திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர்உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 32

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398)

ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து.

குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார்.

உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை என்பதற்கு எழு பிறப்பு என்றும் பொருள்கூறித் திருக்குறளின் உண்மைப் பொருளை  எளிதில் அறிய முடியாமல் செய்து விட்டனர். இன்றைய ஆசிரியர்கள்  சிலரும் அதே வழியில் எழு பிறப்பு அடிப்படையில் உரை கூறுகின்றர்.

மறுபிறவி நம்பிக்கை இல்லாதவர் இதனை ஏற்க மாட்டார். மறு பிறவி இருந்தாலும் அதுவும் மனிதப்பிறவியாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?  இறப்புடன் ஒருவர் தொடர்பான எல்லாம் அழியும் பொழுது கல்வியின் பயன் எங்ஙனம் அடுத்த பிறவியில் சேரும்?

புதிய உரையாசிரியர்கள் சிலர், எழுபிறப்பு என்பதற்கு எழுகின்ற பிறப்பு,  ஏழேழ் தலைமுறை, எழுகின்ற துன்பங்கள், பல இடங்கள், ஏழு பருவம், எழு தலைமுறை, ஏழு வகைப்பட்ட உறவினர், ஏழுமடங்கு, பல காலம் என வெவ்வேறு பொருள்களில் கையாண்டு விளக்கியுள்ளனர்.

ஏமாப்பு=பாதுகாப்பு, உதவுதல், ஆதரவு எனப் பொருள்கள் உள்ளன.

‘ஒருமை மகளிரேபோல்’ எனச் சொல்லுமிடத்தில் திருவள்ளுவர் ஒரு பிறப்பு என்னும் பொருளில் கையாளவில்லை. ஆகவே, இக்குறளுக்கும் பிறப்புக்கும் எத்தொடர்பும் இல்லை.

எழுஞாயிறு, எழுமலை, எழுமுகனை, எழுமுரசு முதலான சொற்கள் ஏழு என்னும் பொருளில் வரவில்லை. அதுபோல் இக்குறளில் எழுமை என்பதிலும் ஏழு என்னும் பொருள் இல்லை.  திவாகர நிகண்டு எழுமை என்பதற்கு உயர்ச்சி என்னும் பொருள் தருகிறது. உயர்ச்சி உயரத்தையும் குறிக்கும் உயர்வையும் குறிக்கும்

ஒருமை உணர்வுடன் உள்ளம் ஒன்றிக் கற்கும் கல்வி எல்லாப் பொழுதும் உதவியாகவும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் எனலாம்.

ஆள்வோரும் ஆளப்படுவோரும் கல்வியில் சிறந்திருந்தால்தான் நல்லாட்சி நிகழும்.

இலக்குவனார் திருவள்ளுவன்தினச்செய்தி,30.08.2019

(திருவள்ளுவர்உலகப்பொதுநூலானதிருக்குறளில்அறிவியல்பார்வையிலும்கருத்துகளைத்தெரிவித்துள்ளார்ஆங்காங்கேஅறிவியல்குறிப்புகளையும்குறிப்பிட்டுச்சென்றுள்ளார்அறிவியல்கலைச்சொற்களையும்கையாண்டுள்ளார்அவற்றில்சிலவற்றைநாம்பார்ப்போம்.)