திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 36

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்றற்று.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402)

கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர்.

கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக் கல்வியறிவில்லாதவர்கள் பேச விரும்பினால் சிறப்பு அடைய முடியுமா? முடியாதல்லவா? அதைத்தான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதற்குப் பொருத்தமான உவமையையும் குறிப்பிடுகிறார். மார்பகம் இல்லாதவளால் பெண்மையை விரும்ப முடியாது. குழந்தை பெற்று வளர்த்து இன்பம் காண முடியாது.

‘கமம்’ என்றால் நிறைவு என்கிறார் தொல்காப்பியர்.  இதுவே காமம் என்றாகி நிறைந்த அன்பையும் குறிக்கத் தொடங்கியது. நிறைந்த அன்பை விரும்புவது மக்கள் இயல்பு. எனவே, காமம் – காமுறுதல் – என்பது விருப்பத்தையும் குறித்தது. பெண்களுக்குத் தாய்மை என்பது விருப்பமான ஒன்று. அதைக் குறிக்கும் வகையில்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

 பொதுவாக மார்பைத் தழுவினான் என நேரடியாகச் சொல்லாமல் “காரிகைத் தோள் காமுறுதல்” (நல்லுருத்திரன், கலித்தொகை 106.41) என்பதுபோன்று தோள் தழுவினான் என்றே  சங்கப்புலவர்கள் கூறுகின்றனர். திருவள்ளுவரும் 19 குறட்பாக்களில் தோள் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். ஆனால், இக்குறளில் மட்டும் நேரடியாகப் பெண்களின் உறுப்பைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். காரணம், குழந்தை பெற்றெடுத்துப் பாலூட்டித் தாலாட்டி வளர்க்க வேண்டும் என்ற தாய்மையைக் குறிக்க விரும்பியதுதான்.

எனவே, “பெண் காமுற்றற்று”  என்பதற்கு, உறவு இன்பத்திற்கான  பெண்மை என்று கொள்ளாமல், தாய்மை என்று பொருள் கொள்வதே சிறப்பாகும். பெண்மைக்கு இலக்கணமான தாய்மையைச் சிறப்பிக்கும் வகையிலேயே இக்குறள் அமைந்துள்ளது.

கல்லாதவன் என்றால் படிப்பறிவில்லாதவன் என்றுமட்டும் பொருள் இல்லை. ஒரு துறை அறிவைப் பெறாதவர், அத்துறை அறிவினர் முன் பேசுவதையும் குறிப்பிடலாம்.

மார்பகம் இல்லாப் பெண் தாய்மையை விரும்புவதுபோன்றது கல்லாதவன் கற்றவர் முன் பேச விரும்புவது.

கல்லாதவர் கற்றவர் முன் அமைதி காத்திடுக!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 04.09.2019