கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer
60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer
ஒப்ப(9) என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஒப்ப(17), ஒப்பது(1), ஒப்பார்(2), ஒப்பின்(1), ஒப்பின(1),ஒப்பினை(1) என்பன போன்று ஒத்த என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவர் கருத்தும் ஒப்ப இருக்கும் உடன்பாட்டையும் பின்னர் இது குறித்துள்ளது. இதனடிப்படையில் ஒப்புமொழி என்பது அக்ரிமெண்ட்டை-agreement-குறித்துள்ளது.
இச்சொல்லிற்கு வேளாணறிவியலிலும் கால்நடைஅறிவியலிலும் உடன்படிக்கை என்றும், மொழியியலில் உடன்பாடு என்றும், ஆட்சித்துறையில்உடன்பாடு, உடன்படிக்கை, இசைவு, இணக்கம் என்றும், தொல்லியல்துறையில் இயைபு, ஒப்பந்தம் என்றும், மனையியலில் இசைவுப்பத்திரம், உடன்படிக்கை என்றும் வெவ்வேறாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்திலும் பொதுவாக ஒப்புமொழி என்றே குறிப்பிடலாம்.
ஒப்புமொழி-agreement
உடன்படும் கருத்தினை ஒப்புமொழி என்பதுபோல் உடன்படும் மாறுதலை ஒப்புமாறுதல் என்று சொல்லலாம். மாறு(102) என்பதும் சங்கச் சொல்லே. mutual transfer என்பதற்கு ஆட்சித்துறையில் ஒருவர்க்கொருவர் இசைவான மாற்றம் என வழங்குகின்றனர். கருத்தொருங்கு மாறுதலைச் சொல்லாகக் குறிக்காமல், தொடராகக் குறிப்பின் பயன்பாட்டில் நிலைக்காது. இருவரும் ஒப்புக் கொண்டு வேண்டி ஏற்கின்ற மாறுதலை ஒப்புமாறுதல் என்பதே சுருக்கமாக அமையும்.
ஒப்புமாறுதல்-mutual transfer
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply