கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
281. உள்ளகவரைவி – tomograph: குறிப்பிட்ட திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம்.
282. உளநிலை வரைவி – psychograph : ஆவி தெரிவிக்கும் தகவல்களைப் பதிவு செய்யும் கருவி என்பதால் ஆவி எழுத்து வரைவி எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆவி என்பது உளநிலை மாறுபாடு என்பதால் உளநிலை வரைவி என்பது பகுத்தறிவாளர்களும் ஏற்கும் சொல்லாக அமையும்.
283. உளைவு மின்கடவுமானி – psychogalvanometer : மன உளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் மாறுதல் விளைவுகளைப் பதிவு செய்யும் மின்கடவுமானிக் கருவி. உள மின்கடவுமானி என்று சொல்வதைவிட உளைச்சல் மின்கடவுமானி >உளைவு மின்கடவுமானி எனலாம்.
284. உறழ்மானி – interferometer : இடையீட்டுத் தடுப்பு மூலம் ஒலயிலைகளின் வேகத்தை அளக்கும் கருவி (-ம.368). ஒலியலை அளவுமானி, தலையீட்டுமானி, அலைக் குறுக்கீட்டுமானி, குறுக்கீட்டு விளைவு அளவி, குறுக்கீட்டுவிளைவுமானி என வெவ்வேறு கலைச்சொற்களைக் கையாளுகின்றனர். உறழ்தல் என்றால் இடையிடுதல் என்று பொருள். எனவே, இடையீட்டுமானி என்னும் பொருளில் சுருக்கமாக உறழ்மானி எனலாம்.
285. உறழ்மானி நீரொலிசெலுத்தி – interferometeric hydrophone: உறழ்மானிநீர்ஒலி செலுத்தி > உறழ்மானி நீரொலிசெலுத்தி
286. உறிஞ்சலைமானி – absorption wave meter : நிகழ்வெண்ணையும் அலை நீளத்தையும் அளவிடப் பயன்படும் கருவி(-ம.10). உறிஞ்சு அலைமானி > உறிஞ்சலைமானி
287. உறிஞ்சன்மானி – potometer / transpirometer : பயிரினங்கள் ஒளிச்சேர்க்கைக்காகவும் நீராவிப்போக்கிற்காகவும் உறியும் நீரின் அளவைக் கணக்கிடும் கருவி. ஆவி வெளியிடல் அளவி, உறிஞ்சன்மானி, நீராவிப்போக்குமானி எனக் கூறுகின்றனர். நீராவிப்போக்குமானி என்றால், மண் நீராவிப்போக்குமானி (soil evaporimeter) என்று கருத நேரிடலாம். எனவே, உறிஞ்சன்மானி என்றே சொல்லலாம்.
288. உறிஞ்சு ஈரமானி – absorption hygrometer
289. உட்கவர் ஈரமானி – assmann hygrometer : மையக்குழலின் இருபுறமும் வெப்பமானி உடைய ஈரமானி. உட்கவரும் ஈரத்தை அளவிடுவதால் உட்கவர் ஈரமானி எனலாம்.
290. உறிஞ்சு உமிழ் தழல்மானி absorption-emission pyrometer
291. உறிஞ்சு நிறமாலை ஒளிமானி – absorption spectro photometer
292. உறிஞ்சு விசைமானி – absorption dynamometer
293. உறிஞ்சுமைமானி – absorptiometer/ absorption meter
294. உறிஞ்சுமையளவி – absorption gauge
295. உறுநுண்மானி – ultramicrometer : உறுநுண்ணளவைமானி (-செ.) அங்குலத்தின் பேராயிரத்தில் (பத்து இலட்சத்தில்) ஒரு கூறு அளவையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி. சுருக்கமாக உறுநுண்மானி எனலாம்.
296. உறுப்புமானி – oncometer : உடலின் உள்ளுறுப்புகளின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் கருவி.
297. உறை நிலை ஈரமானி – frost-point hygrometer
298. உறைநிலை நோக்கி – cryoscope : உறை நிலையை அறுதியிட்டு வரையறுக்க உதவும் கருவி.
299. ஊக நீர்ம மட்டமானி – inferential liquid-level meter
300. ஊகப்பாய்மமானி – inferential flow meter
301. ஊசல் உலவைமானி – pendulum anemometer
302. ஊசற்சுழல்நோக்கி – pendular gyroscope : இதன் சுழல் அச்சு கிடைமட்டத்தில் இருக் கவேண்டும் என்பதற்காக எடையால் கட்டுப்படுத்தப்படும். எனவே, இதனை எடை தொங்கு சுழல்காட்டி (-இ.) என்கின்றனர். அமைப்பு முறையில் இவ்வாறு கூறுவதைவிட, ஊசற்சுழல் நோக்கி எனச் செயல்பாட்டுமுறையில் கூறலாம்.
