கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf
28. குறுமி- dwarf
ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1), குறுகி(21), குறுகிய(2), குறுகின்(4), குறுகினம்(2), குறுகினள்(1). குறுகினேம்(1), குறுகு(1),குறுகுக(1), குறுகும்(2), குறுகும்காலை(1), குறுநர்(3), குறுநரி(2), குறுநறுங்கண்ணி(1), குறுநிலமன்னர்(1), குறும்(135), குறும்படை(1), குறும்பர்(1), குறும்பறை(1), குறும்பிடி(1), குறும்பொறி(1), குறும்பொறை(1), குறுமக்கள்(1), குறுமக(1), குறுமகள்(73), குறுமகளிர்(1), குறுமாக்கள்(10), குறுமொழி(1) எனக் குறு என்னும் சொல்லாட்சி 56 இடங்களிலும் குறும் என்னும் சொல்லாட்சி 135 இடங்களிலும் வருகின்றன. பல சொற்கள் உள்ளமைபோல் குறுகிய அளவில் உள்ள இதனைக் குறுமீன் எனச் சொல்லிச் சுருக்கமாகக் குறுமி எனலாம்.
குறும்படை என்பதுபோல் குறுநிலையில் உள்ளதைக் குறிக்கும்வகையில் குறு(ம்)மீனான இதனைக் குறுமி எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். குறுங்காலம், குறுந்திட்டம் முதலான பல சொல்லாட்சிகள் இப்பொழுது நடைமுறையில் உள்ளதால் இச் சொல்லைக் கையாளுவதில் எச்சிக்கலும் இல்லாமல் எளிமையே இருக்கும்.
குறுமி- dwarf
இதே போல் மனிதர்களைக் குறிக்கையில் குறளன் என்றும்
சிறு கதவைக் குறிக்கையில் குறுங்கதவு-dwarf door என்றும்
வேரைக் குறிக்கையில் குட்டைவேர்-dwarf root என்றும்
தண்டினைக் குறிக்கையில் குறுந்தண்டு-dwarf shoot என்றும்
நோயைக் குறிக்கையில் மஞ்சள் குறுக்கிநோய்-yellow dwarf என்றும் சொல்லலாம்
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply