வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இலங்கை அரசுத் தலைவர் பொறுப்புத் துறப்பு!

பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

 நிலைமையின் முதன்மைத்துவம் கருதிப் பிரித்தானியத் தலைமயமைச்சரின்அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பொருண்மையைப் புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசின் செயலைக் கண்டிப்பதுடன் இலங்கை அரசினை  ‘பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்’ அல்லது அதற்கு நிகரான  ‘பன்னாட்டு நீதிப் பொறிமுறை’ ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையாக முன்வைத்து 29 சனவரி 2020அன்று 4 மணியிலிருந்து 7 மணி வரை பிரித்தானியத் தலைமயமைச்சரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), பல்வேறு புலம்பெயர் அமைப்புகள், பொதுமக்கள், இறுதி இனப்படுகொலைப் போரில் பல இன்னல்களைச் சந்தித்து சாட்சியாளர்களாக இருப்பவர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.

 11 வருடங்களின் முன் இதே நாளில் (29 சனவரி 2009) தன்னைத் தற்கொடையாக்கிய தமிழ்நாட்டு உறவு ஈகி முத்துகுமாரனின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 மாணவர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளருமான பொ. சத்தியசீலன உரையாற்றும் போது பிரித்தானியத் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்றுக் குழுமியிருந்த அனைத்து  அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழ் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக அமைய வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தக் காலக்கட்டத்திலேயே வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆயிரம் நாட்களைத் தாண்டியும் தாயகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் புலம்பெயர் நாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் இலங்கை அரசாங்கத்திடம் நீதி வேண்டி போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இறுதி இனப்படுகொலைப்போரில் யாரும் கைது செய்யப்படவில்லை, எல்லாரும் இறந்து விட்டார்கள் என இலங்கை அரசுத்தலைவர் கூறும் கூற்று கண்டிக்கப்பட வேண்டியது. மேலும் பொதுநலவய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

 பிரித்தானிய த் தமிழர் பேரவையின் மனித உரிமைகள் செயலணியின் உதவிப் பொறுப்பாளரும் இளம் செயற்பாட்டாளருமான வேந்தனா கூறும்போது “நானும் இறுதி இனப்படுகொலைப்போரின் சான்றாளர். அதில் யுத்தத்தில் நாம் பல இன்னல்களைச் சந்தித்தித்தோம். இலங்கை இராணுவ முகாம் நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே கைதுசெய்யப்பட்டனர். நாம் முகாமுக்குள் வரும்போது அவர்களில் பாதிப் பேரைக் காணவில்லை. இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? இலங்கை அரசாங்கமே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான முழுப் பொறுப்பும் உடையது. மேலும் இன்றைய போராட்டம் போன்று நாம் மேலும் அனைவரும் ஒன்றாக ஓங்கிக் குரல் கொடுத்து எமக்கான நீதியை வென்றெடுப்போம்” என்றார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர் சந்துரு குருலிங்கம் தனது உரையில் “காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்குத், தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நடந்தவற்றின் முடிவு தெரியாதவிடத்து ‘உண்மையை அறிவதற்கான உரிமை’ இருக்கிறது என்பதைப் பன்னாட்டுச்  சட்டம் அங்கீகரிக்கிறது. மேலும் கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்படும் குற்றத்திலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு  உடன்படிக்கையில் 2015 திசம்பர் 15 அன்று இலங்கை  கையொப்பமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் 21 ஆவது பிரிவின்படி, காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதோடு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்குக் ‘காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன என்ற உண்மையை அறிந்து கொள்வதற்கான உரிமையையும்’ அளிக்கிறது. “  

“இலங்கை அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இப்போது உயிருடன் இல்லை என்பதை எந்த அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்கள் வெளியிடுகின்றனர் என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அதனை த் தட்டிக் கழிக்குமானால், அது காணாமற் போனவர்களின் குடும்பங்களின் துன்பத்தை நீடிக்கச் செய்வதோடு, அவர்களது மனித உரிமைகள் மீறப்படும் குற்றத்தையும், பன்னாட்டுச் சட்டத்தின்கீழ்ப் பல்வேறு கடப்பாடுகளிலிருந்தும், மனித உரிமைகள் அவையின் தீர்மானம் ‘A/HRC/RES/31/1’ முன்வைத்த கடப்பாடுகளிலிருந்தும் தவறிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம், இதற்கு நிகரான ஓர் பன்னாட்டு நீதிப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் என்பதோடு இலங்கையைப் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டுவோம்” என்றார்.

 வரலாற்று மையத்தைச் சேர்ந்த சங்கீதன் உரையாற்றும்போது ” இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தினர் படுகொலையானது வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல, அவர்கள் பல மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கடைசி இனப்படுகொலைப்போரில் கூட மத போதகர்களோடு போனால் எமக்கு பாதுகாப்பாக இருக்கும், ‘ICRC’ ஊடாகச் சரணடைந்தால் பாதுகாப்பு என்று இராணுவத்திடம் சரணடைந்ததவர்கள் எங்கே? குடும்பமாகச் சரணடைந்ததவர்கள் எங்கே? கொல்லப்பட்டனர் என்பதன் பொருள் என்ன? எமக்கான நீதி எங்கே? இந்த இக்கட்டான நிலையில் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார். மற்றும் இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளைத் தெளிவுபடுத்தினார்.

அஃகேனம் அறக் கட்டளையைச் சேர்ந்த சீவன் “எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நம் மக்களுக்கான நீதி வேண்டி ஒன்றாகக் குரல் கொடுப்பதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தான் எமது விடுதலையென்பது தங்கியிருக்கிறது என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் மக்களை – குறிப்பாகப் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களைப் பார்த்து இப்பொழுது  அதிபர் இராசபச்ச பயப்படுகின்ற காலகட்டத்தில் இருக்கின்றார்.  இலங்கையைப் புறக்கணியுங்கள்(Boycott). என்பதை வலியுறுத்துகிறேன். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களையோ விடுமுறைக்காக இலங்கை செல்வதையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பொருளாதார வழியில்  பாரிய விளைவுகளை ஏற்படுத்துவது மூலம் உலக நாடுகளின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முடியும். சிங்கள மக்களுக்கு எங்களின் வலிகளும், இழப்புக்களும் தெரியவில்லை. அதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் இருக்கின்றது. நாம் என்றும் ஒற்றுமையுடன் பலமாகப் போராடினால்தான் எம் தேசம் எமக்கு கிடைக்கும்” என்றார்.

 இந்த நிகழ்வினில் ‘கெட்டி உருக்கள்’(Getty images) என்ற பிரித்தானிய ஊடகமும் உக்கிரைன் நாட்டின் ஊடகமும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் இளையோர் செயல்பாட்டாளர்களைச் செவ்வி எடுத்துள்ளன.

https://www.facebook.com/303646176403023/posts/2386606314773655/?d=n