303. ஊடாமானி – opacimeter : ஒளி ஊடுருவிச்செல்லா நிலையை மதிப்பிட உதவுவது.
304. ஊடுபரவுமானி – osmometer : ஊடுகலப்புஅளவுமானி : ஊடுகலப்பு விசையை அளவிடுவதற்கு அல்லது முகர்வுத்திறனின் கூர்மையை அளவிடுவதற்குப் பயன்படும் சாதனம்.(-மரு.777) ஊடுபரவுமானி ( -மூ. 480). ஊடுபரவுமானி என்பதே சுருக்கமாக உள்ளது.
305. ஊடுபுகல்மானி – penetrometer: ஊடுருவல்மானி- எக்சுகதிர்களின் ( ங – கதிர்) ஊடுருவும் திறனை அளக்கும் கருவி (-ம.க.பே.820); ஊடுருவுமானி -திடப்பொருள்களின் மேற்பரப்பில் ஊடுருவும் திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி (-ம.474); ஊடுருவல் திறனளவி (-இ.); ஊடுருவல்மானி (இறைச்சி கடினஅளவி) (-இ.);
306. உட்புகும் அளவி, ஊடுபுகல்மானி, வன்மைசோதியி, ஊடுருவன் மானி (-ஐ.);
307. நீர்ஊடுருவுமானி(infiltrometer), ஒளிஊடிமானி(transmissometer) ஆகியன உள்ளமையால், ஊடுபுகல்மானி என்பதைப் பயன்படுத்தலாம். இவற்றுள், உறுதியான அல்லது பொருட்கள் நிலைத்தன்மை அளவிடும் கருவி என்ற வகையில் இறைச்சி கடினஅளவி எனப்படுகின்றது. இதுவும் ஊடுபுகல் அடிப்படையில் அளவிடப்படுவதால் இதனைப் பொதுச்சொல்லாகவே ஏற்கலாம்.
308. ஊ-மானி – r meter : ஊடுகதிர்களின் செறிவை அளவிடும் கருவி. ஊடுகதிர்மானி > ஊ-மானி எனலாம்.
309. எடை வெப்பமானி – weight thermometer
310. எடைக் காற்றழுத்தமானி – weight barometer
311. எடையிடு பொசிவுமானி – weighing lysimeter
312. எண் வண்ணமானி – tag-robinson colorimeter : மசகு எண்ணெய், பிற நிலஎண்ணெய் வகைகளின் நிறத்தை உறுதி செய்ய உதவும் கருவி. எண் முறையில் பதிவாகும்.
313. எண்ணல் திரிபளவி – counting strain gauge
314. எண்ணல் வீதமானி – counting rate meter
315. எண்ணிமானி – ratemeter : மின்னணு எண்ணிக்கை விகிதத்தை அளவிடும் கருவி.
316. எண்ணுகைத் தொலைநோக்கி – counter telescope : எரிதிறனையும் கோணப் பகிர்வையும் அளவிடுவதற்கு அமைக்கப்பட்ட கருவி. இதில், மின்துகள் கதிரியத் துணுக்குகளை எண்ணுவதற்கான இரண்டு விகித எண்ணிகள் உள்ளன. துகள்எண்ணித் தொலைநோக்கி என்பதன் சுருக்கமாக எண்ணித் தொலைநோக்கி எனலாம். எண்ணுகைத் தொலைநோக்கி ( -இ.) எனக்கூறப்படுவதால், இதையே ஏற்கலாம்.
317. எண்ணெய் வளியழுத்தமானி – oil manometer
318. எண்ணெய்மானி – oleometer / elaeometer : எண்ணெய் ஒப்படர்த்தியை அளக்க உதவும் கருவி. எண்ணெய் ஒப்படர்த்தி அளவி (-இ.), எண்ணெய்த் தூய்மை அறிகருவி (-ஐ.ஒ.); எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி (-செ.ப.), இடலை (ஆலிவு) எண்ணெய், வாதுமை (almond) எண்ணெய் ஆகியவற்றின் அடர் எண்ணை வரையறுப்பதன் மூலம் எண்ணெய்த் தூய்மையை அளவிடும் கருவி. சுருக்கமாக எண்ணெய்மானி
319. எண்ணெயடர்த்திமானி – acrometer
320. எண்ணெயழுத்தஅளவி – oil pressure gauge
(பெருகும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply