(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்- தொடர்ச்சி

)

  1. அரண் ஏமம்
    ஏமம் தனியொருவருக்கும், குமுகாயத்திற்கும் இரண்டையும் உள்ளடக்கிய நாட்டிற்கும் இன்றியமையாதது. நாட்டிற்கு ஏமமாவன பல. அவற்றுள் “அரண் ஒரு ஏமம். அரண் என்றாலே பாதுகாப்பு- ஏமம் என்று தான் பொருள். இது கடல், கோட்டை, மலை முதலியவற்றிற்கு ஆகுபெயராக அமைந்தது.
    நாட்டைச் சூழ்ந்த கடல், மண்ணில் கட்டிய கோட்டை, இயற்கை மலை, பின்னிச் செறிந்து விளங்கும் இயற்கைக் காடு ஆகியனவெல்லாம் நாட்டிற்குப் பாதுகாப்பாக உள்ளமையால் திருவள்ளுவர் இவற்றை அரண்’ (742) என்றார்.
    இக்காலத்தில் போர்க்கருவிகள் பெரும் அழிவை விரைவில் ஏற்படுத்தக் கூடியன. வானவூர்தி வழித் தாக்குதலும், பீச்சிப்பாயும் பாய்விகளும் (Rockets), அணு குண்டும் பெருகிவரும் நிலையில் மேலே கூறப்பட்ட அரண்கள் வலுவிழந்தன ஆகலாம். ஆனாலும், இவையும் பாதுகாப்பளித்து வருகின்றன. கடல் அரணாக இருப் பதால்தான் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்து நகரின் எல்லையில் ஒரு கோட்டை உள்ளது. இதற்குள் சிங்களப்படையினர் தங்கிப் புலிகளுடன் மோதி வருகின்றனர். இவ்வகையில் இன்றும் கோட்டை ஏமமாக உள்ளது. இயற்கையான இமயமலை இன்னும் இந்திய நாட்டிற்கு ஏமமாக உள்ளது. யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு அங்குள்ள அடர்ந்த காடுகளே ஏமமாக உள்ளன. தீமையே செய்யும் சந்தனக் கட்டைக் கடத்தல் மன்னன் வீரப்பனுக்குச் செறிந்த காடுகளே ஏமம்; தீமைக்கு ஏமமாயினும் அவனளவிற்கு அரண் தான்.
    அக்காலத்துக் கோட்டை அரண் தன் உள்ளேயே பெரும் வெட்டவெளியிடத்தைக் கொண்டது; கோட்டையில் சிறு சிறு பதுங்கு அறைகள் ‘ஞாயிறு'[28] என்னும் பெயரில் சிறு காப்பிடம் அமைந்திருக்கும். அதற்குள் பதுங்கியிருந்து தாக்குவர்.
    இக்காலத்திலும் போரின்போது ’பதுங்கு குழிகள்’ அமைக்கப்படுகின்றன. இவற்றில் போர்வீரர்கள் மறைந்திருந்து தாக்குகின்றனர். இவ்வமைப்பை அறிந்த பகைப் படையினர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குதல் வருமோ என்று எதிர்பார்க்கும் கலக்கத்தில் போர் ஊக்கத்தையும் இழப்பர். இதனையும் உள்ளடக்கியே திருவள்ளுவர்,
    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
    ஊக்கம் அழிப்பது அரண்
    ”(744)
    என்றார்.
    அரண் பற்றி மற்றொரு குறள் காட்டும் உண்மை இக்காலத்தில் அண்மையில் பாரசீக வளைகுடாப் போரின் போது வெளிப்பட்டது.
    ஈராக்கு நாட்டு வல்லாட்சியர் சதாம் என்பவர் அண்டைச் சிறுநாடான குவைத்தை ஆட்படுத்திக் கொண்டார். இதனால் போர் மூளும் என்று எதிர்பார்க்க அவர் தம் நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு கோட்டையை உருவாக்கினார். அஃது ஒரு நகர் போன்றே அனைத்து நலங்களையும், வளங்களையும் கொண்டதாக அமைக்கப்பெற்றது. வல்லமை வாய்ந்த நிலத்தடி அரண்தான் அது. ஆனாலும், சதாம் உலகநல நாடுகளின் தாக்குதலால் பெருந்தோல்வி கண்டார். அவர் அமைத்த நிலத்தடி நகரும் ஏமத்தைத் தரவில்லை. அது மிக மாட்சிமை மிக்கதுதான். ஆயினும், ஏமமாகவில்லை. காரணம், சதாம் செய்த வேண்டாத தீமைகளால் அவர் செய்த செயல்கள்-வினைகள் மாட்சிமை அற்றவையாயின.
    எனை மாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்”

