தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர்.

த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது மட்டுமில்லை. அவ்வாறு எண்ணித் தங்களையே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். த.வெ.க.வெற்றிக்கான காரணங்களில் திரைப்பட மாயையும் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமில்லை. வெற்றி தோல்வி இயற்கை என்பதை உணர்ந்து தோல்வியை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் உள்ளம் அதனை ஏற்கவில்லை. உண்மையை உணர்ந்து கொள்ளா இச்சூழல் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.

இந்நேர்வில் முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் அமைதி காப்பதும் நன்றே. அவருக்குத் தங்கள் பக்கம் இருக்கும் குறைகளும் தவறுகளும் தெரியும். அதே நேரம் தாங்கள் சொன்ன வாக்குறுதிகளும் தாங்கள் நிறைவேற்றிவரும் திட்டங்களும் என்னென்ன என்றும் அறிவார்.

பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கும் அரசில் பங்களித்துள்ளமையை கட்சிச்சார்பின்றி அனைவரும் பாராட்டத்தான் செய்கின்றனர். மக்கள் நலச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் முதல்வருக்குப் பாராட்டுகள்.

முதல்வருக்கு என்றென்றும் பாராட்டு மாலைகள் குவியவும் உலக அளவில் நிலையான புகழ் பெறவும் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்ய வேண்டிய நிலையான செயல்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை விரைந்து நிறவேற்ற வேண்டுகிறோம்.

கட்சி வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றாக இருமொழிக் கொள்கை குறிக்கப்பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமொழியில் ஒன்றான ஆங்கிலம் உலகத்திற்கான இணைப்பு மொழியாகத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி மாறினாலும் ஆங்கில ஆட்சி மாறவில்லை என்பதே நடைமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து மாறுதல் ஆணைகளும் ஆங்கிலமாகத்தான் உள்ளன. தமிழுக்கு இடமில்லா நிலையே தொடர்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வதை அரசு கொள்கையாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனைக் காரணம் காட்டியே இடமாற்றங்கள் அளிக்கின்றனர். ஆனால் இதனைத் தலைமைச்செயலகத்தில் கடைப்பிடிக்காமையால் பணிச்சுணக்கம், விதி மீறல்கள், இவற்றால் பணியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாதல், இவற்றால், அரசிற்கு எதிரான வழக்குகள் குவிதல் போன்ற பலவும் நேர்கின்றன. எனவே, முதற்கட்டமாகப் பணியாளர் மேலாண்மைத் துறை, நிதித்துறை, பொதுத்துறைகளில் பணியாற்றும் அனைவரையும் உடனடியாக மாற்றுதல் வேண்டும். புதிய செயலர்கள் வந்தாலும் இத்துறைகளில் முன்னரே பணியாற்றுவோர் அவர்களையும் திசை திருப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் நல்லவர்களும் வல்லவர்களும் உள்ளனர். எனினும் செல்லாக்காசினர். எனவேதான் தீமைகள் தொடர்கின்றன. பிற துறைகளில் உள்ள அதிகாரிகள், பணியாளர்களையும் உடன் மாற்ற வேண்டும். பணியிடமாற்றங்கள் மேற்கொள்ளும் பொழுது தமிழ் வளர்ச்சித்துறையில் தமிழில் பட்டம் பெற்றவர்களையே மாற்றி அமர்த்த வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணைகள் உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் அறிவிப்பதால் பயனில்லை. எனவே, முதன்முறையாக ஆங்கில ஆணைகளுக்குக் காரணமான உதவிப்பிரிவு அலுவலரில் இருந்து செயலர் வரை உள்ள அனைத்து அலுவர்களுக்கும் குறைந்தது ஓராண்டேனும் ஊதிய உயர்வு நிறுத்த வேண்டும். இவ்வாறு தண்டனை பிறப்பித்தால்தான் பிறருக்கும் தண்டனை மீதான அச்சம் வரும். எனவே, உடனடியாகத் தமிழாட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியேனும் ஆங்கிலக் காதலர்கள் திருந்த வேண்டும். ஆங்கில ஆட்சியை நிலை நிறுத்தியதால் ஆட்சியை முந்தைய ஆள்வோர் இழந்தனர். அவ்வாறில்லாமல் தமிழாட்சியை நிலை நிறுத்துக.

எல்லா இடங்களிலும் தமிழுக்கும் தமிழாய்ந்த தமிழர்க்கும் முதன்மை தர வேண்டும்.

தமிழ்க்கல்வியகங்களுக்கும் தமிழ்த்துறைகளுக்கும் தமிழ் இருக்கைகளுக்கும் தர வேண்டிய நல்கைகள் தரப்படாமல் உள்ளன. அவற்றை நிலுவையின்றி வழங்கித் தொடர்ந்து நல்கை வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை தொடங்க வேண்டும்.

உலகப் பல்கலைக்கழகங்கள் மூலமாக அந்தந்த நாட்டு மொழிகள் மூலமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் வாயிலாக அஞ்சல்வழி மூலமாகப் பிற மொழிகள் வாயிலாகத் தமிழ் கற்பிக்க வேண்டும்

இன்னும் பல வேண்டுகோள்கள் உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கலாம். எனினும் தமிழ்மொழிக்குத் தலைமை யளிப்பதற்கு முதலிடம் தர வேண்டும்.

மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகள். தமிழ் நலச்செயற்பாடுகளே தலையாய பணிகள் எனக் காெண்டு செயற்படுமாறும் வேண்டுகிறோம்.