கலைச்சொல் தெளிவோம் 62. அடர்-blade
அடர்
அடர் என்பது மெல்லிய தகட்டையும்(thin, flat metal plate) குறிக்கும்; பூவின் மெல்லிதழையும்(flower petal) குறிக்கும்.
அழல்புரிந்த அடர் தாமரை (புறநானூறு: 29:1) (பொன் தகட்டால் ஆகிய தாமரை)
நுண்ணுருக்கு உற்ற விளக்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் : 4) (உருக்கி அடரால் செய்யப்பெற்றது வெண்கலத்தால் ஆகிய தாளம்)
அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச் (கலித்தொகை : 22:19) (பொன்தகடு போல் விளங்குவது அழகிய சுணங்கு)
அடர்செய் ஆய்அகல் சுடர்துணை ஆக (அகநானூறு : 19:17) (தகட்டால் அகல்விளக்கு செய்தனர்)
இவ்வரிகளில் தகடு என்னும் பொருளில் அடர் என்னும் கலைச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர்.
பிளேடு(blade) என்பதற்கு வேளாணியல், பொ.தொ.நு.வியல், கானியல், மொழியியல், இயற்பியல் ஆகியவற்றில் அலகு என்றும், வேளாணியலில் கூடுதலாகக் கத்தி என்றும், கானியலில் இலை அலகு என்றும் பயன்படுத்துகின்றனர். அலகு என்பது பறவையின் மூக்கு, ஓர் அளவு என்ற முறையில் கையாளப்படுவதால், வேறு சொல் பயன்படுத்தப்படுவதே சிறப்பாகும்.
எனவே, பூவிதழ்களைப் போல் பிரிந்தும் இணைந்தும் அமைந்துள்ள இறக்கை என்றும் கூறப்படுகின்ற, விசிறியின் பிரிவாக உள்ள fan blade என்பதற்கு அடர் என்பதே பொருத்தமாக அமைகின்றது. (விசிறியின் அடர்கள் சுழல்வனவேயன்றிப் பறப்பன அல்ல; எனவே, இறக்கை பொருந்தாது.)
அடர்-blade
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply