கலைச்சொல் தெளிவோம்! 78.வெருளி-phobia
78.வெருளி-phobia
அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்
ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது. போபியா(phobia) என்றால் அளவிற்கு மீறிய பேரச்சம் என அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒற்றைக் கலைச்சொல்லாக அமையாமல் பொருள் விளக்கமாக அமைவதால் இச்சொல்லின் அடிப்படையிலான பிற கலைச்சொற்கள் நெடுந்தொடராக அமைந்து பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றன. தமிழ் நெடுந்தொடர்களைவிட அயல்மொழியின் சுருக்கச் சொற்களே பயன்பாட்டில் நிலைத்து விடுகின்றன. எனவே, தமிழ் ஆர்வலர்கள்கூடத் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டைக் கூறுவதில் பயனின்றாகிறது. எனவே, சுருங்கிய செறிவான கலைச்சொற்களையே நாம் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்; புத்தாக்கம் புரிய வேண்டும்; பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் நாம் ஆராயலாம்.
அச்சம் என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். அச்சம் என்னும் சொல்வகைக்குப் பிங்கல நிகண்டு 19 சொற்களையும், ‘ஒரு சொல்-பல்பொருள்’ வகையில் அகத்தி, பயம் என்னும் இரு சொற்களையும் குறிப்பிடுகின்றது. 19 வகை பின்வருமாறு
உருமும், உருவும், உட்கும், பனிப்பும்
வெருவும், புலம்பும் வெறியும் பயமும்
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும்
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும்
கவலையும் அடுப்பும் கலக்கமும் அச்சம் (பிங்கலநிகண்டு 1852)
இவற்றுள் வெரு என்னும் சொல்லின் அடிப்படையிலான வெருள், வெருள்பு, வெரூஉ, வெரூஉதல், வெரூஉதும், வெரூஉம் முதலான சொற்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
வெருள் ஏறு பயிரும் ஆங்கண் (அகநானூறு : : 121:14)
வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம் (கலித்தொகை : : 43:12)
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை (பொருநர் ஆற்றுப்படை: 171)
அலமரல், ஆயிடை, வெரூஉதல் அஞ்சி (குறிஞ்சிப் பாட்டு :: 137)
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம் (பெரும்பாண் ஆற்றுப்படை: 227)
வெருள் என்னும் சொல்லின் அடிப்படையிலான வெருளி என்னும் சொல்லைப் பின்வருமாறு காப்பிய இலக்கியங்களிலும் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
வெருளி மாடங்கள் (சீவக. 532)
வெருளி மாந்தர் (சீவக. 73).
பெருங் குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84)
எனவே, சங்கச் சொல்லான வெருள் என்பதன் அடிப்படையிலானதே இச்சொல்லும்.
வெகுள்வதன்அடிப்படையிலான வெகுளி போல், வெருள்வதன் அடிப்படையில், வெருளி என ஒருவரை அச்சுறுத்தி வெருட்டுகின்ற நோயைக் குறிக்கலாம்.
வெருளி-phobia
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply