(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 22 தொடர்ச்சி

 

ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துகளை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும் கட்டிகளும் போன்றது. பாக்கியத்தின் அறிவு வளர்ச்சி, உடம்பின் இயற்கையான வளர்ச்சி போன்றது. இயற்கையான வளர்ச்சியில் எவ்வளவு எடை மிகுந்தாலும் சுமையாகத் தோன்றுவதில்லை; உடம்புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுமே தோன்றும்.

ஆனால் செயற்கையான சிறு கட்டியும் உடம்புக்கு வேண்டாத துன்பமாகத்தான் தோன்றுகிறது. பாக்கியத்தின் அத்தகைய அறிவு வளர்ச்சி இவ்வளவு குறைந்த காலத்தில் ஏற்பட்டதை எண்ணி எண்ணி வியப்படைந்தேன். கணவரைப் பற்றிக் குறை கூறிய தங்கையின் உள்ளம் இரும்பாக இருந்தது. வேறு எந்தப் பெண்ணிடமாவது தங்கை அவ்வாறு கணவரின் குறையைச் சொல்லியிருந்தால், அந்த இரும்பு நெஞ்சம் துருபிடித்துக் கெடுமாறு செய்திருப்பார். என்னிடம் சொல்லியிருந்தாலும், கணவர்மேல் மேலும் வெறுப்பு வளருமாறுதான் செய்திருப்பேன். பாக்கியம் அந்த இரும்பைப் பொன்னாகுமாறு செய்துவிட்டாரே என வியந்தேன். அடுத்துத் தங்கை பேசிய பேச்சிலிருந்து அந்த இரசவாத வித்தை நடைபெற்றுவிட்டதை அறிந்தேன்.

“நீ சொல்வது சரி அக்கா. அவர் கெட்டவர் அல்ல. ஆனால் நாம் மற்றப் பெண்களோடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங்களுக்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்றாள் தங்கை.

“பழகு, போ. ஆனால் நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, குயூரியம்மையார், கத்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியைப் பார்த்து உணர்ந்துவிட்டவள் என்ற உயர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப்போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே” என்றார் பாக்கியம்.

யாரோ ஒருவர் கொட்டாவி விட்டது கேட்டது. என் மனைவியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். அவளுடைய மூளை இந்த அறிவுரையின் சுமை தாங்காமல் சோர்ந்து போயிருக்கும் என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

“என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!” என்றார் பாக்கியம்.

“போய்த் தூங்கு அண்ணி” என்றாள் தங்கை.

“துக்கம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்குப் பயமாக இருக்கிறது! வாழ்க்கை இவ்வளவு தொல்லையாக இருக்கிறதே!” என்றாள் மனைவி.

பாக்கியம் சிரித்தபடியே பேச்சுத் தொடங்கினார்: “பயமாகவா இருக்கிறது? நீ இப்போது படிக்கிற நூல்களை விடாமல் படித்துக் கொண்டு வா! இன்னும் ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பார். மணிமேகலைக்கு இப்படிச் சொல்லி சொல்லிப் படிக்க வைத்ததனால்தான், இப்போது ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்கிறாள்; சொல்வது விளங்குகிறது. நீயும் படி, உனக்கும் தெளிவு வரும்; பயமே இருக்காது” என்றார்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பேச்சு முடிந்ததோ என்று எழ எண்ணினேன். மறுபடியும் அவரே பேசினார்: “பயமே இல்லாமல் இருக்கலாம். சுருக்கமான வழி சொல்லட்டுமா? இங்கிருந்து வேலூர்க்குப் போகணும். நீ தனியே போனால் எவ்வளவு பயம், கவலை! உன் அப்பாவுடன் போகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பயம் உண்டா? கவலை உண்டா? அப்பா போகிற வழியில், அவர் பின்னே அடிவைத்து நடந்துகொண்டே இருக்கிறாய். வழியைப் பற்றியும் சிந்திப்பதில்லை. வழியில் கல்லும் முள்ளும் உண்டா என்றும் பார்ப்பதில்லை.

திருடர்கள் வந்து அப்பாவை அடித்தால் என்ன செய்வது என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாம் அப்பாவின் பொறுப்பு. அவர் நடக்கிறார். அவர் பின்னே நீ நடக்கிறாய் அவ்வளவுதான். இல்வாழ்க்கையில் அப்படி நடக்கிற பெண்களுக்கு ஒரு கவலையும் இல்லை; போராட்டமும் இல்லை. கணவர் நல்லவராக, வாழ வல்லவராக வாய்த்துவிட்டால் போதும்! மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம்.

அப்போது பட்டு வேண்டுமா வேண்டாவா, வைரம் வேண்டுமா வேண்டாவா, திருவிழாவுக்குப் போவதா இல்லையா, சினிமாவுக்குப் போவதா இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்தலாம். அவர் அழைத்தால் போவது, இல்லையானால் அமைதியாய் வீட்டில் இருப்பது. ஆனால் இது எல்லோராலும் முடியாது. இப்படி வாழ்வதற்கு எவ்வளவோ பண்பாடு வேண்டும்! எவ்வளவோ தியாக மனப்பான்மை வேண்டும். தனக்கு என்று ஒரு சிறு ஆசையும் இல்லாமல் அற்றுப்போன மனநிலை யாருக்கு வரும்? கண்ணகியிடத்தில் பார்த்தோம்! கத்தூரிபாவிடத்தில் பார்த்தேன். வேறு யாரிடத்தில் பார்க்கிறோம்” என்றார்.

“படிக்காத பெண்கள், பயங்காளிப் பெண்கள் அப்படி அடங்கி நடக்கலாம். அண்ணியைப் போல் பத்தாவது படித்த பெண் அப்படி ஏன் அடங்கி நடக்கவேண்டும்?” என்றாள் மனைவி.

“பயந்து அடங்கி நடப்பது வேறே. அது தியாகம் அல்ல. அப்படிப் படிக்காத பெண்கள் பயந்து நடப்பதும் காணோமே! கணவன் இல்லாதபோது விருப்பம் போல் நடக்கிறார்கள்! அந்த வாழ்க்கையில் உண்மை இல்லையே! அது ஏமாற்றுகிற வாழ்க்கை, உள்ளத் தூய்மை இல்லாத வாழ்க்கை! போலி வாழ்க்கை! கணவனுக்குத் தெரியாமல் குழந்தைக்கு மந்திர தந்திரங்கள் செய்வது, காட்டேறி பூசை போடுவது, கணவனுக்கு தெரியாமல் சிறுவாணம் பிடித்து வட்டிக்குக் கொடுப்பது, இவை போன்ற உண்மை இல்லாத வாழ்க்கை அது. அதனால் ஒரு பயனும் இருக்காது” என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே “மணிமேகலை! பெண்களில் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்களில் பலர் அப்படி இருக்கிறார்கள்; தாங்களாக ஒரு வழி தேடிக்கொள்ளாமல், தங்கள் தலைவர் ஒருவர் காட்டிய வழியில் கண்ணை மூடி நடப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கவலை குறைகிறது; ஒரு குறையும் இல்லாமல் தொண்டு செய்யவும் முடிகிறது” என்றார்.

“ஆமாம்” என்றாள் தங்கை, தொடர்ந்து “சினிமாவுக்கு அடிக்கடி போய்க் காசு செலவழிக்க நமக்கு வசதி இல்லை என்கிறார். சரி என்று நானும் அதைக் குறைத்துக் கொண்டேன். குடும்பக் கடமைகள் பல இருக்கும்போது, சடங்குகளிலும் பூசையிலும் மணிக்கணக்காச் செலவழிக்காதே என்கிறார். ஓய்விருக்கும்போது பக்திப் பாட்டுகளைப் படித்தால் போதும் என்கிறார். வெள்ளிக்கிழமைப் பூசையையும் குறைத்துக் கொண்டேன்” என்றாள்.

“வீடு வாயில் முதலியவற்றைத் தூய்மையாக்குவதற்கு வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாள்” என்றார் பாக்கியம்.

“அதை எல்லாம் அவர் தடுக்கவில்லை. தூய்மையை அவர் மிக விரும்புவார்” என்றாள் தங்கை. அப்போது தங்கையின் பேச்சுப் போக்கைக் கேட்டால் கணவர் மேல் ஒரு குற்றமும் காணாதவள் பேசுவதுபோல் இருந்தது.

பாக்கியம் தவிர வேறு பெண்களிடம் என் தங்கை அகப்பட்டிருந்தால், மேலும் மேலும் தூபம் இட்டு வெறுப்பையே வளர்த்து அவளுடைய மனத்தைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழ்படுத்தியிருப்பார்களே என்று எண்ணினேன். தங்கைக்கும் மனைவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய்த்தது எவ்வளவு நன்மை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

தங்கையும் கயற்கண்ணியும் சந்திரனுடைய தங்கை கற்பகமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சிறுமியராக இருந்தபோது, ஒன்றாகக் கூடி ஆடிக் குலாவியது நினைவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயனை இவர்கள் இருவரும் பெறும்போது, கற்பகமும் பெறுவதற்கில்லையே என்று வருந்தினேன்.

மறுநாள் காலையில் பல் துலக்கியதும், தோட்டத்தின் பக்கம் சென்றேன். அங்கே பாக்கியம் அமைதியாக படித்துக் கொண்டிருந்ததையும் ஒரு குறிப்பில் எழுதிக் கொண்டிருந்ததையும் கண்டு பேசாமல் திரும்பினேன். பாத்திரம் துலக்குதல் முதலிய எல்லாக் கடமைகளையும் முடித்து அவ்வளவு காலையில் படிக்க ஓய்வு கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். கூடத்தில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். முதலில் கிடைத்தது தாயுமானவர் பாடல். அதில் அங்கங்கே ஓரத்தில் கோடிட்டிருந்ததைக் கண்டேன். திருக்குறளிலும் அவ்வாறே கண்டேன். அப்போது தங்கை வந்து, “என்ன அண்ணா பார்க்கிறீர்கள்?” என்றாள்.

“இந்தப் புத்தகங்களில் ஏன் இப்படிக் கோடு போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“நான் போட்ட கோடுகள் அல்ல, அக்கா போட்டார்கள். கோடு போட்ட பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி அப்படிச் செய்திருக்கிறார்கள்” என்றாள்.

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக்கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன. செய்யுள் வடிவமான மூலத்தைப் படிப்பதற்கு வேண்டிய இலக்கியப் பயிற்சி இல்லாத காரணத்தால், பாக்கியம் இந்த உரைநடைக் கதைகளை மட்டும் படிக்க முடிகிறது.

இலக்கியப் பயிற்சி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினேன். இன்னும் பல உரைநடை நூல்களும் இருக்கக் கண்டேன்.

அன்று இரவு உணவுக்குப் பிறகு நான் திண்ணைமேல் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் எப்படியோ பட்டுப்புடவை பற்றிய பேச்சு நடப்பது கேட்டது. மெல்ல எழுந்து சன்னல் பக்கம் உட்கார்ந்து கேட்டேன். எனக்கு முதலில் கேட்டது மனைவியின் குரல்தான்.

“எல்லாரும் பட்டு உடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால், பட்டு நெசவாளர்கள் என்ன ஆவார்கள்? பட்டு வியாபாரிகள் என்ன ஆவார்கள்?” என்றாள் மனைவி.

அம்மா சிரிக்க, மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு