(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. நாடகக் கலை … சிறுதொண்டுகள் (1) தொடர்ச்சி)

என் சுய சரிதை

நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

13–3–49 விக்குடோரியா பொது அரங்கில் (Public Hall) இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. விக்குடோரியா பொது அரங்கில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது.

24-4-49, அன்று விக்குடோரியா பொது அரங்கில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஃகரி’யை நடத்தினார்கள். அப்பொழுது அதில் நடித்த முக்கிய நடிகர்களின் வேண்டுகோளின்படி மூன்றாவது காட்சியில் சந்திரஃகரி அரசன் அரசவையில்(தர்பாரில்) ஓர் சேவகனாக நடித்தேன்.

14-8-49-இல் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் முதலிய இந்துமத சம்பந்தமானவற்றிற்காக இராயபுரம் நாடக சபையார்கள் விக்குடோரியா பொது அரங்கில் ‘நந்தன் சாம்பன்’ என்னும் தமிழ் நாடகத்தை நடத்தியபோது தலைமை வகித்தேன்.

இவ்வருடம் செட்டம்பர் மாதம் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் சிறந்த நாடகங்களுக்குப் பரிசு அளிப்பதற்காக ஏற்படுத்திய நாடகப் போட்டியில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 13 நாடகங்களைப் பரிசோதித்து சிறந்த நாடகத்தை தேர்ந்தெடுப்பதற்காக என்னைப் பரிசோதகனாக ஏற்படுத்திய காரியத்தைச் செட்டம்பர் 20-ஆந்தேதிக்குள் முடித்தேன்.

1949-திசம்பர் 30-ஆந்தேதி சென்னபுரி ஆந்திர மகாசபை நடத்திய ‘நாடக கலா பரிச’த்தில் இரண்டாம் நாள் விக்குடோரியா பொது அரங்கில் 9 மணிக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட படியால் தலைமை வகித்து ‘ஒரு நாடகத்தை எப்படி நடத்துவது’ என்றும் விசயத்தைப்பற்றிப் பேசினேன்.

1950 பிப்பிரவரி 25 சாயங்காலம் 5-30 மணிக்கு மதுரை தியாகராயர் கல்லூரியில் மாணவர் சங்கக் கூட்டத்தில் தமிழில் பிரசங்கம் செய்தேன். அங்கு நடந்த வேடப் போட்டியில் நடுவராக இருந்து பரிசு வழங்கினேன். தியாகராயர் வேண்டு கோளின்படி.

1950- பிப்ரவரி 25 காலை மாலை மதுரை பண்பாட்டு அவையில்(culture league) ‘தமிழ் நாடகம் முற்காலத்திலும் தற்காலத்திலும்’ என்பதைப் பற்றி 45 நிமிடம் பிரசங்கம் செய்தேன். பிறகு உடனே பொழுதுபோக்க மன்றத்திற்கு(ரெக்ரியேசன் கிளப்புக்கு)ப் போய் அவர்கள் நாடகப் பிரிவைக் குறித்து சிறு சொற்பொழிவு செய்தேன். 1950 மார்ச்சு 4ஆந் தேதி திருவிடந்தைக்கு மது விலக்கு சங்கத்தாருடன் போயிருந்த போது ‘வத்சலாஃகரம்’ ன்னும் தெருக் கூத்து நடந்தது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் அதைப் பார்த்து சிரீமான் அப்பாதுரை பிள்ளை அவர்கள் ஏற்படுத்திய வெள்ளிக் கோப்பையை அதில் மிகவும் நன்றாய் நடித்த நடிகனுக்கு கொடுக்கும்படி கேட்டனர். அதில் இரண்டு மூன்று பெயர் நன்றாக நடித்த படியால் பொதுவில் அவர்கள் நிறுவனத்திற்கு (அச்சிறு பாக்கம் கம்பெனிக்கு) அளித்தேன். 1950 ஏப்பிரல் தொண்டை மண்டலப் பள்ளியில் காலஞ் சென்ற மனோன்மணியம் நாடக ஆசிரியராகிய திரு. சுந்தரம் பிள்ளை அவர்களுடைய உருவப் படத்தைச் சேது பிள்ளை அவர்கள் தலைமையில் திரு. சிவஞான கிராமணியார் திறந்து வைத்த போது சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு சிற்சொற்பொழிவு செய்தேன். 11-7-1958 சென்னை தமிழ் நாடகக் கழகத்தினர் சார்பாக சட்டசபை பிரதம மந்திரியாகிய கனம் குமாரசாமி இராசா அவர்களிடம் நாடகங்களுக்கு வினோத வரியை (Entertainment tax) எடுத்து விடவேண்டு மென்று ஒரு தூதுக் குழு சென்ற போது நாம் அவர்களுள் ஒருவனாக சென்று கோட்டையில் அமைச்சரைக் கண்டு அரைமணி சாவகாசம் அதைப் பற்றிய காரணங்களையும் நியாயங்களையும் எடுத்துப் பேசினேன்.

31-12-1950 இல் மேற்கண்ட சங்கத்தார் திரைப்படக் குழுவில் சென்னைக்கு வந்து திருமதி சாந்தா ஆப்தே அவர்களுக்குக் கொடுத்த தேநீர் விருந்தில் நாடகக் கலையானது இந்தியத் தேசம் முழுவதையும் ஒன்று படுத்தக் கூடிய காரணங்களில் ஒரு முக்கியமானது என்பதைப் பற்றி பேசினேன். 1950 அட்டோபர் 18ஆந் தேதி சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘சபாபதி நான்காம் பாகம்’ போட்டபோது வேலைக்கார சபாபதியாக நடித்தேன். மேற்படி வருடம் 20, 30 தேதிகளில் நந்த விசயம் எனும் சிறுமிகள் பள்ளியின் இரண்டாம் வருடக் கொண்டாட்டத்தில் தலைவனாக இருந்து சில வார்த்தைகள் பேசினேன்.

1950 நவம்பர் 10 நாடகக் கழகத்தார் காலஞ்சென்ற சியார்சு பெர்னாட்சா அவர்கள் மரணத்திற்காக அனுதாபக் கூட்டம் கூடிய போது நான் அவரைப் பற்றிப் பேசினேன்.

1950 நவம்பர் 22 இந்து மதுவிலக்கு சங்கத்தில் இன்று நடிப்புக்கலை போட்டி நடந்த போது அதில் நான் பங்கெடுத்துக் கொண்டு ‘அமலாதித்யனும் அபலையும்’ என்னும் காட்சியில் நடித்து ஈசன் கருணையினால் பரிசு பெற்றேன்.

1951 பிப்பிரவரி மாதம் ஒரு நாள் புதிதாய் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ் பொழுதுபோக்கு (amateur) நாடக சபையின் முதல் நாடகத்திற்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை மறுக்க மனமில்லாதவனாய் ஒப்புக்கொண்டு நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நடிகர்கள் என்னவோ சுமாராக நன்றாய் நடித்தனர் என்றேதான் கூற வேண்டும். ஆயினும் நாடகம் எழுதப்பட்டது மாத்திரம் என் மனதிற்கு அதிருப்தியைத் தந்தது. ஒரு உதாரணத்தை இங்கு எழுது கிறேன். ஒரு முக்கிய நாடகப் பாத்திரம் தன் சகோதரர் மரித்ததாக செய்தி வருகிறது. அதைக் கேட்டவுடன் அந்த நடிகர் உடனே ‘கொலு கோவில் ‘ சங்கீதம் அப்பியசிக்கிறார்! இதில் விந்தை என்னவென்றால் இவர்தான் அன்று நடந்த நாடகத்தை எழுதினவராம். இதைக் கேட்டவுடன் கொஞ்சம் நேரம் இருந்து விட்டு ஏதோ ஒரு சாக்கைச் சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டேன். இந்த நாடகத்திலிருந்து போய் இக்காலங்களில் எழுதப்படும் நாடகங்களின் சில காட்சிகள் நான்கு ஐந்து வரி சம்பாசணைகளையுடையனவாயிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களில் நடிக்கப்படும் நாடகங்கள் போலும், நாடக மேடை நாடகங்கள் விருத்தியடைய வேண்டுமென்றால் இம்முறையானது முற்றிலும் மாற்றப்பட வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

1957 மார்ச்சு 15 சென்னை நாடகக் கழகத்தார் வினோத வரியை (Entertainment tax) இரண்டு வருடங்கள் நாடக சபைகளுக்கு நீக்கிய கனம் கோபால் ரெட்டி அவர்களுக்கு தேநீர் விருந்து ஒன்று மெய்யப்பச் செட்டியார் செய்து அதில் என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, ஒப்புக் கொண்டு அக் கூட்டத்தில் கனம் கோபால் ரெட்டியாருக்கு வந்தனம் அளித்த போது தமிழ் நாடகத்திற்கு அவர் செய்த இந்த உபகாரத்திற்காக வந்தனம் தெரிவித்தேன்.

இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 15ஆந் தேதி வினோதமாக நாடகம் ஆடும் ஒரு சபையின் வருடாந்திர கொண்டாட்டத்தில் ஆடிய ‘அந்தமான் கைதி’ என்னும் நாடகத்திற்கு தலைமை வகிக்க இசைந்து சாயங்காலம் 6 மணிக்குப் போனேன். 9 மணி வரையில் சிறு நாடக சாலையில் கடினத்துடன் 3 மணி சாவகாசம் இருந்து நாடகத்தைக் கண்ணுற்றேன். நாடகம் மிகவும் நன்றாய் ஆடப்பட்டது. நாடகத்தின் முடிவில் நடிகர்களைப் புகழ்ந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தினேன். இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 29ஆந் தேதி அருங்காட்சியக(மியூசியம்) நாடக சாலையில் ‘இசுடான்டர்டு ஆயில் கம்பெனி ரெக்ரியேசன் கிளப்பார்’ இராணி என்னும் ஓர் சமூக நாடகத்தை நடத்தினார்கள். அதன் அரங்கேற்றுதலுக்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, நான் இசைந்து முதலிருந்து கடைசிவரை இருந்து நாடகத்தைப் பார்த்து சந்தோசப்பட்டேன். கதையை ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருவர். அதற்குத் தமிழில் தக்கபடி வசனங்கள் அமைத்தவர் மற்றொருவர். பாட்டுக்களை எழுதியவர் ஒருவர். இச்சமூக நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. நாடக முடிவில் பல வார்த்தைகள் பேசினேன். நாடகக் கலைக்கு ஊழியம் செய்யப் பல புதிய இளைஞர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்று அவ்வளவு உறுதியாக நம்பும்படியாகச் சிறந்த முறையில் நாடகத்தை நடத்தினார்கள்.

1951 ஆகட்டு, செட்டம்பர் மாதங்களில் சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தார் தாங்கள் ஏற்படுத்திய நாடகப் புத்தகப் போட்டியில் அனுப்பப்பட்ட புத்தகங்களை அனுப்பி அவற்றில் சிறந்தவற்றைப் பரிசுக்காக தேர்ந்தெடுக்க என்னை ஓர் நடுவராக இருக்கும்படி கேட்க அதற்கிணங்கி அனுப்பப்பட்ட சுமார் 29 நாடகங்களை என் துன்பத்தையும் பாராமல் பரிசோதித்துப் பார்த்து என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு தெரிவித்தேன்.

7-10-51-இல் இலட்சுமி நாடக சபையாரால் மைலாப்பூரில் ‘அரசிளங்குமரி’ என்னும் தமிழ் நாடகம் நடத்தப்பட்டது. அதற்கு நான் தலைமை வகிக்க முன்பே ஒப்புக்கொண்டபடியால் அன்றைத்தினம் என் தேக அசௌக்கியம் குன்றியிருந்த் போதிலும் 9 மணி வரையில் பார்த்துக் கடைசியில் அவர்களுக்கு உற்சாக மூட்ட சில வார்த்தைகள் பேசி வீட்டிற்குத் திரும்பி னேன். உடனே சுரத்தால் பீடிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து பதினைந்து தினங்கள் துன்பப்பட்டேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை