இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை.

 டீப் பேக்  அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன?

டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு நிகழ்வை, ஒருவர் பேசியது, செய்தது, அல்லது ஏதும் நடந்தது போன்ற தோற்றத்தைப்போலியாக உருவாக்கி ஏமாற்றும் எண்ம ஊடகம் ஆகும். இது படமாகவோ கேட்பொலியாகவோ காணொளியாகேவா இருக்கலாம். இதன் நோக்கம் தொடர்புடையவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே. ஆனால் நேரடியாகப் பழித்துக் கூறாமல் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்களை ஏய்ப்பதே இதன் விளைவு.  பொய்யை மெய்யென்று மக்கள் நம்புவதன் மூலம் உரியவருக்குக் களங்கம் விளைவதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.

 இது குறித்து விரிவாக அறிய விரும்புவோர் இணையத் தளங்கள் வாயிலாக எழுத்து வடிவிலோ பேச்சு வடிவிலோ காணுரை வடிவிலோ அறிந்து கொள்ளலாம். சொல்லாக்கத்திற்கு இந்த அளவே போதுமானது.

ஆழ் கற்றல்(Deep Learning) என்பதையும் ஏய்ப்பு(Fake) என்பதையும் இணைத்து Deepfake சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

fake என்றால் ஏமாற்று; ஏய்ப்பு; கள்ளத்தனம்; போலச் செய்; போலி; போலித்தனம்; புரட்டு எனப் பொருள்கள். ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்பிற்கு அவதூறு கற்பிப்பதன் மூலம் மக்களை ஏய்க்கின்றனர். இவற்றுள் ஏய்ப்பு என்னும் சொல் இங்கே மிகவும் பொருத்தமானது. எனவே Deepfake என்றால் ஆழ் ஏய்ப்பு >  ஆழேய்ப்பு எனலாம்.

ஆளை ஏய்ப்பது – ஆளேய்ப்பு எனத் தவறாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடாது. ஆழ்கல்வியைப் பயன்படுத்தி ஏய்ப்பதால் ஆழ்ஏய்ப்பு என்கிறோம். ஆள்ஏய்ப்பு என்பது எண்ம ஊடக வழி அல்லாமல் மோசடி செய்தும் இரண்டகம் புரிந்தும் ஏமாற்றுவதாகும். ஆழேய்ப்பு என்பது எண்ம ஊடகத்தைப் பயன்படுத்திப் பொய்யை மெய்யாகக் காட்டி ஏய்ப்பதாகும்.

வங்கக் கவிஞர் இரவீந்திரநாத்து தாகூர், “கப்பல் நங்கூரம் பாய்ச்சி கடலிலேயே நின்று விட வேண்டும். கரை கடந்து நாட்டிற்குள் வர இயலாது. ஆனால், கப்பலிலுள்ள பொருட்கள் நாட்டிற்குள் வரும்.  அயல்மொழியும் அப்படித்தான் நாட்டிற்கு வெளியேயே நின்று விட வேண்டும். அதுகூறும் கருத்துகள்தாம் நாட்டிற்குள் வர வேண்டும்” என்று பொருள்படும் வகையில் கூறியுள்ளார்.

 எனவே, அயல்மொழிச் சொற்கள் நாட்டிற்குள் புகக் கூடாது. அச்சொற்கள் உணர்த்தும் பொருள் மட்டும் தாய்மொழி வடிவில் நாட்டிற்குள் வரவேண்டும்.  எனவே, செய்திகள், விளம்பரங்கள், ஊடகங்கள் வாயிலாக அறியப்பெறும் அயற்சொற்களை நாட்டு எல்லையிலேயே நிறுத்தி விட்டு அவற்றிற்கான தமிழ்ச்சொற்களையே நாட்டில் உலவ விட வேண்டும்.

இதற்கான பணியைத் தமிழ்வளர்ச்சித் துறை செய்யலாம். ஆனால், அதற்கான நேரமோ தக்கவர்களோ இத்துறையில் இல்லை. எனவே, அரசே, தமிழ்க்காப்பிற்கான சொல்லாக்கக் குழு ஒன்றை நிறுவ வேண்டும். ஆனால், விடுமுறை நாட்களையும் மாறுதல் ஆணைகளையும்கூட ஆங்கிலத்தில் வெளியிடும் உயர் அதிகாரிகள் ஊதியம் வாங்குவது ஆங்கிலக் காதலுக்காகத்தானே!  அவர்கள் எப்படித் தமிழ்நலப்பணி யாற்றுவார்கள்?

மாண்புமிகு முதல்வர் ச.சோ.விசய், எல்லா இடங்களிலும் நீக்கமறத் தமிழே பரவியிருக்க

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிவீரராம பாண்டியன் வழியிலே பின்வருமாறு சொல்வோம்:

பொய்யுடை ஒருவன் ஊடகவன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே!