திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 38

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 404)

கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.

நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்.

சிலர் தமிழில் knowledge, wisdom என்னும் இரண்டிற்கும் அறிவு என்றே குறிப்பதாகத் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். நமக்குத்  தெரியவில்லை என்பதால் தமிழில்  சொற்கள் இல்லையென்று எண்ணக்கூடாது. திருக்குறளில் இரண்டிற்கும் வேறுபட்ட சொற்கள் உள்ளமையைக் காணலாம். அறிவு – knowledge என்பது அறிவுடைமை என்னும்  அதிகாரத்தின் மூலமும் பிற குறள்கள் மூலமும்  45 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அறிவு தொடர்பான அறிவினான் முதலான சொற்களும் உள்ளன. சங்க இலக்கியங்களில் அறிவு என்பது 43 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆனால் ஒட்பம் என்பதைத் திருவள்ளுவர் மட்டும் இரண்டு குறட்பாக்களில்(404, 425) கையாண்டுள்ளார். மேலும் துறை அறிவுக் கலைச்சொற்கள் நீங்கலாகப் பொதுவாகப், பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு, மெய்யறிவு, மதி, கூர்மதி, மதிநுட்பம், மதிநலம், பட்டறிவு, பணியறிவு, நூலறிவு, ஒட்பம், ஒண்மை, பொறி முதலான பல சொற்கள் அறிவைக் குறிப்பதற்கு உள்ளன.

கல்வியறிவு இல்லாதவரின் பிற அறிவைக் கற்றவர்கள் ஏற்பதில்லை. எனவே, உலகியறிவு முதலானவை இருப்பினும் படிப்பறிவு இல்லையேல் படித்தோர் பொருட்படுத்த மாட்டார்கள். தம் அறிவு உலகிற்குப் பயன்படவாவது அறிவாளர்கள் நூலறிவையும் பெற வேண்டும்.

படிப்பிலார் அறிவைப் படித்தோர் ஏற்கமாட்டார்!

லக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 07.09.2019