kalaichol-thelivoam61. பெயர்வுக் காலம்-transit period

  பெயர்வு

ஊர்வயின் பெயரும்பொழுதில் (அகநானூறு : 64.13)

எக்கண்டு பெயரும்காலை (அகநானூறு : 318.11)

அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால் (கலித்தொகை :108.5)

பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன் (குறிஞ்சிப்பாட்டு : 243)

பந்தொடு பெயரும் பரிவில்லாட்டி (நற்றிணை :140.7)

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது (புறநானூறு : 253.1)

  இடப் பெயர்வு சங்க இலக்கியங்களில், பெயரும்பொழுது (1), பெயரும்காலை (1), பெயருங்கால் (1), பெயரின்(6), பெயரும் (38), எனவும் எதிர்மறையில் பெயராது (3) எனவும் குறிக்கப்பெற்றுள்ளன. (ஒருவருடைய பெயர் என்னும் பொருளிலும், பெயரிய என்றும், பெயரும் என்றும் கையாளப்பெற்றுள்ளன.) செல்லுதல் அல்லது போதல் அல்லது மீளுதலில் இடைநேரச் செயல்பாட்டை (இடப்) பெயர்வு எனக் குறித்தலே மிகச் சரியாகும். எனவே,

பெயர்வு-transit எனக் குறித்தல் வேண்டும்.

  இப்பொழுது ஆட்சியியலில் transit pay-இடமாற்ற இடைக்கால ஊதியம், transit period-இடமாற்ற இடைக்காலம், transitional provisions-இடமாற்ற இடைக்கால ஏற்பாடுகள் எனச் சொல்லப்படுகின்றன. புரொவிசன்/provision என்பதற்கு ஆட்சியியலில் ஒதுக்கீடு, வழிவகை, மளிகைப்பொருள் என்றும், மனையறிவியலில் ஒதுக்கீடு என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இங்கு வழி வகை என்பது தவிர பிற பொருள் முழுமையான பொருளைத் தராது. வழிவகை என்பது ways and means என்னும் பொருளைக் குறிப்பதால் அதனையும் தவிர்த்தல் நலம்.

  சிறுபாணாற்றுப்படையில் நடைப்பரிகாரம் என்பது வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைக் (Means of livelihood) குறிக்கின்றது.

நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை (சிறுபாணாற்றுப்படை : 104-105)

  யாழ்ப்பாண அகராதி பயணக் காலத்தில் வேண்டிய பொருள்களைக் (Things or provisions necessary for a journey) குறிக்கின்றது. எனவே, நடைப்பரிகாரம்-provisions என்பது சரியாக இருக்கும். செலவு எனச் சங்கக்காலத்தில் பயணத்தையே குறித்துள்ளனர். செலவுக் காலத்தில்-பயணத்தில்-மேற்கொள்ளும் உணவு முதலியவற்றிற்கான படிச்செலவு செலவுச்சிற்றாயம் எனக் கையாளப்பட்டுள்ளதை வின்சுலோவின் அகராதி மூலம் அறியலாம். எனவே transitional provisions என்பதற்குப் பெயர்வுச் சிற்றாயம் என்றும் சொல்லலாம். ஆனால், ஆயம் என்பதில் பொருள் குழப்பம் கொள்ளாமல் சிற்றாயம் என்பதைச் சரியான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும். படைத்துறையினர் முதலான சீருடைத்துறையினருக்கான transitional provisions என்பதைப் பெயர்வுச் சிற்றாயம் என்றும், ஒரு நோக்கத்தின் பொருட்டான நடைப்பயணம், வழிப்பயணம் முதலானவற்றிற்கான transitional provisions என்பதை நடைப்பரிகாரம் என்றும், பொதுவான transitional provisions என்பதைப் பெயர்விடை ஏந்துகள் என்றும் குறிக்கலாம்.

பெயர்விடை ஊதியம்-transit pay

பெயர்வுக் காலம்-transit period

பெயர்வுச் சிற்றாயம்/ நடைப்பரிகாரம்/பெயர்விடை ஏந்துகள்-transitional provisions

 

– இலக்குவனார் திருவள்ளுவன்