ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 3
பாலத்தீனத்துடனான வாணிகம்
கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலத்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இசுரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம். (Exod.xx) நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுளது. இந்தியாவிலிருந்து எகிப்து பெற்ற அனைத்துப் பண்டங்களும், பாலத்தீனத்திலும் இறக்குமதி செய்யப்பட்டன எனச் சிரமமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.
சீனாவுடனான வாணிகம்
சீன இலவங்கம், இந்தியக் கப்பற்பயணம் மூலம் அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளுக்கு வழி கண்டது என்றால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில், வாணிகப் போக்குவரவு இருந்திருக்க வேண்டும். இவ்வாணிகம் குறித்த எழுத்து மூல ஆவணங்கள் சில அழியாமல் உள்ளன. யுதிட்டிரர் பெற்ற திறைப்பொருள்களுள் சீனாவிலிருந்து வந்த பட்டையும், குறிப்பிடுகிறது, மகாபாரதம். (சீன கமுத்துபவன் அவுர்னம் – மகாபாரதம் – 2:51:1843) சீன நாட்டு வரலாற்றுப் பதிவேடுகள், கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்திற்கு முன்னர், ஏறத்தாழ, கி.மு. 12 ஆம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்தில், மலாக்காவோடு கொண்டிருந்த கடற்பயணத்தைக் குறிப்பிடுகின்றன. (Scoff’s Periplus Page: 246). அதிலிருந்து மலேயா, இவ்வாணிகத்தின் பொருள் களஞ்சியமாக இருந்து வந்துளது. தமிழ்நாட்டில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பொருளாம் வெற்றிலை, தமிழர்களால் வரையறையின்றித் தின்னப்படுகிறது என்றாலும், ஆதியில் அஃது ஓர் உள்நாட்டுப் பொருளன்று. தமிழில், அதற்குப் பொருத்தமான, இயல்பான இயற்பெயர் இல்லை. அவிக்காமல் உண்ணக்கூடிய ஒரே இலையாக அது இருப்பதால், வெற்றிலை, அதாவது, வெறும் இலை எனச் செயற்கையாலான ஒரு பெயரினாலேயே, “அது குறிக்கப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் பெயர்கள், இடுகுறிப் பெயர், காரணப் பெயர் எனப் பிரித்து வழங்குவதில் காணலாம். பயன் குறித்த ஆய்வுக்கு என்னுடைய ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம் (Pre-Aryan Tamil Culture – page : 13-16) என்ற நூலைக் காண்க). பிற இந்திய மொழிகளிலும், பெரும்பாலும் மலேயா விலிருந்து வந்த அதன் நுழைவு கருதி, அப்பெயர் இடப்பட்டது என்பதைக் காட்டும் வகையில், அது, இலை என்றே அழைக்கப்படுகிறது. (வெற்றிலை உண்ணும் வழக்கத்திற்கான சில பழங்குறிப்புகள், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காணப்படு கின்றன. உண்டு முடித்த கணவனுக்குக் கண்ணகி, பாக்கோடு “கலந்த வெற்றிலை தந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. “உண்டு இனி திருந்த உயர் பேராளற்கு, அம்மென் தினாயலோடு அடைக்காய் ஈத்த” (கொலைக்களக்காதை 5455) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புகளை வைத்துக் கொள்வதற்காக, பல மடிப்புகள் உடையனவாகத் தைக்கப். பட்ட, இன்றும் வழக்கத்தில் இருக்கும் சிறிய பை, அடைப்பை என்ற பெயரில் ஆதி காலத்திலும் பழக்கத்தில் இருந்தது. பொன்னால் செய்யப்பட்ட அடைப்பை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுளது, “சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்” (ஊர்காண் காதை 128) அரசர் களையும், அரசர் நிகர் செல்வர்களையும், வெற்றிலை அடங்கிய பை ஏந்துவார் எனும் பொருளுடையதான, அடைப்பைக்காரர் என அழைக்கப்படும் பணியாளர் எப்போதும் சூழ்ந்து கிடப்பர். அப்பணியாளர் பாசவர் அதாவது, பச்சிலை எனும் பொருளுடையதான பாசு ஏந்துவார் என அழைக்கப்படுவர். அரசனைச் சூழ்ந்திருக்கும், எண்பேராயம் என அழைக்கப்படும் எண்மரில், அவரும் ஒருவராவர் “பாசவர், வாசவர்” – (சிலப்பதிகாரம் – இந்திர விழவூரெடுத்த காதை – 26).
சீனாவுடன் நடைபெற்ற தலையாய வாணிகம், தொடக்கத்தில் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டபட்டு, கற்கண்டுத்தூள் ஆகிய இவ்விரண்டில்தான். வேறு பண்டங்களின் உருவகப்படுத்தி விரித்த பெயர்களே, தமிழில், அவற்றின் பெயர்களாயின. பட்டு எனும் சொல் தொடக்கத்தில மடித்தல் எனும் பொருளுடையதாகவே, பலமுறை மடிக்கப்பட்டு, தோள் மீது அணிந்து கொள்ளும் ஆடை, பட்டு எனப்பட்டது. சீனாவிலிருந்து வந்த ஆடையும், அவ்வாறே மடித்து அணியப்பட்டதால் அப்பெயர் அதற்கும் நீண்டு விட்டது. சீனாவிலிருந்து வந்த ஒன்று எனும் பொருளில் அது சீனம் என்று அழைக்கப்படும். வடமொழியிலிருந்து கடன் வாங்கி வழங்கப்பெறும் சருக்கரை எனும் சொல், தொடக்கத்தில் மணல் எனும் பொருள் உடையது. கற்கண்டுத் தூள் மணல் போல் காட்சி அளிப்பதால், அப்பெயர், கற்கண்டுத் தூளுக்கும் இடப்பட்டுவிட்டது. தொடக்கத்தில் கரும்பு எனும் பொருளுடையதான அக்காரம் என்ற சொல், ஆகுபெயராக, அக்கரும்பிலிருந்து பெறப்படும் பொருள்களாம் வெல்லம் சருக்கரைக்கும் பெயராகி விட்டது. ‘சீனாவில் உற்பத்தியானது எனும் பொருளில் அது சீனி என்றும் அழைக்கப்படும். பட்டும், சருக்கரையும், தொடக்கத்தில், நறுமணப்புகை தருபொருள்கள், சிகப்புப் பவழம் (Costus), மிளகு ஆகிய இப்பண்டங்களுக்காக மாற்றிக் கொள்ளப்பட்டன. தென் இந்தியர் சீனாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையில் வணிக இடைத்தரகர்களாகவும் செயல்பட்டனர். வழக்கமான கடல்வழி, கோதன் (Khotan) வழியாகவே இருந்து வந்தது. ஆனால் அடிக்கடி நிகழ்வதுபோல், துருக்கிப் பழங்குடியினரின் திடீர்த்தாக்குதல்கள் காரணத்தால், வணிகப்பாதை, தெற்குக்கு மாறித்து, தமிழ்நாட்டுத் துறைமுகங்கள், மேற்கு ஆசியாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான சந்திக்கும் இடமாகிவிட்டன,
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Leave a Reply