இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..!
நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம்.
‘ஆதி’ தமிழ்ச்சொல் அல்ல என நிறுவுதற்காக இரு பக்கங்களை ஒதுக்கிக் குழப்பியுள்ள செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகர முதலியில் இருந்தே ஆதி தமிழ்ச்சொல்லே என்பதற்கான விளக்கங்களைக் காணலாம்.
‘ஆதி’ என்னும் வடதமிழ்ச்சொல் மூலமே வடமொழியில் ‘ஆதி’ என வடிவு கொண்டதாகவும் வடமொழி தவிர ஏனைய மேலையாரிய மொழிகளில் ‘ஆதி’ என்னும் சொல்லாட்சி காணப்படவில்லை எனவும் இதில் குறிக்கப்பெற்றுள்ளது. ஆனால், மலையாளம், கன்னடம் முதலான தமிழ்க் குடும்ப மொழிகளில் ‘ஆதி’ என்னும் சொல்லாட்சி உள்ளது. எனவே, இச்சொல் தமிழ்தான்.
“பாவாணர் அகராதிக்கு அகரமுதலி எனப் பெயரிட்டார். ஆதி வடதமிழ்ச்சொல்லாதலின் தூய தென் சொல்லான முதலி என்பதை எடுத்தாண்டார்” என நூலில்(பக்.91) குறித்துள்ளனர். ஆதி வடதமிழ்ச்சொல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்நூலில், ஆதி என்பது வேரளவில் தமிழுக்குத் தன் சொல்லாயினும் தென்சொல்லன்று என்பதைப் பாவாணர் உறுதிப்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இச்சொல் வடதமிழ்ச்சொல்லாக இருந்தால் என்ன, தென்சொல்லாக இல்லாவிட்டால் என்ன, தமிழ்ச்சொல்தானே! இதில் வடக்கு என்ன? தெற்கு என்ன? தெற்கே குமரியில் இருந்து வடக்கே இமயம் வரை முன்பிருந்த தமிழ்நிலத்தில் எல்லாப் பகுதிகளிலும் தமிழ்ச்சொற்கள் இருப்பது இயற்கைதானே! அவற்றை வடக்கு, தெற்கு எனப் பிரிக்க வேண்டிய தேவை என்ன உள்ளது?
ஆதி முதல், ஆதி மூலம், ஆதியங்கடவுள், ஆதியந்தணன், ஆதியாழ், ஆதியுலா, ஆதியெழுத்து ஆகியவை தமிழ்ச்சொற்கள் என்ற முறையில்தான் செ.சொ.பே.முதலியில் குறிக்கப்பெற்றுள்ளன. அவ்வாறிருக்க இவற்றைக் குறிக்கும் ஆதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! சொல்லின் முதலில் குறிக்கப்பெறும் ஆதி என்னும் சொல் அகர+ ஆதி > அகராதி எனப் பின்னர் வரும்பொழுது மட்டும் எப்படி பிற மொழிச்சொல் லாகும்?
மேலும் இவை தமிழ்ச்சொற்களல்ல என்றால் அயற்சொல் மடலத்தில்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்ச்சொற்கள் மடலத்தில்தானே குறித்துள்ளனர். ஆக ஆதியை வலிந்து தமிழ்ச்சொலல்ல என்று நிறுவுவதில் தொகுப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் புரிந்து கொள்ளலாம்.
விண்ணில் தலைமையாயும் முதன்மையாயும் இருக்கும் சூரியன் ஆதித்தன் எனக் குறிக்கப் பெறுவது இயற்கையான ஒன்று. ஆனால் ஆதி என்பதைத் தமிழ்ச்சொல்லாக ஏற்க மனமின்றி ஞாயிறு > ஞாயிற்றன் > ஆயிற்றன் > ஆயித்தன் > ஆதித்தன் என வலிந்து பொருள் கற்பிக்கின்றனர்.
அறிஞர்கள் பலரும் ஆதி தமிழ்ச்சொல்லே என்று விளக்கியுள்ளனர். பாரதிதாசன், “ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. …ஆ-முதனிலை, தி -இறுதிநிலை செய்தி, உய்தி என்பவற்றிற் போல, ஆதி -முதன்மை “ என்கிறார் (குயில், 24.6.58).
சொல்லியவர் யார் எனப்பார்க்காமல் “மெய்ப்பொருள் காண்பதே அறிவு”. அறிஞர்கள் காலச்சூழலுக்கேற்ப முன்னர் ஏதும் தவறாகத் தெரிவித்திருப்பின், அது தவறு எனத் தெரிய வரும்பொழுது அதனை ஒப்புக் கொள்ளத் தயங்குவதில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலில் தொல்காப்பியரை ஆரியர் என்றார். அதற்கு அடிப்படையாக அவர் கூறிய தொல்காப்பிய நூற்பாக்கள் இடைச்செருகல்கள் என்பதைப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் விளக்கிய பின்னர், அவர் தமிழராகிய தொல்காப்பியரின் தமிழ்நூல் தொல்காப்பியம் என்பதை ஏற்றுக் கொண்டார். பேராசிரியர் இலக்குவனார் மாணவப்பருத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு எனக் கட்டுரை எழுதினார். பின்னர் அவரே அப்பொழுது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தவறாக எழுதி விட்டதாகவும் தொல்காப்பியர் காலம் கி.மு. 700 இற்கும் கி.மு.1000 இற்கும் இடைப்பட்டது என்றும் ஆராய்ந்து எழுதினார்.
தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகள் ‘வேதாசலம்’ என்னும் தம் பெயர் தமிழ் அல்ல என ‘மறைமலை’ என மாற்றிக் கொண்டவர். அவரே பின்னர், வேதம், சலம் ஆகியன தமிழ்ச்சொற்களே என நிறுவினார். ஆக, ஏதோ ஒரு சூழலில் தவறான விளக்கம் தரப்பட்டதை அவ்விளக்கம் தவறு என நாம் உணர்ந்த பின்னரும், எக்காலத்திற்கும் ஏற்க வேண்டிய தேவையில்லை.
‘ஆதி’ என்னும் சொல் தொல்காப்பியத்தில் ஓரிடத்திலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளில் 2 இடத்திலும் பிறவற்றில் 2 இடத்திலும் என 4 இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் 5 இடங்களிலும் மணிமேகலையில் 17 இடங்களிலும் சீவகசிந்தாமணியில் 26 இடங்களிலும் எனச் செவ்வியல் இலக்கியங்களில் இடம் பெற்ற செந்தமிழ்ச் சொல்லே ஆகும்.
தூய தமிழ்ச்சொற்களான ஆதி, பகவன் ஆகியவற்றைச் சமற்கிருதச் சொற்களாகத் தவறாகக் கருதுவதால், திருவள்ளுவரின் முதல் குறளே சமற்கிருத்தில் இருந்து உருவானது என ஆரியர்கள் தவறாகப் பழிக்கும் போக்கு இருப்பதையும் நாம் உணர வேண்டும்.
ஆதிமொழியாகிய தமிழ் மொழியில் உள்ள ‘ஆதி’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து போற்றுவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன்,
தினச்செய்தி, 28.07.2019
Leave a Reply