திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
31
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397)
கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார்.
“கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை)
கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை.
கற்றவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் மகிழ்ச்சி யுற்றுத் தம் நாட்டில் இருப்பதுபோல் உணர இயலும். பொருட் செல்வம் உடையவர்க்கும் இந்த மகிழ்ச்சியும் சிறப்பும் கிடைக்காது.
அவ்வாறிருக்க கல்விச் செல்வத்தை நிலையாகப் பெறாமல், இருப்பது ஏன்?
கல்விச்செல்வத்தின் சிறப்பை அடைய இடையீடு இன்றிக் கற்க வேண்டும் அல்லவா?
இவ்வுலகில் இருக்கும் வரையும் கற்க வேண்டுமல்லவா? கற்பதைத் தொடர் பணியாகக் கொள்ள வேண்டுமல்லவா?
திருவள்ளுவர் கற்பதற்கு ஓய்வு கொடுக்காமல் இறக்கும் வரையிலும் கற்க வேண்டும் என்கிறார். நூற்றுக்கணக்கில் அறிவியல் துறைகள் உள்ளன. அவரவர் பணிக்கேற்க துறைசார் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்” என்றார் ஈழத்துக் கவிஞர் க.சச்சிதானந்தன்.
ஒவ்வொருவரும் சாகும்வரையும் தமக்குத் தொடர்பான கல்வி கற்று என்றும் எங்கும் சிறந்திட வேண்டும்.
Leave a Reply