சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
3/3

மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில் மட்டும் வரும் ‘வேதம்’ என்னும் சொல்லுக்கு அறிவுநூல் என்னும் பொருளில்லை. ‘புல் கட்டு’ என்னும் பொருளிலேயே உள்ளது. பாரதத்திற்கு முற்பட்ட பாடலாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் வரும் “நால் வேதநெறி திரியினும்” என்பதில் தமிழ் நான்மறைகளே குறிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னரே பாரதம் பாடிய வியாசரால் நான்காக வடமொழி வேதம் வகுக்கப்பெற்றது.”   என உரைக்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,

மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்

மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்

முறையாய் இவைகட்குச் சான்றுகாட்டி

முழக்கஞ்செய்த முத்தமிழ் அறிஞனை

வாழ்த்தாத நாளில்லை வையகம்…..

என வாழ்த்திப் பாடுகிறார்.

அறிஞர் கா.சு.பிள்ளை எனப் பெறும் கா.சுப்பிரமணிய(பிள்ளை) ,  “ஆரியர்கள் தமது வேதம் மூன்று என்ற கருத்தில் ‘வேதத்திரயி’ என்று வழங்குதல் காணப்படுகிறது” (திருநான்மறை விளக்கம் – ப. எண்: 42)  என்கிறார்.

இரிக்கு முதலில் உருவானது. அடுத்து யசூர், இவற்றிற்குப் பிற்பட்ட காலத்தில் சாமம், மிகவும் பிற்பட்டகாலத்தில் அதர்வணம் உருவாகியுள்ளது. இவையே வரலாற்றாசிரியர்களும் உரையாசிரியர்களும் தரும் காலவரிசைப்பட்ட நூல் முறை. எனவே, வியாசர் தொகுத்த பொழுது நான்காகத் தொகுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியப் பெரும்புலவர் இலக்குவனார் தொல்காப்பியர் குறிப்பிடும் மறை என்பது தமிழ் மறையே எனப் பின்வருமாறு விளக்குகிறார்:

“ ‘அந்தணர்’ என்பது வட மொழியாளர்களையும் ‘மறை’ என்பது வடமொழி வேதத்தையும்தான் குறிக்கும் என்று உரையாசிரியர்களில் சிலர் கருதியது இமயம் போன்ற பெருந்தவறாகும். தமிழ்மொழிபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோருள் சிலரைத் தவறான முறையில் திருப்பி விட்டதும் இத்தவறான உரையேயாம். தமிழ் நூல்களின் கால வரையறையைப் பிறழ உணரச் செய்ததும் இத் தவறேயாம். ‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ? ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் ‘அந்தணர்’ தமிழர்க்குரியவர் ‘மறை’ தமிழர்க்குரியது எனத் தெளிதல் வேண்டும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக்கம்  190,காவியாவின் இலக்குவம் நூல்).

ஆய்வாளர் உ.சுப்பிரமணியம்,  ‘நான்மறை எனப்படுவது தமிழ்மறைதான்’ என்று  எழுதிய நூலுக்குத்  தமிழ்ப்பல்கலைக்கழகம் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

“வேதியர் சொல் மெய்யென்று மேவாதே” என உமாபதி சிவாச்சாரியார் சொல்வதன் மூலம் வேதியர் கூறும் ஆரிய வேதங்களுக்கு எதிர்ப்பு இருந்ததையும் புரிந்து கொள்ளலாம்.

செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது?’, ‘அறத்தமிழ் வேதம்’ ஆகிய இரு நூல்களில் தமிழ் மறைகளையும் ஆரிய வேதங்களையும் வேறுபடுத்தி எழுதியுள்ளார். மேலும் அவர், “நாடோடிகளான ஆரியர்க்கு வழிபாடு செய்வது எப்படி என்று தெரியாது. ஆனால் அவன் சிந்துவெளியில் சந்தித்த தமிழனோ வேள்வி செய்திருக்கிறான். இதைச் சிந்துவெளி அகழ்வாய்வில் வெளியான ஒரு முத்திரை காட்டுகிறது.” என்கிறார்.