    (750)
    என்ற குறள் கருத்துதான் வென்றது. வினைமாட்சியின்மையால் வல்ல அரணும் “இல்லது அரண்”. ஆயிற்று.
    இவ்வாறெல்லாம் இக்காலப் போர்முறை அறிவியலிலும், மக்களின் வாழ்வியல் அறிவியலிலும் திருவள்ளுவர்தம் கருத்துக்கள் நிழலாடுகின்றன. அறிவியல்களின் தொலை நோக்குப் படமாகத் திருவள்ளுவம் பதியப்பட்டுள்ளது.
    இதுவரை,
    எடுத்து விரித்த விளக்கங்களால் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்.
    ”அறிவியலும் திருவள்ளுவம்” என்பது புலனாக்கப்பட்டது.
    இதற்கு அடிதளமாக,

++
ஃ திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்
ஃ ”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.
ஃ அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.
ஃ ”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றது
ஃ அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது.

இவற்றால் அமைந்த அடித்தளப் பாங்குடன், ”பிணியின்மை என்று துவங்கும் ஒரு குறளை நிலைக் களமாக்கி

ஃ நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,
ஃ அவற்றுள்
ஃ நோயியல், உணவியல்,
ஃ மருத்துவ இயல், உடலிய உளவியல், பொருளியல், நிலத்தியல்;
ஃ உளவியம், உளப்பகுப்பியல்:
ஃ கல்வியியல், அரசியல், குமுகாயவியல்
ஃ கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்
-எனும் பதினான்குடன் முன் காணப்பட்ட வானவியலுமாகக் கூடிப் பதினைந்து இயல்களின் உள்ளீட்டுக் கருத்துக்கள் முன்னோட்டமாகவும் தொலை நோக்காகவும் அமைந்ததைக் கொண்டு உண்மையாகின்றது.
அறிவியல் திருவள்ளுவம்

  1. ↑ மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார்க்கிழார், இறையனார், ஆசிரியர் நல்லந்துவனார்
    -திருவள்ளுவமாலை.
  2. ↑ மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
    -மணிமேகலை-22-61
  3. ↑ சுப்பிரமணியபாரதி, சி.
  • பாரதி கட்டுரை கலைகள் .
  1. ↑ திருஞான சம்பந்தர் -தேவா, பிரமபுரம்

  2. நல்லத்துவனார் -பரிபாடல்-6-8
  3. ↑ காரியாசன் : சிருபஞ்சமூலம் – 12
  4. ↑ இளம்பெருவழுதியார் : பரிபாடல்-15-49.
  5. ↑ சொல்லன் அழிசி: குறுந்தொகை – 138 – 3
  6. ↑ பரஞ்சோதி முனிவர்: திருவிளை – இந்திரன் பழிதீர்த்த படலம்- 74- 1.
  7. ↑ அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
  8. ↑ மாங்குடி மருதனார்: மது. கா. 191.
  9. ↑ பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
  10. ↑ காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
  11. ↑ 1. சிவவாக்கியர் : சிவ : 203
  12. ↑ கடியலூர் உருத்திரங்கண்ணனார் :
    பெரும்பாணா: 28
  13. ↑ கபிலர் : புறம் : 110-2
  14. ↑ கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
  15. ↑ தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
  16. ↑ இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69
  17. ↑ தேரையர் : தேரையர் கரிசல்
  18. ↑ திருநாவுக்கரசர் : தேவாரம்
  19. ↑ கணைக்கால் இரும்பொறை : புறம் : 74-5
  20. ↑ கணிமேதையார் : ஏலா : 57-2
  21. ↑ பெருந்தலைச் சாத்தனார்: புறம்: 205-2
  22. ↑ நாலடியார்: நாலடி: 75-1
  23. ↑ தொல்காப்பியர் : தொல் : பொருள்-247
  24. ↑ கோவூர் கிழார் : புறம் : 68-10
  25. ↑ மாங்குடி மருதனார் : மது. கா : 66

நிறைவு

அறவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்