(தமிழ்ச்சொல்லாக்கம்  118 -123 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

124. Hero – பெருமான்

125. Heroine – பெருமாட்டியார்

இந்துக்கள் அதிர்ட்டவசமென்றும், திசாபலம் இராசி நட்சத்திரங்களின் பலமென்றும், ஊழ்வினைப் பலமென்றும் பலவகையில் இந்நடவடிக்கைகட்கு நியாயம் சொல்வதால், கவி எடுத்துக்கொண்ட பெருமான், பெருமாட்டியார் (Hero, Heroine) பெருமை இவ்வித இவ்வித சம்பவங்களால் அலங்கரிக்கப்பட்டு விசித்திரமாவது பற்றி, இதை ஒரு அணியென வகுத்தல் தமிழாசிரியர் பெற்றியாம்.

மேற்படி நூல் : பக்கம் : 414

126. சூரிய நாராயண சாத்திரியர் -பரிதிமாற்கலைஞன்

இதுகாறும் புலவர் குழாம் பயின்றுவரும் இடைநிலை யிலக்கியங்களொடு மறுதலைப்பட்ட இலக்கணங்களை யுடையதென இந்நூல் சிற்சிலவிடங்களிற் புலப்படினும் நூற்கருத்துணரு முன்னர் இதனையன்னதென்கறி சுழற்க. நூலினை முற்றுமுணர்ந்த பின்னரும் இந்நூல் புரையுடைத்து இந்நூல் தக்கின்று என வாளாது கூறலிற் பெரும் பயனின்றாம். இவ் விக் காரணங்களான் இஃது அப்பெற்றித்தெனச் சிறியேனைத் தெருட்டா வழி.

இனி யிந்நூலினை வெளிப்படுத்தும் வழி எனாதுண்மைப் பெயரை மறைத்துப் பரிதிமாற்கலைஞன் எனப் புனைவுப் பெயர் நிறுத்தி வெளிப்படுத்துகின்றேன்.

நூல்   :           தனிப்பாசுரத் தொகை பக்கம் : 8. (5-12-1899)

நூலாசிரியர்  :  பரிதிமாற் கலைஞன் (வி. கோ. சூரிய நாராயண சாத்திரியார், பி.ஏ.) –

127. Aquvarium – நீர்நிலைக் கண்ணாடிக் கூடு

நீர்நிலைக் கண்ணாடிக் கூடு (Aquarium) – நீரில் வாழும் சிறு பூண்டுகளும் செந்துக்களும் வாழும்படி கண்ணாடியினால் செய்யப்பட்டு நீர் பெய்யப்பட்டுள்ள கூடு.

நூல்   :   (வித்தியா தீபிகை என்னும்) கல்வி விளக்கம் (1899) பக்கம் – 73.

மொழி பெயர்ப்பாளர்கள்  : எசு. வி. கள்ளப்பிரான் பிள்ளை. சி, அப்பாவு பிள்ளை. வி. பி. சுப்பிரமணிய முதலியார்.

128. Light House – விளக்குக் கூடு

விளக்குக் கூடு கப்பலோட்டிகளுக்குக் கண்ணொளி போன்றது. இது அவர்கள் கப்பலை இரவுக் காலத்தில் பரந்த கடலில் செலுத்தி வரும்போது வழியில் இருளில் மறைந்து கிடக்கும் பாறையில் தாக்கியாகிலும், மணற்றிடரில் செருகியாகிலும் அழிந்து போகாதபடி காக்கின்றது. அதாவது விளக்குக்கூடுள்ள விடத்தைச் சுற்றிலும் மேற்கண்ட அசந்தற்பங்கள் இருக்கின்றனவென்று எச்சரிக்கை செய்கின்றது போலாம். பண்டைக் காலத்தில் இக்கூடுகள் அபுரூபமாயிருந்தன. முதலில் 2200 – வருடங்களுக்கு முன்பு பாரோசு (Pharos) என்பவர்களால் அலெக்சான்டிரியாவில் கட்டப்பட்டிருந்தன வென்று சரித்திரஞ் சொல்லுகின்றது.

இதழ் :           சீவரத்நம் (1902) வகை – 1, மணி – 1, பக்கம் – 15.

இதழாசிரியர்    :  டி.ஆர்.சந்திர ஐயர், சென்னை,