(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 34 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’  35

8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் – தொடர்ச்சி

 பத்து வகைக் குற்றங்கள்பற்றிக் கூறும் நூற்பாவும் முப்பத்திரண்டு உத்திவகைகளைப்பற்றிக் கூறும் நூற்பாவும் இடைச்செருகல் வகையைச் சேர்ந்தன என்பது தெள்ளிதின் அறியக்கூடும்.

        இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

        அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

        காமக் கூட்டம் காணுங் காலை

        மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

        துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

        (தொல்.பொருள்-92)

எனும் களவியல் முதல் நூற்பாவில் மறையோர் தேஎத்து மன்றல் எட்டு என்பது வடமொழியாளர் மணமுறைகளைத்

தான் குறிப்பிடுகின்றது என்று கொள்வதனால் இழுக்கு ஒன்றுமில்லை. அதனால் தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்று கூறுவதற்கும் இல்லை.

  பையுள், கமம், பண்ணத்தி, படிமை ஆகியவற்றைப் பிராகிருதச் சொற்கள் என்று வையாபுரியார் குறிப்பிட்டுள்ளார்.1 பிராகிருத மொழி உருவானது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஆகும். அசோகர் காலத்தில்தான் அம் மொழி மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

  ஆரிய மொழி இந்தியாவில் வழங்கத்தொடங்கியது கி.மு. பத்தாம் நூற்றாண்டில் என்பர் ஆராய்ச்சியாளர். ஆரிய மொழி வருவதற்கு முன்னர்ப் பழந்தமிழே இந்தியா முழுவதும் வழக்கிலிருந்தது. ஆரிய மொழியின் முதல் நூலாம் இருக்கு வேதத்தில் பல தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில வருமாறு :- அணு, அரணி, கடுகு, கபி (குரங்கு), கருமாரன், கலா, கலை, குட (குடிசை), குண்ட (கண்டு-குழி), கணம் (கூட்டம்), நானா (பல்), நீலம், புசுகரம் (தாமரை), புட்பம், பூசனை, பழம் (பலம்), பிலம், பீசம், மயூரம் (மயில்), இராத்திரி, ரூபம், சாயம் (மாலை), வல்கு (அழகு).

+++

  1. History of Tamil Language and Literature  : page 68

+++

   பிராமணங்களில் இடம் பெற்றுள்ள சொற்கள்:-

  அடவி (காடு), ஆடம்பரம் (முரசு), கம்பளம், குலாலன் (குயவன்), தண்டுலம் (அரிசி), திலம் (எள்), மர்க்கடம் (குரங்கு), வள்ளி (கொடி), அரிசி (விரிதி), சவம் (பிணம்)1.

  ஆதலின் வேதமொழியிலும் சமசுகிருத மொழியிலும் பழந்தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளது போல் அவற்றினின்றும் தோன்றிய பிராகிருத மொழியில் பழந்தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கக்கூடுமேயன்றி, கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த தொல்காப்பியத்தில் பிராகிருத மொழிச்சொற்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறுவது ஆராய்ச்சிக்குப் பொருந்துவது அன்று. வரலாற்று முறைக்கு அப்பாற்பட்டதாகும்.

  வட இந்திய மொழிகளே பழந்தமிழும் ஆரியமும் கலந்து உருவானவையாக இருக்கும்போது அவற்றுள் பழந்தமிழ்ச் சொற்கள் காணப்படுவதில்  புதுமையின்று, வையாபுரியார் அவர்கள் அங்கிருந்து தமிழுக்கு வந்தன என்று கூற முற்படுவதற்கு முன்னர்த் தமிழிலிருந்து அங்குச் சென்றிருத்தல் கூடாதா? என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்.

  பண்ணத்தி என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. அதன் இலக்கணம்.

        பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்

        பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே

        (தொல்.-செய்.-180)

என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பேராசிரியர் பின் வருமாறு உரை கூறியுள்ளார்: 2  பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு.

+++

  1. Origin and growth of Bengali literature : Page 42

2  பொருளதிகாரம் பேராசிரியர் உரை : பக்கம் 1247. இதனை இடைச் செருகல் என்று கருதவும் கூடும்.

+++

  மெய் வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி யென்ப; இவை எழுதும் பயிற்சியில்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையாவன:- நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினார். நோக்கு முதலிய உறுப்பின்மையின் என்பது.  அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க.

அடுத்த நூற்பா:

 அதுவே தானும் பிசியொடு மானும் என்பது. அதற்குப் பொருள்: மேற்கூறப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒக்கும் என்றவாறு.

 இவ்வாறு தமிழ்நாட்டில் வழங்கி வந்த இலக்கிய வகையொன்றுக்குப் பெயர் பிராகிருத மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட சொல் என்பது எட்டுணையும் பொருந்தாது என்பதை எண்ணாமல் கூறிய அவரின் அறிவின் திறத்தை என்னென்பது?

  அம்மட்டோடு நின்றனரா? அப் பேரறிஞர். மொழி மரபில் உள்ள இரண்டு நூற்பாக்கள் பிராக்கிருத பிரகாசம் எனும் நூலின் இரண்டு நூற்பாக்களைத் தழுவிக் கூறப்பட்டுள்ளது என்று கூறிவிட்டனரே. மொழிமரபு எனும் தலைப்பே தமிழ்மொழியின் தொன்றுதொட்டு வரும் இயல்பினை விளக்கும் பகுதி என்று அறிவித்து நிற்கின்றது. மொழிமரபின் நூற்பாக்கள் 21உம் 22உம் அவர் சுட்டும் நூற்பாக்களாகும்.

 He adopts Prakrit Stras e.g. the 21st and 22nd sutras of Molomarapu corresponds to two sutras of Prakrita Prakasam(1:36,42).

  அந் நூற்பாக்கள்:

        அகரம் இகரம் ஐகார மாகும்.   (தொல்&எழுத்து: 21)

        அகர உகரம் ஔகார மாகும்.   (தொல்&எழுத்து: 22)

என்பனவே.

  இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன் பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழி வழக்காற்றில் ஐயும், ஔவும் ஒலிக்கும் முறையைக் கூறுவதற்கு வேற்றுமொழி நூலின் துணையை நாடவேண்டியது எற்றுக்கு?

 தமிழகத்தில் தமிழைப்பற்றி எது வேண்டுமானாலும் யாரும் கூறலாம் என்ற துணிபில் இவ்வாறெல்லாம் பிதற்றிவிட்டார் போலும். உலக மொழியாம் ஆங்கிலத்தில் எழுதிவிட்டமையால் தமிழ்நூலின் இயல்பறியார் தவறான முடிவு கொண்டு விடுவரே என்றுதான் கவலைப்பட வேண்டியுளது.

  பழந்தமிழின் எழுத்துச்சான்றுகள் தொல்காப்பியமும் அதற்கு முற்பட்ட இலக்கியப் பாடல்களுமாம். இவற்றின்  தோற்றக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டும் அதற்கு முற்பட்டதும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்