(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457)

மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே!

பதவுரை:

மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம், துணையாகச் சேரும் கூட்டம், சேர்க்கை; நலம்=சிறப்பு; நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழையும்; தரும்=கொடுக்கும்.

“நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்” என்கிறார் பரிமேலழகர்.

அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர், “மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்” என்கிறார்.

அறிஞர் கா சுப்பிரமணியம், “மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்” என்கிறார்.

“மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்” என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.

இனச்சிறப்பினால் நற்பெயர் கிடைக்கிறது. இதன்வழி எல்லா வகைப் புகழும் கிடைக்கும்.  சிறுமைக் குணம் உடையவர்கள் சேர்க்கையை நீக்கி நற்பண்புடையவர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும்.

எல்லாப் புகழும் எனக் கூறுவதன் காரணம், எல்லா வகையான புகழும் கிடைக்கும் என்பதே. அஃதாவது நாம் ஆற்றும் நற்செயல்களால் கிடைக்கும் புகழ், நாம் வகிக்கும் பதவியால் வரும் புகழ், நமது அரசியல் நிலைப்பாட்டால் வரும் புகழ், நம் கல்வியால் வரும் புகழ், கொடையால் கிடைக்கும் புகழ்,ஈகையால் எய்தும் புகழ் எனப் பலவைகயிலும் நமக்கு வரக்கூடிய எல்லா வகைப் புகழையும் நாம் பெறலாம் என்பதை வலியுறுத்தவே

இனநலம் பேணும் போராளிகள் தங்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். மனநலமும் இனநலமும் நம்மிடையே இல்லாத காரணத்தால்தான் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் குடும்பத்தினரை இழக்கவும் உடைமைகளை இழக்கவும் நிலத்தைப் பறிகொடுக்கவும் காரணமாக இருந்து விட்டோம்.

எனவே, நமக்கு நல்லன விளையவேண்டு மென்றால், ஆக்கம் கிடைக்க வேண்டுமென்றால், செல்வம் சேர வேண்டுமென்றால், நல்ல மனத்துடன் திகழ வேண்டும். நன்மனம் இல்லையேல் எதிரான விளைவுகள்தான் நம்மைச் சேரும். அஃதாவது, செல்வம் சேராது, ஆக்கம் ஒட்டாது, நல்லன நிகழா. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நல்ல மனம் கொண்டவர்களுடன்தான் நட்பு வைத்திருக்க வேண்டும், உறவு கொள்ள வேண்டும், சேர்க்கை இருக்க வேண்டும். அவ்வாறு நற்சேர்க்கை இருந்தால்தான் நன்மை எய்தலாம், செல்வத்தில் செழிக்கலாம், உயர்வு அடையலாம், புகழுடன் வாழலாம்.

எனவே, ஆக்கத்தையும் புகழையும் எய்த

மனநலமும் இனநலமும் கொள்வோம்