தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
நூற்சிறப்பு
தொல்காப்பியச் சிறப்பு
தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார்.
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணினியமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும் முதல்நூல் ஆக வழியில்லை. மேலும், பிறமொழி இலக்கண நூலார் எவரும் எழுத்துக்கும்- சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் காண்பர். பிற்காலத்தில்தான் செய்யுள் யாப்பும் (கட்டும்), கருத்துக்கு அழகு செய்யும் அணியும் குறித்து இலக்கணம் செய்வாராயினர். ஆனால், தொல்காப்பியனார் விவரித்த பொருள்” இலக்கணம் குறித்த சிந்தனையே வடமொழியாளரிடத்தில், என்றும் எழவில்லை. பொருள் என்றது சொல்லின் பொருள் விளக்கம் கருதியது அன்று. அது வாழ்க்கை விளக்கம். அதுவும் இலக்கியத்தில் இடம்பெறும் முறையையும் வகையையும் விளக்குவது. அகமும் புறமுமாய்ப் பகுக்கப் பெற்ற இலக்கிய உலகில் அகத்திணை, புறத்திணை எனவும், களவு-கற்பு எனவும், பிறவாறும் வகை செய்யப்பட்டு உலகியல் வாழ்வியல் இணையும் ஆடவரும் மகளிரும் ஆன இரு சாராரும் எய்தும் உணர்வுகளைப் புலப்படுத்தும் காட்சிகளைச் செய்யுளாக்குவதற்கு உரிய இலக்கணத்தை விவரிக்கும் தனிச் சிறப்புடையதாகும்.)
தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு
‘தொல்லியல் மருங்கின் மரபு’ (எழுத்து.356), ‘தொல்நெறி மரபு’ (சொல்.106: பொருள். 491) ‘சிறப்புடை மரபு’ (சொல்.421) பொருள்.97) ‘மரபுநிலை திரியா மாட்சி’ (பொருள்.48), ‘தெறற்கரு மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘ மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘நிலைக்குரி மரபு’ (பொருள். 216. 368), ‘கெடலரு மரபு’ (பொருள்.238), ‘நாட்டியல் மரபு’ (பொருள்.243), ‘தொகுநிலை மரபு’ (பொருள்.462), ‘மன்பெறு மரபு’ (பொருள்.628) என்று மரபின் சிறப்பைப் பல அடைமொழிகளிட்டுத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசுகிறது. எனவே, தொல்காப்பியம் மூலம் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொன்மையான மரபு இருந்தமையை உணரலாம்.
தொல்காப்பியத்தை அறியாது வாழ்ந்த மேனாட்டு அறிஞர்கள் சமசுகிருத நூல்களை உயர்வாகவும் தொன்மையாகவும் தமிழ் நூல்களுக்கு முந்தையதாகவும் கருதியமை போல், பாணினியத்தை மட்டும் அறிந்து ஆனால் முழு ஆராய்ச்சி யின்றி அதனைப் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தொல்காப்பியம் குறித்து அறிந்த கடந்த நூற்றாண்டு மேலை நாட்டினர் தொல்காப்பியத்தின் சிறப்பையும் அட்டாத்தியாயி நூலின் குறைகளையும் உணர்ந்தனர்.
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply