(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 4/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5

நடை நலம்

1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.

2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.

3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம்.

4. இரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும் ஒத்ததாகவே இருக்கும்,

‘உரைநடையில் தமிழைப்போல் நுகரவேண்டுமானால் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இருபுலவர்களின் செந்தமிழைச் செவியில் மடுக்க வேண்டும்.’

என்ற யோகி சுத்தானந்த பாரதியின் கூற்றும் இதனை உண்மைப்படுத்துகிறது.

5. இவர்தம் நடை தனித்தமிழ் நடையாகும். எதுகை மோனை இன்பத்திற்காகக்கூட இவர் வடமொழிச் சொற்களைக் கையாள்வதில்லை. இவர்தம் தனித் தமிழ் ஆரவாரமற்றது. திட்ப நுட்பம் சான்றது.

அருமையான தமிழ்ச்சொல் ஒன்றிருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பாருண்டோ?
– அலையும் கலையும், ப. 32.

என்ற வினா, இவர்தம் தமிழ் ஆர்வத்தை அன்றோ புலப்படுத்துகின்றது.

6. இவர்தம் நடையில் எதுகையும் மோனையும் மிகுதியாக இடம் பெறும். சான்றாகப் பின்வரும் பகுதியைப் காட்டலாம்.

“காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம்மருங்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா!” என்று கைகூப்பித் தொழுவோரும், “கஞ்சி வரதப்பா!” என்று கசிந்துருகி நிற்பாரும எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒரு மாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர்.”
– ஆற்றங்கரையினிலே. ப. 9.

7. பழந்தமிழ் இலக்கிய நூலின் கருப்பொருளை நுட்பமாக ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை எளியோரும் எளிதில் உணரும்வண்ணம் திட்பமாகக் கூறும் பாங்கினை இவர் நடையில் காணலாம்.

8. முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றும் திறத்தினையும் இவர் நடையில் காணமுடிகிறது.

9. ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அளவறிந்து மேற்கோளாகக் காட்டும் நோக்கினையும் உடையதாக அமைகிறது.

10. அழகு தமிழினை மட்டுமின்றிப் பழகு தமிழின் இனிமையையும் காணலாம். இலக்கியச் சுவையும், ஆராய்ச்சிக் குறிப்புகளும், அனுபவ உண்மைகளும் ஆங்காங்கே இணைந்து படிப்போர் நெஞ்சத்தில் தமிழின் இனிமையைப் பதிக்கும் உயர் நடை இவர் நடை.

11. இவர்தம் உரைநடைத் தமிழுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் ஆகும்.

12. தமிழ் மொழியின் சொல் வளத்தினை—அதன் பெருமையை அருமையை அறிவிக்கும் உயர்ந்த நடை இவர் நடை.

13. சொல்லொடு சொல்லையும் கருத்தொடு கருத்தையும் ஒப்புநோக்கிச் சுவையையும் பயனையும் இணைக்கும் உன்னத நடை

14. பேராசிரியரின் உரைநடை பயிலுவோர் உள்ளத்தில் தமிழார்வத்தைப் பெருக்கெடுக்க வைப்பது. சேதுப்பிள்ளை அவர்கள் காலத்தில் தமிழார்வம் குறிப்பிடத் தக்க (அல்லது) பாராட்டும் அளவில் இல்லை. ஆயின் அதனைத் தட்டி எழுப்பி அந்த ஆர்வத்தை வளர்த்த பெருமை சேதுப்பிள்ளையின் நடைக்கு உண்டு.

15. தக்க இலக்கியச் சொற்களையும் வழக்குச் சொற் றொடர்களையும் மணிமிடை பவளம் போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால் இவர்தம் நடை படிப்பவரின் தமிழ் உரைநடைத் திறத்தை உயர்த்தியது. தனித்தமிழின் இனிமை யையும் ஏற்றத்தையும் நிலைபெறச் செய்தது. தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

கொடை வள்ளல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்ற ஒரு நிலை இருந்தது. இந்நிலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் சேதுப் பிள்ளை.

அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குத் தனித்தனியே இருபத்தையாயிரம் வெண்பொற்காசுகள் வழங்கினார். இதன்படி ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங்களில் தமிழ் இலக்கியம், சமயம் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். வட்டித் தொகையாக வரும் ஆயிரத்தில் ஒரு பாதி சொற்பொழிவாளருக்கும் மறுபாதி பொழிவை நூலாக்கவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டார். இராசவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு 2000 வெண்பொற்காசுகள் வழங்கினார். அக்கோயிலின் குடமுழக்கு விழா நாளில் எண்ணுாறு வெண்பொன் மதிப்புள்ள பெருமனி ஒன்றை வாங்கிக் கோவிலின் முன் மண்டபத்தில் தொங்கவிட்டார்.

திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்குப், பின்னாளில் தம் நூல்களுக்கு வரும் வருவாய்த் தொகையை எழுதி வைத்தார்.

பெற்ற சிறப்புகள்

1. ‘தமிழகம்—ஊரும் பேரும்’ என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசாக ஐந்நூறு வெண்பொற்காக களைப் பெற்றார்.

2. ‘தமிழின்பம்’ நூலுக்காக மத்திய அரசிடம் ஐயாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார்.

3. 1950ஆம் ஆண்டின் தருமபுர ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப் பெற்றார்.

4. 1957இல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் ‘இலக்கியப் பேரறிஞர்’ (டி.லிட்) என்ற பட்டம் வழங்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.

5. 1961இல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் வெள்ளி விழாக் கண்டார். வெள்ளிவிழாத் தலைவர் இரா.பி.சே. அவர்களின் திருவுருவப் படத்தை அன்று திறந்து வைத்தார். வெள்ளிவிழா நினைவு மலர் ஒன்று முனைவர் தனிநாயக அடிகள் அவர்களால் வெளியிடப்பெற்றது.

6. தம் அறுபத்தைந்தாவது வயதுவரை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்ற சேதுப்பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளாக இணையிலாத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். அவர் விளம்பரத்தை விரும்பாமல் கடமையுணர்ச்சியுடன் பலருடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவராக அரிய பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியிடத்து அளவிறந்த பற்றுப் பூண்டவர். எனினும் பிறமொழிகளைச் சிறிதும் வெறுப்பவரல்லர். இஃது இவரிடம் விளங்கும் மிகவும் போற்றத்தக்க அம்சம். அவர் தமக்காகவோ தம்மைச் சார்ந்தவருக்காகவோ என்பால் உதவி நாடி எந்த நாளும் வந்ததில்லை.”

என்னும் துணைவேந்தரின் உரை, இவர்தம் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.

பண்பு நலன்கள்

1. இறையுணர்வு மிக்கவர்-சைவரான இவர் தஞ்சை நாட்டு அன்னப்பன் பேட்டைத் திருமடத் தலைவராய் விளங்கிய சபாபதி தாயுமானவர் என்பவரிடம் சைவ சமய தீக்கை பெற்றுத் தாம் ஒர் உண்மைச் சைவர் என்பதை உ ண்மைப்படுத்தினார்.

2. செப்பறை அடிகளார் சிவஞான தேசிகர், திருமணம் செல்வகேசவ முதலியார் இவர்களைச் சிந்தை மறவாத தன்மையினால் குருபக்தி மிக்கவர் என்பது புலனாகிறது.

3. அன்னை சொர்ணம்மாள் பெயரில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியதால், தாயிடம் இவர் கொண்ட அன்பும் மதிப்பும் புலனாகின்றன.

4. தாய்மொழிப் பற்று மிக்கவர். நாட்டுப்பற்றும் மிக்கவர்.

தமிழுக்கு ஒரு நல்லது என்றால் அவர் உடலிலே தெம்பு, முகத்திலே உவகை; தமிழுக்கு ஓர் இடையூறு என்றால் அவர் உடலிலே தளர்ச்சி, முகத்திலே கவலை இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்.

என்ற மு.வ. அவர்களின் போற்றுதல் மொழி இவர்தம் தமிழ்மொழிப் பற்றின் மேன்மையை அறிவுறுத்துகின்றது.

மறைவு

தமிழுக்காக வாழ்ந்து தமிழ் உலகிற்குச் சீரும் சிறப்பும் தேடித்தந்த இரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள், 1961ஆம் ஆண்டு வெள்ளிவிழாக்கண்ட பன்னிரண்டாம் நாள் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் எய்தினார்.

நிறைவுரை

இவ்வாறாக இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றமும் வீறும் உடையதாகத் துலங்கச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியும், நூல்கள் வழங்கியும், கட்டுரைகள் எழுதியும், ஆய்வுக்கு வழிகாட்டியும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு சொற்களால் வடித்துக்கூற இயலாச் சீர்மை வாய்ந்ததாக விளங்குகின்றது.

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்