(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  641 – 657 இன் தொடர்ச்சி)

658. சாறுண்ணியியல்

Sapro என்னும் பழங்கிரேக்கச் சொல் அழுகிய, பதனழிந்த பொருள்களைக் குறிக்கிறது.

இங்கே சாறு என்பது நற்சாற்றினைக் குறிக்க வில்லை. பதனழிந்த அழுகிய பொருள்கள் வெளிப்படுத்தும் நீர்மத்தைக் குறிக்கிறது. இத் தகைய நீரினை உண்ணும் உயிரினங்களைப்பற்றிய துறை. எனவே, அழுகியபொருள் துறை என்று சொல்லாமல் சாறுண்ணி யியல் எனப்படுகிறது.

Saprobiology

659. சிதட்டியல்

பார்வையின்மையியல், குருட்டியல்  எனப்படுகின்றன.

நானும் முதலில் குருட்டியல் என்றே குறித் திருந்தேன். குருடு என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், தாழ்த்திக் கூறுவதாக எண்ணிப் பார்வையின்மை என்கின்றோம். இதனைச் சங்கக்காலத்தில் சிதடு எனக் குறித்தனர். சோழன் நலங்கிள்ளியிடம், பிறப்பில் எண்வகைப் பேரச்சம் உண்டு எனக் குறிப்பிடும்  உறையூர் முதுகண்ணன் சாத்தனார்  முதலில் சிறப்பில்லாத குருடு என்பதைச் “சிறப்பில் சிதடு” எனக் குறிப்பிட்டிருப்பார் (புறநானூறு 28.1.). எனவே, சுருக்கமாகச்

சிதட்டியல் – Typhlology / Typhology எனலாம்.

குருட்டுத்தன்மையைக் குறிக்கும் tyflós என்னும் கிரேக்கச்  சொல்லில் இருந்து இயல் / logy  என்பதைச்சேர்த்து   Typhology உருவானது.

Typhlology / Typhology

660. சிந்தியல்

பாக்கித்தானில் உள்ள சிந்துவின் வரலாறு, குமுகம், பண்பாடு, இலக்கியம்  முதலிய வற்றைக்  குறித்த ஆய்வுத் துறையாகும்.

1964இல் சிந்து பல்கலைக் கழகத்தில் சிந்தியல் நிறுவனம் நிறுவப்பட்டதன் மூலம் கல்வி யியலுக்குக் கொண்டு வரப் பட்டது.

நாம் கிணற்றுத் தவளைகளாக இருப்பதாலும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதாலும் பழந்தமிழர் சிறப்பை நம்மில் பெரும்பான்மையர் அறிவ தில்லை, அறிந்தவர்களும் பிறருக்கு உணர்த்துவது இல்லை. எனவேதான் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்ற ஆராய்ச்சி உண்மையை இப்பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் காண இயலவில்லை.

Sindhology

661. சிரிப்பியல்

gélōs, gélōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் சிரிப்பு.

Gelotology

662. சிரியா சித்தாந்தம்

Jineology(2)

663. சிலந்தி யியல்

எட்டுக்காலிகள் எனப்படும் சிலந்திகள், தேள்கள் மற்றும் அவை போன்ற பிற உயிரினங்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுத்துறையை எட்டுக்காலியியல் (Arachnology) என்கின்றனர். ஆனால் உண்ணிகள், சிற்றுண்ணிகள் போன்றவற்றை எட்டுக்காலி யியலில் பொதுவாகச் சேர்ப்பதில்லை.  இவை தொடர்பான ஆய்வுத்துறை துறை மென்னுண்ணியியல் எனப்படுகின்றது. இத்துறையில் எட்டுக்காலிகள் முழுமையும் ஆராயப்படாததால் சிலந்தி வகைகளைக் குறிக்கும் வகையில் சிலந்தியியல் எனக் குறித்துள்ளோம்.

Arachnology 

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000