தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள் எனக்கு வரலாற்றுக் கொடைகள்!

தமிழீழத்தில் வங்கி அதிகாரியாக இருந்த கனகேந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இறங்கி ஈழவேந்தன் ஆனார். வேலையை இழந்தார். இலங்கையில் வாழ முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பாக உரையாற்றினார். நாங்கள் முன்மொழிந்த தன்னுரிமைத் தீர்மானத்தை ஆதரித்தார். பிராமணியம் குறித்து மறக்க முடியாத ஒரு கருத்தைச் சொன்னார். தமிழ்ச் சிவநெறியின் ஆன்மிகச் சான்றோர்களாகத் தடம் பதித்துள்ள திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. இத்தனைக்கும் ஞானசம்பந்தர் வடமா பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் என்றார்.

தமிழீழத்திற்கு சனநாயக வழிமுறைகளில் தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வந்த ஈழவேந்தன் அவர்களை, 2000ஆம் ஆண்டு திசம்பர் 4 அன்று, வாச்பாயி தலைமையிலான பா.ச.க. – தி.மு.க. கூட்டணி ஆட்சி, தமிழ்நாட்டை விட்டு – இலங்கைக்கு நாடு கடத்தியது. அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இலங்கைக்குச் சென்ற ஈழவேந்தன் அவர்கள், விடுதலைப்புலிகள் ஆதரவுடன் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தமிழீழத்தில் இயங்க முடியாத அளவுக்கு சிங்கள ஆதிக்க அரசின் கெடுபிடிகள் அவரை நெருக்கிய நிலையிலும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அவர் கனடா சென்று வாழ்ந்து வந்தார். அங்கு தமிழீழ விடுதலைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அங்கும் தனது இறுதிக் காலம் வரையிலும், முதுமையையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதியின், “பிம்சுடெக் பேரழிவில் தமிழர் தாயகங்கள்” நூலின் அறிமுக நிகழ்வு, 2019இல் கனடாவில் நடந்தபோது, அதில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

தமிழ்நாட்டின் தனித்தமிழ் – மொழியியல் அறிஞர் – பேராசிரியர் – முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள் ஈழவேந்தன் அவர்களின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் உள்ளார்கள்.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங்கி வாழாமல் தமிழினம், தமிழ் மொழி, தமிழீழம் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, இறுதிவரை ஈகவேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இல்லத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.  

 பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam ===============================