தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910)

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகியோரைப் பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் படித்த அவர் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.
தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.
எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சி, இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள். திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் – தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும். தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன், குறள்நெறி ஆகிய ஆங்கில இதழ்களையும் நடத்தியுள்ளார். தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத் தலைவராக, முதல்வரலாகப் பரிணமித்தவர்.

திருவாரூரில் தமிழாசிரியராய்ப் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் கலைஞர் .தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப் பிட்டுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழுவின்(அகாடமிக் கவுன்சில்) உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித்தவர்.

“தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும்.” தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டில் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி 26.01.1953 இல் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது.

“தமிழ்நாட்டின் உணர்வுக்கும் தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர்” என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இலக்கு வனார் பிறந்த நாள் இன்று!

  • விடுதலை நாள் 17.11.2023