வெருளி நோய்கள் 1506-1510 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1501-1505 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1506-1510
- நீள் புதுச்சொல் வெருளி-Macroxenoglossophobia
நீளமான புதுச்சொல் குறித்து ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் நீள் புதுச்சொல் வெருளி.
நீளமான சொற்களைப் பயன்படுத்த இயலாமை, அதனைச் சொல்வதற்கு வராமை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தச் சொல் மீது வெறுப்பு வருவதும் உண்டு. பழக்கமில்லா நீளச் சொல்லைத் தவறாகச் சொல்லி விட்டால் பிறரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சுவோரும் உண்டு.
இதுவும் நீள்சொல் வெருளியைப்போன்றதுதான். ஆனால் நீளமான நன்கு அறிமுகமான சொல் கண்டு பயப்படாமல் புதிய நீளமான சொற்களைக் கண்டு பேரச்சம் கொள்வோரை இது குறிக்கிறது.
தமிழில் 7 எழுத்துகளுக்கு மேல் சொல் கிடையாது. பொதுவான சொற்கள் 3 இலிருந்து 5 இற்குள் அடங்கி விடுகின்றன. என்றாலும் தமிழ் மக்கள் ஆங்கிலம் பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் அல்லது தாங்கள் படிக்கும் பிற மொழிகளில் உள்ள நீண்ட சொற்களுக்கு அஞ்சுவர்.
சிலருக்கு அயலவர் வெருளி இருக்கும். அயல்நாட்டுப் பொருள்களை வெறுக்கும் அவர்கள் அயல்மொழிகளையும் வெறுப்பர்.
00
- நுண்ணலை அடுப்பு வெருளி – Microvophobia
நுண்ணலை அடுப்புபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நுண்ணலை அடுப்பு வெருளி.
microwave oven என்பதன் சுருக்கமே Microvo.
நுண்ணலை அடுப்புகள் வசதியானவை என்றாலும், அவற்றில் பல குறைபாடுகளும் உள்ளன. வரையறுக்கப்பட்ட சமையல் முறைகள், உணவைப் பொன்னிறமாகவோ மொறுமொறுப்பாகவோ மாற்ற இயலாமை, சீரற்ற வெப்பமூட்டல் காரணமாக நோய்மி(bacteria) வளரக்கூடிய ‘குளிர்ப் பகுதிகளை’ உருவாக்குதல், நுண்ணலை அடுப்பில பயன்படுத்தத் தகுதியற்ற நெகிழிப்பொருள்களில்(plastocs) உணவைச் சூடாக்கும்போது தீங்கு விளைவிக்கும் வேதியற்பொருள்கள் கசிவதற்கான சாத்தியம் ஆகியவை அவற்றில் அடங்கும். இவை காரணமாக தீங்கு விளையும் என்ற அச்சத்தல் நுண்ணலை அடுப்பைப் பயன்படுத்துவோருக்கு வெருளி வருகிறது.
கதிர்வீச்சு கண்டு அஞ்சுபவர்களுக்கும் நுண்ணலை அடுப்பு வெரளி வருகிறது.
00
- நுண்ணோக்கி வெருளி – Microscopophobia
நுண்ணோக்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் நுண்ணோக்கி வெருளி.
நுண்ணோக்கி மூலம் நோய்மிகளைப் பார்ப்பதால் நோய்மிகள் மீது அச்சம் உள்ளவர்களுக்கு நுண்ணோக்கி மீதும் பேரச்சம் வருகிறது. நுண்ணோக்கியைப் பயன்படுத்துவதால் தொற்றுநோய் வருமோ என்று அஞ்சுவர்.அறியப்படாதவற்றை அறிய நேர்ந்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். நுண்ணோக்கி மூலம் வெறும் கண்ணால் பார்க்க இயலாதவற்றை அல்லது அவற்றின் பேரளவைப் பார்க்க நேருவதால் தேவையற்ற பேரச்சம் ஏற்படுகிறது. இவை காரணமாக நுண்ணோக்கி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- நுதி வெருளி/மருந்தூசி வெருளி-Trypanophobia
மருந்தூசி போடுவதற்கான காரணமற்ற மிகையான பேரச்சம் மருந்தூசி வெருளி.
நுதி என்றால் கூர்மை, முனை, நுனி எனவும் பொருள்கள் உள்ளன.கூர்மையான ஊசியின் முனை நுனியைக் குறிக்கும் வகையில் சுருக்கமான இச்சொல் கையாளப்பட்டுள்ளது. மருந்தூசி என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாக உள்ளமையால் தொடக்கத்தில் புரிவதற்காகப் பயன்படுத்தி விட்டு நாளடைவில் நுதியை மட்டும் பயன்படுத்தலாம்.
கூர் வெருளி(Aichmophobia), நுனை வெருளி(Belonephobia) ஆகியவற்றுடன் ஒப்புமை உள்ளது.
trypள என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் துளையிடு. (மருந்தூசி உடலில் துளையிட்டுத்தானே மருந்தைச் செலுத்துகிறது.)
00
- நுரையீரல் வெருளி- Pnevmonaphobia / pneumonoultramicroscopicsilicovolcanoconiosisocazoiopustropusopusoashiososinhalopotropopopobophobia
நுரையீரல் அல்லது நுரையீரல் நோய் தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நுரையீரல் வெருளி.
இருமல் ஏற்பட்டாலோ சளி வந்தாலோ அதனால் நுரையீரல் நோய்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை வரலாம் எனக் காரணமின்றிப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply