திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 

37

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 403)

கற்றவர் முன்னிலையில் பேசாமல் இருப்பின் கற்காதவரும் மிகவும் நல்லவரே என்கிறார் திருவள்ளுவர்.

கல்வியறிவற்றவன் இன்று கேட்கும் வினாவிற்கான விடையைக் கற்றறிந்தவர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர் என்கிறார் அரசியல்வாதியான சோஃகன் உவோல்புகாங்கு வொன் கோயதெ (Johann Wolfgang von Goethe) எனவே, கல்லாதவன் கற்றவர் முன் அமைதி காக்க வேண்டும்.

படிப்பறிவில்லாதவர் படித்தவர் முன் தன்னை மிகவும் படித்தவராகக் காட்ட ஆசை கொண்டு பேசக்கூடாது. படிக்காதவர் நல்லவர் அல்லர் எனக் கருதுகிறார் திருவள்ளுவர். எனவேதான் கற்றோர் முன்னிலையில் அமைதி காப்பவரை கல்லாதவரும் என்னும் உம்மைத் தொகையால் குறிப்பிட்டு,  மிகவும் நல்லவர் என்கிறார்.

படித்தவர்களும் தமக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகத் தமக்குத் தொடர்பில்லாத் துறைகளிலும் மூக்கை நுழைப்பர். அவ்வாறு பேசுவதால் அவரது கல்வியறிவு மீதும் ஐயம் வருமே தவிர அவரைக் கற்றவராகப் பிறர் எண்ண மாட்டார்.

அமைச்சர்கள் சிலர் தங்கள் துறைக்குத் தொடர்பில்லாத பிறர் துறைகளைப்பற்றிக் கருத்துகள் கூறி வாங்கிக் கட்டிக்கொள்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளைத் தவிர்க்கவே திருவள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

கற்றவர் முன்பேசாமல் நற்பெயர் எடுத்திடுக!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 05.09.2019