(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3 – சி. பா. தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3


தமிழ்க் குடும்பம்

அடிகளாரின் குடும்பம் பெரியது. அடிகள் துறவு நிலையைடைந்தாலும் மனைவி மக்களை விட்டுப் பிரியவில்லை. அடிகள் மேற்கொண்டது. சமுதாயத்தில் கடமைகளைச் செய்து கொண்டே அதன் பலனில் பற்று வைக்காத உயர்ந்த இல்லறத் துறவு நிலையாகும். அடிகளாரின் இல்லத் துணைவியார் சவுந்தரவல்லி அம்மையார் மனைத் தக்க மாண்புடையவர். இவ் இருவருக்கும் முறையே 1894இல் சிந்தாமணி என்ற பெண் மகவும், 1903இல் நீலாம்பிகை என்ற பெண் மகவும், 1904இல் திருஞான சம்பந்தன், 1906இல் மாணிக்கவாசகன், 1907இல் திருநாவுக்கரசு. 1909இல் சுந்தரமூர்த்தி என்னும் ஆண் மக்களும், 1911இல் திரிபுரசுந்தரி என்ற பெண்மகவும் பிறந்தனர்.

இலங்கைப் பயணம்

அடிகளாரின் சொற்பொழிவுத் திறன் இலங்கையிலும் ஒலிக்கத் தொடங்கியது. 1914 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன் முறையாகக் கொழும்பிற்குச் சென்றார் அடிகள். அவர்தம் சொற்பொழிவு இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடிகளுக்குப் பெரும் பொருளும் கிடைத்தது. இலங்கைப் பயணத்தினால் அடிகளுக்குக் கிடைத்த மிகப் பெருஞ் செல்வம் திருவரங்கனாரின் நட்பாகும். பின்னாளில் அடிகளாரின் மகளார் நீலாம்பிகையாரை மனந்தவரும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய பெருமைக்குரியவரும் இத் திருவரங்கனாரே யாவர். இரண்டாம் முறையாக 1917 ஆம் ஆண்டு மேத்திங்கள் கொழும்புக்குச் சென்றார். மூன்றாம் முறையாக 16-12-1921 இல் கொழும்பு சென்று பல்வேறு இடங்களில் சொற்பொழி-வாற்றிவிட்டு 20-1-1922இல் பல்லாவரம் திரும்பினார்.

இலங்கை சென்று, சொற்பொழிவின் மூலம் திரட்டி வந்த பெரும் பொருளும், தமிழ் நாட்டில் சொற்பொழிவின் மூலம் கிடைத்த பொருளும் சேர்ந்து பொது நிலைக் கழக மாளிகையாக உருவாயிற்று. பொதுநிலைக் கழகத்தின் இருபதாண்டு நிறைவு விழா 1931 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் கொண்டாடப்பெற்றது. பொது நிலைக் கழக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அவ் விழாப் பேரவையில் முடிவு செய்த பல சீர்த்திருத்தங்கள், அடிகளாரின் சீர்திருத்த மனப்பான்மையைக் காட்டும். அடிகளாரின் சமய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் பின் வருமாறு :

1. மடத்தலைவர்கள் எல்லாக் குலததவர்க்கும வேற்றுமையின்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடஞ்செய்தல் வேண்டும்.

3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லாரையும் தூய்மையாகத் திருகோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும், கோயில் தலைவர்களும் இடந்தரல் வேண்டும்.

4. கோயில்களிற் பொதுமாதர் திருப்பணி செய்தல் கூடாது.

5. வேண்டப்படாதனவும், பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும், அறிவுக்குப் பொருத்த மற்றனவும் ஆகிய திருவிழாக்களையும். சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது; தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.

6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

7. கைம்பெண்களைத் தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவை யுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும், நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

8. சாதிக் கலப்புமணம் வரவேற்கத்தக்கது.

9. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.

நூல்கள்

அடிகளாரின் எழுத்துப்பணி, தமிழ் இலக்கியத்தில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது. சமயம், தமிழாராய்ச்சி, நாடகம், நாவல் போன்ற பல்வேறு துறைகளிலும் தம் ஆளுமையைச் செலுத்தியவர் அடிகள். “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை.” “சைவசித்தாந்த ஞான போதம்.” அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை,” “சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை” என்பன சமய நூல்களாகும். “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்,” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்,” “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா,” “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்,” “தமிழர் மதம்,” “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்,” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி,” “முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை,” “பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை,” “வேளாளர் நாகரிகம்,” “இந்தி பொது மொழியா,” “சிந்தனைக் கட்டுரைகள்” முதலியன அவர்தம் ஆராய்ச்சி நூல்களாகும்.

“கோகிலாம்பாள் கடிதங்கள்,” “குமுதவல்லி அல்லது நாக நாட்டரசி,” “சாகுந்தலம்” ஆகிய படைப்பிலக்கியங்களும், “தொலைவில் உணர்தல்,” “பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்” ஆகிய அறிவியல் நூல்களும் தமிழுக்கு வளம் சேர்த்தவையாகும்.

இறுதி வாழ்க்கை

அடிகள் இறுதிக் காலத்தில் பொதுநிலைக் கழக ஆசிரியராகவும். மற்றும் பல்வேறு நூல்களின் ஆசிரியராகவும், கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும் சிறப்புற வாழ்ந்தனர். இவற்றிலிருந்து கிடைத்த வருவாயே அடிகளின் குடும்பச் செலவிற்குப் பயன்பட்டது.

எழுத்தாலும், பேச்சாலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த அடிகளின் வாழ்வு 15-9-1950 ஆம் நாள் மாலை 3-30 மணிக்கு முடிவுற்றது. அடிகளின் தனித் தமிழ்ச் சிந்தனையும், அகன்ற ஆராய்ச்சிப் புலமையும், அழகு நடையும் இன்றும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்று ஒளிவீசி வருதலைக் காண்கிறோம்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்