சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
1/3

தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.

சிலர். “அதங்கோட்டாசான் நான்கு வேதங்களும் நன்கு கற்ற பிராமணர், அவருக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பிக்கத் தொல்காப்பியர் நூல் வகுத்தார்” எனத் தவறாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு”  என அந்நூலில் குறித்துள்ளதுபோன்று ஆரியப் புலவர் அதங்கோட்டாசானுக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பித்த தொல்காப்பியர் என்ற குறிப்பு இடம் பெற்றிருக்கும்.

நிலந்திரு பாண்டியன் அவையில் தமிழ்ப்புலவர்களுக்குத் தலைவராக அதங்கோட்டாசான் இருந்துள்ளார். அவர் தலைமையில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் அரங்கேறியுள்ளது. எனவே, தலைவரான அதங்கோட்டாசான் நூல்களில் அறிவினாவும் ஐய வினாவும் எழுப்பியுள்ளார். தொல்காப்பியர் தடை விடைகள் அளித்தபின் நூல் ஏற்கப்பட்டுள்ளது  என்றுதான் பொருள். இப்பொழுது அரங்கேற்றம் இல்லை. எனினும் முனைவர் பட்டம் முதலான ஆய்வுப்பட்டங்களுக்கு ஆய்வாசிரியர் தம் நூலை அறிமுகப்படுத்தி அவையில் தொடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்கும் வாய்மொழித் தேர்வு முறை உள்ளது. இதனால் ஆய்வாளர்கள்  ஆய்வரங்கத் தலைவருக்கும் பிறருக்கும் அவர் ஆய்வுப் பொருண்மை குறித்துப் பாடம் கற்பித்தார் என்று பொருள் இல்லை அல்லவா? அதுபோல்தான் தொல்காப்பியர் அக்கால அரங்கேற்ற முறையில் நூலை அவை முன் வைத்து விளக்கியுள்ளார்.

அதங்கோடு என்பது குமரி மாவட்டத்திலுள்ள ஊர். இவ்வூர், விளவங்கோடு வட்டத்தில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது(வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்ட ஊர்தான் பின்னர் விளவங்கோடு என்றாயிற்று என்பர்). தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழரே அதங்கோட்டாசான்.

மேலும், வேதம் படிப்பவர் அருகில் உட்கார்பவரின் உட்காரும் பகுதியை அறுத்தல்,  வேதம் படிப்பதைக் கேட்பவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றல்  முதலான கொடுந்தண்டனைகள் வழங்கப்படும் எனக் கூறி வேதம் படிக்கத் தடை விதித்த பொழுது எங்ஙனம் ஆரியரல்லாத ஒருவர், ஆரிய வேதங்களை முழுமையாகக் கற்றிருக்க முடியும்?

“அதர்வணவேதம் ஒரு வேதமாக ஒப்புக்கொள்ளப்பட்டு நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார்.” எனத் தொல்காப்பியப் பெரும் புலவர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கூறுகிறார்.( பக்கம் 161, இலக்குவம், காவியா பதிப்பக வெளியீடு)

மேலும் அவர், “ …. ஆதலின் நான் மறை என்பது தமிழ் நான் மறையாகத்தான் இருத்தல் கூடும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. ஆதலின் ஆரிய மறைகள் நான்காக வகுக்கப்பட்ட பின்னரே தொல்காப்பியர் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனக் கருதி அவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று முடிவு கட்டுதல் தவறுடைத்தாகும்”. என்கிறார். இக்கருத்து, ஆரிய நான் மறை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என ஏற்றுக் கொண்டு ஆனால் அதற்குப் பின்னர்தான் தொல்காப்பியர் காலம் என்பாருக்கான மறுப்பு. தமிழ் நான்மறைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இருந்துள்ளன என்பதற்கான விளக்கமும் ஆகும்.

நான்மறை என்பது ஆரிய மறைகள் எனில் அவற்றைத் தமிழர் எங்ஙனம் முழுமையாகக் கற்றிருக்க முடியும். தமிழும் வேதங்களும்(Tamil and Vedas) என்னும் வலைப்பூ, “நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று சாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று சாதியினர் மட்டுமே – அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்சுமுல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது.”  என்கிறது. அண்மைக் காலத்தில் கூட அயலவருக்கு மறைக்கப்படும் ஆரிய மறைகளை ஆரியர் வருகைக் காலமான ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், முற்றுமாகத் தமிழர் ஒருவர் கற்றார் என்பது எங்ஙனம் பொருந்தும்? தொல்காப்பியர் காலத்தில் இல்லாத ஆரிய நான்மறையை இருந்ததாகக் கூறுவதும் அவற்றில் நிறை தேர்ச்சி பெற்றவராக அதங்கோட்டாசான் இருந்ததாகக் கூறுவதும் அவ்வாறு கற்றதாகத் தவறாகக் கூறி அவரைப் பிராமணர் என்பதும் மிகப் பெருந் தவறுகளாகும்.

“மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். எனவே, தமிழ் மறை என்பது சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது. ஆரிய மறை என்பது பிறருக்கு மறைப்பது எனப் புரிந்து கொள்ளலாம். மேலும், தமிழில் மறை என்பது துறை நூலையும் களவொழுக்கத்தையும் குறிக்கும் பல் பொருள் தரும் சொல்லாகும்.

அரைகுறை அறிவினர் தப்பும் தவறுமான செய்திகளைப் பரப்புகின்றனர் என்பதற்கு ஒரு சான்று.

ஒருவர்,

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பல வடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.” எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தைத் திருக்குறள் எனத் தவறாகக் கூறும் இவரின் பிற கருத்துகளும் தவறே என்பதில் ஐயமிலலை.

கலித்தொகை கடவுள் வாழ்த்து உரையில் நச்சினார்க்கினியர், “மறையாவன : தைத்திரியமும், பெளடியமும், தலவகாரமும், சாமுவேதமுமாம். இனி, வேத வியாசர் வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்” என்று விளக்குகிறார். எனவே, மறையும் வேதமும் வேறு வேறு எனலாம். மேலும்,  நான்மறை இருவகைகள் உள்ளன. முதலில் கூறப்பட்ட நால்வேதம் ஒரு வகைத்தொகுப்பு; வேத வியாசர் தொகுத்த வேதம் வேறுவகைத் தொகுப்பு என்று புரிகிறது.

வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. ஆதலின் வேத வியாசர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன.

புரையில்

நற்பனுவல் நால் வேதம்

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி 04.09.2019