ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12 – 14 நாடக சம்பந்தமான நூல்கள்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது-தொடர்ச்சி)
12. நாடக சம்பந்தமான நூல்கள்
கீத மஞ்சரி :— நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுகள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.
நாடகத்தமிழ் :— இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காகச் சென்னை சருவகலாசாலையார் எனக்கு உரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருடம் அச்சிட்டேன்.
நாடக மேடை நினைவுகள்:– ஆறு பாகம் எழுதியது 1927-36 இவற்றை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.
நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:— நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருடம் அச்சிட்டேன்.
தமிழ் பேசும் படம்:– இதை 1937-ஆம் வருடம் அச்சிட் டேன்.
பேசும் பட அனுபவங்கள்:– இதை 1938-ஆம் வருடம் அச்சிட்டேன்.
கதைகள் வியாசங்கள் முதலியன:– (1) தீட்சிதர் கதைகள் (2) ஃகாசிய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஃகாசியக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.
————–
13. மத சம்பந்தமான நூல்கள்
சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்:– சிறு வயது முதல் ‘சிவாலய பயித்தியம்’ எனக்குண்டு. ஏறக்குறைய 4000 சிவாலயங்களைப் பற்றி பல ஆண்டுகளாக தொடுத்து 1945-ஆம் வருடம் முதல் 4 பாகங்களை அச்சிட்டேன். 5 ஆம் பாகம் 1948-ஆம் வருடம் அச்சிடப்பட்டது.
சிவாலய சிற்பங்கள்:– இதை 1946-ஆம் வருடம் அச்சிட் டேன். இதை அச்சிடுவதில் தமிழ் மொழிக்காக எப்பொழுதும் உதவி செய்து வரும் சிரீலசிரீ காசி அருணா நந்தித் தம்பிரான் சுவாமிகள், திருப்பனன் தாள் ஆதினம் பண்டார சந்நிதி அவர்கள் உரூபாய் 500 பொருளுதவி செய்தார்கள். இந்நன்றியை நான் என்றும் மறக்க முடியாது.
சுப்பிரமணியர் ஆலயங்கள்:– இந்நூலைச் சிவாலயங்களி னின்றும் வேறாக அச்சிட்டதற்குக் காரணம் இந்நூல் முகவுரையில் எழுதியுள்ளேன். இம் மூன்றையும் படங்களுடன் அச்சிடாதது பெருங்குறையாம். இக்குறை என் ஆயுள் முடியு முன் இறைவன் அருள் நிறைவேற்றி வைக்குமாக.
————-
14. மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்
1. காலக் குறிப்புகள்:— நான் சிறு எழுத்தாள்னாக வேண்டுமென்று தீர்மானித்த பிறகு எனக்கு உபயோகப்படும் படியான பல காலக் குறிப்புகளை குறித்து வந்தேன். அவை மற்ற நூலாசிரியர்களுக்கும் உபயோகப்படும் என்று நினைத்து 1947-ஆம் வருடம் அச்சிட்டேன்.
2. சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்:– மேற் கண்டபடியே என் சொந்த உபயோகத்திற்காகச் சிறு வயது முதல் உணவுப் பொருள்களின் குணங்களைக் குறித்து வந்தேன். தாயுமானவர் “வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டது அவலமாய் போதல் நன்றோ” என்று கூறியபடி இவை மற்றவர்களுக்கு உபயோகப்படக் கூடும் என்று எண்ணி இதை 1948-ஆம் வருடம் அச்சிட்டேன்.
நான் ஒரு எழுத்தாளனாகி 1942-ஆம் வருடம் வரையில் என் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு கட்டமுமில்லை என்றே கூறவேண்டும். அதற்கப்புறம் நான் பல கடினங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவை பெரும்பாலும் இரண்டாவது உலக யுத்தத்தினால் நேர்ந்தவையென்றே சொல்லலாம். அவற்றில் சிலவற்றை இங்குத் தெரிவிக்கிறேன். முதலாவது 1942-ஆம் வருடம் பட்டணத்தைவிட்டு மைசூருக்கு குடும்பத்துடன் ஓடிப்போக வேண்டிவந்தபடியால் அதுவரையில் வருடா வருடம் சில புத்தகங்களையாவது அச்சிடும் பழக்கம் தடைப்பட்டது. இரண்டாவது அதுவரையில் என் புத்தகங்களை அச்சிட்டுக்கொண்டிருந்த டௌடன் நிறுவனத்தை வாங்கின பியர்லெசு பிரசு என்னும் அச்சுக்கூடம் எடுபட்டுப்போக, பிறகு என் நூல்களைப் பல அச்சுக்கூடங்களுக்குப்போய், வேண்டி அச்சிடவேண்டியதாயிற்று. மூன்றாவது என் நூல்களை அச்சிட காகிதம் கிடைக்காமற் போனது. காகிதக் கட்டுப்பாட்டாளர் (கண்டிரோலர்) அவர்களுக்கு எனக்கு காகிதம் வேண்டுமென்று மனு கொடுத்தால் “நீ அச்சிடும் புத்தகங்கள் பெரும்பாலும் நாடகங்கள் தானே. அவற்றைக் காகித நெருக்கடி சமயத்தில் அச்சிடவேண்டிய நிமித்தமில்லை” என்று காகித ஒதுக்கீடு (கோட்டா) கொடுக்க மறுத்துவிட்டார். கறுப்புச் சந்தையில் அதிகவிலை கொடுத்து காகிதம் வாங்கவேண்டியதாயிற்று. நான்காவது தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தால் இரண்டு மூன்று மாதங்களில் அச்சிடும் புத்தகங்கள் 6 மாதத்திற்கு மேல் காலம் பிடித்தது. அச்சிட்டு வெளி வர. ஐந்தாவது அச்சுக் கூலியும் அதிகப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் சராசரி ஒரு பாரத்திற்கு 4 உரூபாய் கொடுத்தது போக தற்காலம் ஏறக்குறைய அதற்கு 4 மடங்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கிறேன். காகிதத்தின் விலையும் அதிகப் பட்டதென்று நான் எழுதவேண்டியதில்லை. இதன் பயனாக என் நூல்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று.
மேற்கண்ட துன்பங்களையெல்லாம்விட நான் தற்காலம் அநுபவிக்கும் பெருந்துன்பமென்ன வென்றால் என் கண் பார்வை மட்டிட்டு வருவதேயாம். இது என் வயதின் கொடுமையாம் எனக்கு நாற்பதாம் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேசுவரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புத்தகங்களின் (Proof) பிழை திருத்தங்களைச் சரியாகக் கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
Leave a Reply