கலைச்சொல் தெளிவோம்! 160. விலங்கு வெருளி-Zoophobia; 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia
கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia
விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர்.
விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
விலங்கு வெருளி-Zoophobia
கலைச்சொல் 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia
சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது.
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல (நற்றிணை : 244.1)
மாரி வானிலிருந்து மண்ணில் விழுவது நன்மைக்குத்தான். ஆனால் மக்கள் கீழே விழுவது நன்றன்றல்லவா?
வீழ்(83), விழ்க்கும்(3), வீழ்க்குவன்(1). வீழ்க்கை(1), வீழ்த்த(4), வீழ்த்து(7), வீழ்தரு(1), வீழ்தும்(1), வீழ்ந்த(17), வீழ்ந்தன்று(6), வீழ்ந்தன(3), வீழ்ந்தார்(1), வீழ்ந்தான்(1), வீழ்ந்து(6), வீழ்ந்தென(13), வீழ்ந்தேன்(1), வீழ்ந்தோர்(4), வீழ்நர்(1), வீழ்ப்ப(3), வீழ்பவன்(1), வீழ்பு(2), வீழ்மின்(1), வீழ்வார்(7), வீழ்வு(2), வீழ(8), வீழா(3), வீழுநர்(2), வீழும்(6) என வீழ்தல் தொடர்பான சொற்களும் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. காதல் வயப்படுவதைக் காதலில் வீழ்தல் என்று சொல்வது போல், விருப்பத்தை வெளிப்படுத்தும் பொருளிலும் சில இடங்களில் வந்துள்ளன. இவற்றுள் வீழ்பு என்னும் சொல்லைக் கொண்டு புதிய கலைச்சொல் படைக்கலாம்.
கீழே விழுந்து விடுவது பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம்
வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply