கி.சிரீதரன் சொற்பொழிவு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு
தமிழ் மரபு அறக்கட்டளை
சொற்பொழிவு : கி.சிரீதரன்
தலைப்பு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு
தை 23, 2047 / பிப். 06, 2016
ஆர்.கே. மரபு மையம்Arkay Convention Center),
146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை,
மயிலாப்பூர், சென்னை 600 004
தலைப்பு பற்றி:
ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை அடங்கும்.
இந்தியாவில் தொல்லியல் ஆய்வு 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான்(1784) முதன்மை பெற்றது. 1862-இல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை தொடங்கப்பட்டது. 1901-இல் வயவர் சான் மார்சல் தலைமைப் பதவி ஏற்றபின் அரப்பா, மொகஞ்சதரோ, சாரநாத்து, நாளந்தா போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1944- இல் மார்டிமர் வீலர் தலைமையில் அறிவியல் முறைப்படியான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அரிக்கமேடு, பிரம்மகிரி போன்ற இடங்களில் இக்காலத்தில்தான் அகழாய்வுகள் நடந்தன.
தொல்லியல் ஆய்வுகளின்போது இந்திய வரலாற்றுக்கு அடிப்படையான பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கல்வெட்டு ஆய்வுக்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. ‘Epigraphica Indica‘, இந்தியக் கல்வெட்டு அறிக்கை, தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவை வெளியிடப்பட்டன.
இந்தப் பேச்சின்போது சிரீதரன், இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாற்றை விளக்குவார்.
பேச்சாளர் பற்றி:
1948-இல் பிறந்த கி. சிரீதரன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு-தொல்லியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழக மாநிலத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கொற்கை, கரூர், காஞ்சி, கங்கைகொண்ட சோழபுரம், கொடுமணல், மரக்காணம், ஆண்டிப்பட்டி, மோதூர், பரிக்குளம் ஆகிய இடங்களில் அகழ்வாய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
இவர் தொல்லியல் துறைக்காக எழுதிய புத்தகங்கள்:
தமிழ்நாடு கல்வெட்டுக்கள்,
கரூர் அகழ்வைப்பகம் – கையேடு,
இராசராசன் அகழ்வைப்பகம் – கையேடு,
கங்கை கொண்ட சோழபுரம் – கையேடு,
மரக்காணம் – அகழாய்வு அறிக்கை,
பரிக்குளம் – அகழாய்வு அறிக்கை.
இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில் இதழிலும் தமிழ் நாளிதழ்களிலும் கோயில்கள் குறித்தும் தல வரலாறுகள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் எழுதுவருகிறார்.
Leave a Reply