சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 541-545
(தமிழ்ச்சொல்லாக்கம் 536-540 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 541-545
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
541. Mayor – தலைவர்
அந்நாளில், கல்கத்தா நகரபரிபாலன (முனிசிபல்) சபையின் தேர்தலில் சுயராச்சிய கட்சியினரே வெற்றி பெற்றனர். இதுகாறும் சட்ட சபையில் பக்கத்துணையின்றி அல்லலுற்ற சுயராச்சிய கட்சியினர், இப்பொழுது கல்கத்தா நகரபரிபாலன சபையின் தேர்தலில் எல்லாம் சுயராச்சியமயமே யாக்கினர். அவ்வாறு வெற்றி பெற்ற சுயராச்சிய கட்சியினர், தேசபந்து சித்த ரஞ்சன தாசரையே அந்தச் சபையின் தலைவ (மேய)ராகத் தேர்ந்தெடுத்தனர்.
நூல் : தேசபந்து விசயம் (1925) பக்கம் – 86
நூலாசிரியர் : ம. க. சயராம் நாயுடு
★
542. Skylights – வானவெளிச்சங்கள்
அந்த வீட்டின்மாடியில் நேர்த்தியான ஓர் அறை இருந்தது. அதில் சன்னல்களும் வானவெளிச்சங்களும் (Skylights) தேவையான மட்டும் அமைக்கப்பட்டிருந்த படியால் காற்றும் வெளிச்சமும் தட்டில்லாமல் வந்தன.
நூல் : நாகரீகப் போர் (1925) அதிகாரம் 2 – வீரனின் வியாகுலம், பக்கம் -9
நூலாசிரியர் : பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்.எல்.டி.
★
543. Sky Scrapers – ஆகாயச் சுறண்டிகள்
அத்தேசத்தின் கட்டிடங்களோ, மகோன்னதமானவை. அவைகளில் அனேகம் ஆகாயச் சுறண்டிகள் (Skyscrapers) என்ற பெருமையான பெயரைப் பெற்றவைகளாயிருந்தன. அதாவது, அவை கள் இருபத்தைந்து அல்லது முப்பது மெத்தைகள் வைத்துக் கட்டப்பட்டு, ஆகாயத்தையளாவி நின்றன.
நூல் : நாகரீகப் போர் (1925) அதிகாரம் 3 – மேற்கரங்கச் செய்திகள், பக்கம் – 22
★
544. Crescent City – பாதிமதிப் பட்டினம்
அன்று முழுதும் டாலாசில் இருந்துவிட்டு, மறுநாள் புறப்பட்டு பாதிமதிப்பட்டினம் (Crescent city) என்னும் நியூ ஆர்லியாங் (New Orleans) துறைமுகத்தைப் போய்ச் சேர்ந்தார்கள். அதன் வியாபாரமும், ஏற்றுமதி இறக்குமதிகளும், சனாகாரமும் அளவிலாதிருந்தன. அதில் இரண்டு மூன்று தினங்கள் தாமதித்தார்கள். அதை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாள் அங்குமொரு அதிசயத்தைக் கண்டார்கள்.
நூல் : நாகரீகப் போர் (1925) பக்கம் -32
★
545. Smelling Salt – முகருப்புக் குப்பி
அம்மையார் மூர்ச்சை போனதை சத்யவிரதனும் அங்குள்ள மற்றவரும் கண்டு, அவளுக்கு மூர்ச்சை தெளிதற்குரிய சிகித்சைகளைச் செய்தார்கள். சத்யவிரதன் அன்று ஷோக்கில் வெளிக்கிளம்பியிருந்தா னாகையால், அவள் கையில் ஒர் முகருப்புக் குப்பியை வைத்திருந்தான். அதை அம்மையாரின் மூக்கில் காட்டவும், அம்மையா ரெழுந்திருந்து உட்கார்ந்தாள்.
நூல் : நாகரீகப் போர் (1925) அதிகாரம் : 4 – மாயா மித்திரம், பக்கம் 46, 47
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply