6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 3/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-2/6 – சி.பா. தொடர்ச்சி)
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 3/6
இந்தி எதிர்ப்புப் போர்
1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற இராச கோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து மாநில மெங்கும் கிளர்ச்சி யெழுந்தது. காங்கிரசுக் கட்சியில் தமிழ் மொழிப் பற்றுத் தலைதூக்கி நின்ற சிலரும் இத்திட்டத்தை முழு மூச்சாக எதிர்த்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களுள் தலைமையேற்று நின்றவரும், தகவுடன் போரிட்டுப் பின்னாளில் வென்றவரும் நம் நாவலர் ஆவர். 5, 6-9-1937 இல் சென்னை மாநகரில் ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நிகழ்ந்தது. முதல்நாள் மாநாட்டுக் கூட்டத்திற்கு நாவலர் தலைமை தாங்கிச் சாதி, சமய, கட்சி வேறுபாடு இன்றித் தமிழர் அனைவரும் கட்டாய இந்தியை எதிர்ப்பது கடமையாகும் என்றார். அடுத்து 4-10-1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகச் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் வீறுடன் பேசினார். 20-11-1937இல் கருவூரில் அறிவுதயக் கழகச் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்திலும் பேசினார். 25-10-1937இல் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்கு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஒரு ‘வெளிப்படைக் கடிதம்’ (An open letter) எழுதினார். நாவலர் விடுத்த இக்கடிதத்தினாலும் நாடெங்கிலும் எழுந்த காட்டுத் தீ போன்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினாலும் அரசு கட்டாய இந்தித் திணிப்புத் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் மீண்டும் 1948 ஆம் ஆண்டில், சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி விங்கம் செட்டியார் இந்தியைப் புகுத்த முற்பட்டார். அவருக்கும் 27-6-1948இல் ஒரு கடிதம் எழுதினார். மேலும் திருச்சி தமிழறிஞர் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கண்ட தமிழர் கழகத்தின் தலைவரானார். 14-2-1948இல் சென்னையில் கூடிய அகிலத் தமிழர் மாநாட்டின் தலைமையை நாவலர் ஏற்றார். பின்னாளில் தொடங்கப்பெற்ற தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராகவும் திகழ்ந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக அரும்பணி
அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கண்ட செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை அரசர் அழைப்பின் பேரில் திங்கள் ஒன்றுக்கு ஈராயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்துக் குறைந்த வருவாயே கிட்டும் எனத் தெரிந்தும் 1933ஆம் ஆண்டில் இரண்டு நிபந்தனைகளின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவர் விதித்த இரு நிபந்தனைகள் வருமாறு:
(1) தமது நிருவாகத்தில் எவரும் குறுக்கீடு செய்தல் கூடாது.
(2) பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிற பேராசிரியர்களைவிட உயர்ந்த ஊதியம் தருதல் வேண்டும்.
தமிழ்ப் பணி
மாணவர்க்கு இலக்கணமாயினும், இலக்கியமாயினும், இலக்கியத் திறனாய்வாயினும் பாங்குற ஐயந்திரி பிற்கிட மின்றி மாணவர் மனத்திற் பசுமரத்தாணியெனப் பதியும் வண்ணம் பாடஞ்சொல்லுதலில் நாவலர் வல்லவராயிருந்தார். மாணவர்களைத் தம் நண்பர்கள் போற் கருதி, நடத்தினார். இயற்றமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டே இசைத் தமிழ்த் தொண்டும் ஆற்றினார். தேவார திருப்புகழ் வகுப்புகளை அங்கு இசைக்கல்லூரியில் தொடங்கு வித்தார். இவ்வாறு மாட்சியுடன் தமிழ்ப்பணி புரிந்த நாவலர் 1938ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் கல்வி பயின்றோரிற் குறிப்பிடத் தக்கவர்கள் முனைவர் அ. சிதம்பரநாதன் (செட்டியார்), திருவாளர்கள் அ. ச. ஞானசம்பந்தன், க. வெள்ளைவாரணனார், பூ.ஆலாலசுந்தரஞ் (செட்டியார்), சி. ஆறுமுக (முதலியார்), இராசரத்தினம் அம்மையார், இராசமணி அம்மையார்,அ. மு. பரமசிவானந்தம், ப. சோதிமுத்து, ஆ, முத்துசிவன், எசு, உருத்திரபதி, பி. ஆர் மீனாட்சிசுந்தரம் முதலியோர் ஆவர்.
சுப்பிரமணிய பாரதியார் தொடர்பு
கவிஞர் பாரதியாரும் நாவலர் பாரதியாரும் பல வகைகளில் ஒற்றுமைப்பாடு உடையவர்கள், இருவரும் எட்டையபுரத்தினர்; இருவரும் கவிஞர்கள்; பாரதி பட்டம் பெற்றவர்கள்; ஒத்த வயதினர்; இளமையில் மணம் முடித்தவர்கள்: நாட்டுத் தொண்டில் திளைத்தவர்கள்; உணர்ச்சி மிக எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர்கள்; அஞ்சாமையும் வீறும் உடையவர்கள்; தமிழாசிரியர் பணி புரிந்தவர்கள்.
பாரதியார் கவிதையைப் பண்டிதர்கள் எள்ளி நகையாடிய காலத்தில் பாரதியார் கவிதையின் நயத்தை மேடை, கட்டுரை, செய்தித்தாள்கள் வாயிலாகப் பாமரரும் புரிந்து கொண்டு பாராட்டவைத்த தனிப்பெருமை நம் நாவலரையே சேரும்.
“பாரதியார் பாக்கள், கருத்துகளை வருத்தமின்றி விளக்கும், பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண்பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்டமும் சுவையும் உடையன, இப்புலவரின் நூல்களைப் படிப்பவருக்கு நிகண்டு, அகராதிகள் வேண்டா. கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவனமும், தமிழில் ஆர்வமும் உடையார்க்கு இப்புலவர் இதயம் வெள்ளிடை மலையாம். எளிய இனிய இவர் கவிநடை நீரொழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று நிற்கும். பாப்பாப் பாட்டு. முரசு கவிகளால் முழன்று, பள்ளும் கிளிப்பாட்டும் பயின்று விடுதலை, தாய்நாடு பாடி, பாஞ்சாலி சபதம் கூறி, கண்ணன் பாட்டு சிவன் முக்திகளில் வீறிய இவர் கவிதை நலம் பண்ணேறி விண்ணுயர்ந்து உலவுவதாகும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவர் ஒத்தாரைக் காண்பதரிது. மிக்கார் இலராவர்,”
என்பதே நாவலர் மதிப்பீடாகும்.
(தொடரும்)
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
Leave a Reply