திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
24
‘கல்வி ‘ அதிகாரத்தின் சிறப்பு
அடுத்து வருவது ‘கல்வி’ என்னும் அதிகாரம். கல்விக்கு மிகுதியாகச் செலவழிக்கும் அரசே நல்லரசு என்பது அரசறிவியலாளர்கள் கூற்று. கல்வியில்லா நாட்டில்தான் கடுங்கோன்மை தழைக்கும். எனவேதான் அரசறிவியலாளர்கள் அரசியலில் கல்விக்கும் முதன்மை அளிக்கின்றனர். எனவேதான் திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலில் அரசின் தலைமையைக் கூறும் இறைமாட்சிக்கு அடுத்துக் கல்வியை அளித்துள்ளார். கல்வியின் இன்றையமையாமையை உணர்த்தவே, திருவள்ளுவர் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என நான்கு அதிகாரங்கள் மூலம் சிறப்பிக்கிறார்.
கல்வி என்பது எங்ஙனம் அரசறிவியல் ஆகும் எனச் சிலருக்கு ஐயம் வரலாம். அறிவியல் என்றாலே ஆய்வகம், கண்ணாடிக் குடுவைகள் முதலானவற்றுடன் மட்டும் தொடர்பு படுத்தக் கூடாது. எனவேதான் அரசியல் துறை சார்ந்த அறிவியலையும் அரசறிவியல் என்கின்றனர். அரசிற்கு அடிப்படையாகத் திட்டமிடவும் செயலாற்றவும் வழிகாட்டவும் கல்வியாளர்கள் தேவை. நாட்டு மக்கள் உயர்வு பெறவும் கல்வி தேவை. எனவே, கல்வி என்பது மக்களுக்கும் அரசிற்குமான அடிப்படைத் தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
“கல்வியாவது கல்வி ஆமாறும் அதனான் ஆகிய பயனும் கூறுதல். இது முதலாகப் பொருள் வரவு இயற்றும் திறங்கூறுகின்றார் ஆதலின், அஃது இயற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும்; அதனால் இது முன் கூறப்பட்டது.” என்கிறார் மணக்குடவர்.
பரிமேலழகர், “அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் , அவையாவன , அறநூலும் , நீதிநூலும் , யானை குதிரை தேர் படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின. அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார்.” என விளக்குகிறார். முந்தைய இறைமாட்சி அதிகாரத்தில் கல்வி வற்புறுத்தப்பட்டதால் அடுத்துக் கல்வி வைக்கப்பட்டது எனவும் கூறுகிறார்.
கல்வி என்றால் தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான் என்கிறார் பேரா.சி.இலக்குவனார். “மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்றுமொழி வாயிலாகக் கற்றலை யன்று.” எனப் பயிற்றுமொழிக்காவலரான முனைவர் சி.இலக்குவனார் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிறார்.
அரசியலுக்கு அடிப்படையான கல்வி குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை அடுத்து நாம் அறிவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 21.08.2019
Leave a Reply