1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி)
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு :
3
இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார்.
இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டறிக்கைகள், செய்திகள், அறிவிப்புகள், பெண் தலைவர்கள் படங்கள், பெண் போராளிகள் படங்கள், தொடர்பான கருத்துப் படங்கள் எனப் பலவற்றையும் நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார்
தலைவர் நீலாம்பிகை அம்மையார் என்பது ஆறாவது கட்டுரை.
தம் தந்தையார் மறைமலையடிகளால் தனித்தமிழ்ப்பக்கம் ஈர்க்கப்பட்ட நீலாம்பிகை அம்மையார், வாணாள் முழுவதும் அதில் நிலையாக இருந்தார் எனவேதான் இந்தி எதிர்ப்புப்போராட்டங்களில் தனித்தமிழ் மணமும் கமழக் காணலாம். “முன்னமே நாம் பிற மொழிச்சேர்க்கைக்கு இடம் கொடுத்து விட்டோம்.இனிமேலாயினும் பிறமொழிச் சேர்க்கைக்கு இடம் கொடாமல் நம்மையும் நம் அருமைத் தமிழையும் பாதுகாத்துக் கொள்வோமாக” என மாநாட்டில் பேசிய நீலாம்பிகை அம்மையார் அதன் மூலம் தமிழ்ப்பெண்களுக்குத் தமிழுணர்வு ஊட்டினார் என்பதை விளக்குகிறார்.
ஏழாவது கட்டுரையில், பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் சூட்டியது குறித்து விவரிக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தனித்தமிழ் எழுச்சி முதலியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதே என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை எட்டாவது கட்டுரை விளக்குகிறது. மாநாடு தொடர்பான தலைவர்கள் குதிரை வண்டியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க்கொடிகளை ஏந்தி, தமிழ் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே இந்தி வீழ்க, தமிழ்ப்பெண்கள் வாழ்க, தமிழர் வாழ்க என முழக்கமிட்டு வந்துள்ளனர். தமிழ்ப்பெண்கள் தமிழ் வாழ்த்துப்பாடி வந்துள்ளனர் என விளக்குகிறார். மாநாட்டில் 5000 பேருக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்குப் பெண்களிடம் இருந்த தமிழ் எழுச்சி எங்கே போய்விட்டது என்றுதான் தெரியவில்லை.
ஒன்பதாவது கட்டுரையில் அன்னை மீனாம்பாள், மரு.தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்தவி யம்மையார் உரைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. அத்தகைய தமிழுணர்வு மிக்க, தமிழ் எழுச்சி ஊட்டக்கூடிய பெண் தலைவர்களை இன்று காணவில்லை.
வரவேற்புக்குழுத் தலைவர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் என்பது ஒன்பதாவது கட்டுரை. மிகச் சிறப்பான சொற்பொழிவாற்றியுள்ளார் தாமரைக் கண்ணி அம்மையார். இவ்வுரையில் கொச்சைப்பேச்சு நடையில் எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் பின்வருமாறு கண்டித்துள்ளார்:
‘’தமிழ்எழுத்தாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு அரைகுறைத்தமிழில் எழுதுபவர்களைக் கடுமையாகத் தன் உரையில் தாமரைக்கண்ணி சாடுகிறார். குறிப்பாகப் பார்ப்பன மொழியைப் பயன்படுத்துபவர்களை விமரிசனம் செய்கிறார். என்ன சார்வாள், எங்கே போறையள், ரொம்ப, பஞ்சாமிர்தமாக, தொபுக்கடீரென்று, தூம்தடாகா, கப்சா, காதல் கச்சேரி, காலட்சேபம், லேடீச கிளப்,- போதுமா? இன்னும் வேண்டுமா? சிலர், சிவ சிவா போதும் போதும் என்கிறீர்கள். சரி. நிறுத்திவிட்டேன். இப்படித் தமிழன்னையைப் பையப் பையச் சாகடிக்கும் இந்த எழுத்தாளர்கள்தான் உயிருள்ள தமிழ்நடை எழுதுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இத்தமிழ்நடையைத் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதி, உலகமெங்கும் பரப்புவதற்காக இவர்களுக்கு அகில இந்திய வானொலியில் (ரேடியோவில்) பேசுவதற்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் தமிழ் பயின்று இலக்கண இலக்கிய வர்புகளுக்குட்பட்டுச் செந்தமிழ்நடை எழுதும் அறிஞர்கள் பத்தாம்பசலிக்காரர்கள் என்று பரிகசிக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்க்கொலை செய்பவர்களாம். எப்படியிருக்கிறது சங்கதி? இதற்கு விமோசனம் இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலைமையில் இந்த இந்திச் சனியன் வேறு வந்து புகுந்தது. …” என்று பேசியதை நமக்குத் தந்துள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை







Leave a Reply