திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

23

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க்கு ஒளி.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:390)

உழைக்க வாய்ப்பில்லாதவர்க்குக் கொடுத்தலும் யாவரிடமும் அருள் உள்ளத்துடன் நடந்து கொள்ளலும் செங்கோலாட்சி புரிதலும் மக்களைக் காத்தலும் ஆகிய செயலாற்றும் வேந்தன் பிறருக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்வான் என்கிறார் திருவள்ளுவர்.

புரூசி பியூனொ தெ மெசுகிட்டா (Bruce Bueno de Mesquita) என்னும் அரசறிவியல் கல்வியாளர் “நீ வல்லாட்சியராக(சர்வாதிகாரியாக) இருந்தால் எளிய மக்களின் நலவாழ்வு குறித்துக் கவலைப்பட வேண்டா” என்கிறார். அதன் மூலம் நலவாழ்வே  மக்களுக்கான நல்லாட்சி என்பதை உணர்த்துகிறார். திருவள்ளுவர் நல்லரசன் நலத்திட்டத்தில் கருத்து செலுத்த வேண்டும் என்பதை இக்குறள் மூலம் வலியுறுத்துகிறார்.

கொடை என்றால், தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல் என மணக்குடவர் விளக்குகிறார். அளித்தல் என்றால் தளர்ந்தவர்களிடத்துக் கொள்ளுங் கடமையை(வரி முதலியவற்றை)அவர்கள் தளர்ச்சிப் பார்த்து பிட்டு வைத்துப் பின் பெறுதல் என்கிறார். குடியோம்பல் என்றால் தளர்ந்த குடிக்கு இறை கழித்தல் என்கிறார்.

பேராசிரியர் இலக்குவனார் கொடுத்தல் என்பதற்குக் கலைஞர்களுக்குக் கொடுத்தல் என்கிறார். இப்பொழுது நலிந்த கலைஞர்களுக்குத் தரும் நலத்திட்ட உதவிகள் எடுத்துக்காட்டாகும்.

பரிமேலழகர், “அளி என்றால், தலையளி – அஃதாவது முகம் மலர்ந்து இனிய கூறல்” என்கிறார்.’ “ ‘குடி ஓம்பல்’ என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம்” என்கிறார்.

இவற்றிலிருந்து இப்பொழுது உள்ளதுபோல் தமிழ் மன்னர்கள் கடன், கடனுக்கான வட்டி, வரி முதலியவற்றில் தள்ளுபடிகள் வழங்கினாலும் தளர்ந்த நிலையில் தள்ளு படிகளைப் பெற்ற மக்கள் நல்ல நிலைக்கு வந்ததும் அவற்றைத் திருப்பித் தரும் தன்மதிப்பு நிலையில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. எனினும் பேரிடர்க்காலங்களிலும் திருப்பச் செலுத்த இயலா நிலையிலும் முழுத் தள்ளுபடியும் செய்துள்ளனர். 

ஒவ்வோர் அரசும் நல அரசாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசறிவியல் கூறும் இலக்கு. அவ்வாறு தமிழக அரசுகள் நல அரசுகளாக இருந்துள்ளன என இத் திருக்குறள் மூலமும் உரையாசிரியர்கள் விளக்கங்கள் மூலமும் தெரிகிறது.

வேந்தர்க்கு ஒளி என்பதற்குப் பரிதியாரும் காலிங்கரும் வேந்தர்களுள் சூரியன் என்று கூறுகின்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இயல்பான கொடுத்தல் அளித்தலைக் கூறுவதுபோல் தோன்றும் இத்திருக்குறள், நல அரசை நடத்த ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறது. வேண்டுநருக்கு வேண்டுவனவற்றை இன்முகத்துடன் கொடுத்துச் செங்கோலாட்சியை அரசுகள்நடத்தட்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 20.08.2019