ஆரிய வேதங்கள் பிற்காலத்தில்தான் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறுகிறார். அவர், பொதுவுடைமைச் சிந்தனையாளரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய டி.டி.கோசாம்பி தந்துள்ள ஆராய்ச்சி உரையின்படி கி.மு.14ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில்தான் வேதப் பாசுரங்கள் முதல் முதலாகத் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவிலும்; அவற்றைக் கொண்டுவந்து, குறிப்புரைகளும் எழுதியுள்ளனர்   என்று விளக்குகிறார்.  சாயனர்(சாயனாச்சாரி) என்பவர்தான் அவ்வாறு எழுத்து வடிவில் இரிக்கு வேதத்தை எழுதி விளக்கமும் எழுதினார். கி.பி.14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விசயநகரப் பேரரசு காலத்தில்,  மாதவ வித்தியாரண்யர் எழுதிய ‘சருவதர்சன சங்கிரகம்’ என்னும் நூலில் உலகாய்தனின் கூற்றாக  வேதங்கள் மூன்று எனக் குறிக்கிறார்.

எனவே, 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நால்வேதங்களாகக் குறிக்கப்பட்டவற்றை எங்ஙனம் அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் கூறியிருக்கும்?

தமிழ்நாட்டிற்குத் தொடக்கத்தில் வந்த ஆரியப் புலவர்கள் தமிழை மதித்தனர் தமிழ்ப்புலவர்களைப் போற்றினர். தமிழ் நூல்களைக் கற்றுச் சிறந்தனர்.  ஆனால், பின்னர் வந்தவர்கள்  தங்கள் மொழியைத் தேவ மொழி என்றும் தமிழை இழிவு(நீச)மொழி என்றும் சொல்லினர். தமிழ் நூல்கள் ஆரிய நூல்களைப் பார்த்து எழுதியதாகவும் ஆரியநூல்களே தொன்மையானவை என்றும் பொய்யுரை பரப்பினர். தமிழில் உயர்வானவர்களைக் குறிக்கும் ஐயர்(தலைவர்), அந்தணர்(அறவோர்), பார்ப்பார்(ஆராய்ச்சியாளர்) முதலான சொற்களில் தங்களை அழைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழ் நூல்களைப் பார்த்துத் தங்கள் நூல்களையும் மறை என்றும் வேதம் என்றும் அழைத்தனர். ஆனால் நாளடைவில், தமிழில் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. தமிழின் நிறைவுகள் ஆரியத்திற்கும் ஆரியத்தின் குறைகள் தமிழுக்கும் மாற்றப்பட்டன. தமிழ் நூல்கள் இயற்கையால் அழிந்தனபோக மடத்தனத்தினாலும் வஞ்சகத்தினாலும் அழிக்கப்பட்டமையால், வடக்கிருந்து வந்தவர்கள்(பிராமணர்) பயன்படுத்திய சொல்லாட்சிகள் அவர்களுக்கே உரியனபோல் கருதப்பட்டன.

மறை, வேதம் முதலியவற்றை ஆரியர்கள் தம் நூல்களையும் குறிக்கப் பயன்படுத்தினர். எனவே, தமிழில் இருவகையாகவும் இச்சொற்கள் உள்ளன. இவற்றின் உண்மையைப் புரிந்து கொள்ள இயலாமல் படிப்போர் குழம்பி,  இவை வரும் இடங்களில் எல்லாம் ஆரிய நூல்களைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். அதனால்தான் திருக்குறள் நூலை உலகப்பொதுமறை, தமிழ் மறை, தமிழ் வேதம் என்றெல்லாம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சொற் பயன்பாட்டுக் கால அடிப்படையில்  நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழ்நூல்களே என உறுதியாகக் கூறலாம். இவற்றை ஆரியமாக எண்ணி மறுக்கவும் வேண்டா. இவற்றை நம்புவதால் ஆரியத்தை ஏற்கவும் வேண்டா.

 இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி 06.09.2019