரத்தில் பேரறிஞர் கூன் இயற்கை மருத்துவம் பற்றிய நூல் ஒன்றினை இவர்கள் படித்தார்கள். அந்நூல் இவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைத் தந்தது. அதன்வழித் தம் உடல் நலம் காத்துக் கொண்ட இவர்கள் உளநலத்திற்குரிய தமிழ்க் கல்வியினை மேற்கொண்டார்கள். இளமை தொட்டே இவர்கள்பால் குறைவற நிரம்பயிருந்த தமிழார்வம் தொடர்ந்து தமிழ் நூல்களைக் கற்றுவரச் செய்தது. யாழ்ப்பாணம் திரு. முருகேச பண்டிதர் அவர்களின் மாணவர் திரு. முருகைய முதலியார் அவர்களிடம் இவர்கள் தமிழ் நூல்களைக் கற்று வரலானார்கள். 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் முதல்னிலைத் தேர்வு (Vidwan preliminary) எழுதி வெற்றி பெற்ற இவர்கள், திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார்கள். இருபத் திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கிய இவர்கள், மறு ஆண்டிலேயே (1935) வித்துவான் நிறைநிலைத் (vidwan Final) தேர்வு எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதலாமவராகத் தேறித் திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார்கள். ஆசிரியப் பணியோடு தேர்விற்கும் படித்துச் சிறப்பாகத் தேறியமை எடுத்த செயலைத் திறம்படச் செம்மையுற நிறைவேற்றும் இவர்கள் ஆற்றலை இனிமையுறப் புலப் படுத்தும். தொடர்ந்து கல்வி பயின்று பி.ஓ.எல். (B.O.L) தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்.

பச்சையப்பன் பணி

1939ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியப் பணி ஏற்றார்கள். அக்காலை பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இலக்குமணசுவாமி முதலியார் அவர்கள் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் இவர் தம் வளர்ச்சிக்கு வாய்ப்புத் தந்து ஊக்கமூட்டி வந்தார்கள். 1945ஆம் ஆண்டில் வினை சொற்களைப் (Verbs) பற்றி ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் (M.O.L.) பட்டம் பெற்றார்கள். அது பொழுது தமிழ்த் துறையினைத் தலைமை தாங்கி நடத்திய மோசூர் கந்தசாமி முதலியா ரவர்கள் இவர்கள்பால் பேரன்பு செலுத்தி இவர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு 1946ஆம் ஆண்டில் இவர்கள் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார்கள். 1948ஆம் ஆண்டில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ (The treatment of Nature in Sangam Literature) என்ற பொருள் குறித்து ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ழுதன் முதலில் ‘முனைவர்(டாக்டர்)’ பட்டம் பெற்றார்கள்.

வகுப்பறையில்

முனைவர் அவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மாணவர் மனங்கொளக் கற்பிப்பார்கள். சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. சங்க இலக்கிய மாந்தரின் நுண்மையான உள்ளத்தினை, அதிலும் குறிப்பாகத் தலைவியின் நெஞ்சப்பாங்கினை, அவர்கள் அமைதியோடும் உணர்ச்சியோடும் உணர்த்தும் பொழுது வகுப்பறையில் இருந்து கேட்கவேண்டும். இலக்கணப் பாடத்தைத் தெளிவாக நடத்துதல், மொழி நூலின் திறம் காட்டல், இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பைப் புலப்படுத்துதல், ஆக இப்படிப் பல துறைகளிலும் அவர்தம் சொற்பொழிவு கருத்திற்கு விருந்தாக அமைந்தது. ஆரவாரமின்றி அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்