திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

46

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

 (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412)

செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன் பிசர் (Maryanne Fisher Ph.D.) முதலான அறிவியலறிஞர்கள் பல வகைகளில் தெரிவிக்கின்றனர்.

மணக்குடவர் “பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார்” என விளக்குகிறார். இவ்வாறே கூறும் பரிப்பெருமாள், எல்லாக் காலமும் கேட்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

செவிக்கு ஊட்டமாக அமைவது  கேள்வி உணவு. இஃது எல்லாக் காலமும் பெறப்பட வேண்டும். கேள்வி உணவு சரியாக அமையாத சில பொழுது மட்டுமே வயிற்றுக்கு உணவு தரப்பட வேண்டும். எனவே, கால வரம்பின்றி எக்காலமும் உண்பது உடலுக்குக் கேடு. செவிக்குத் தொடர்ச்சியாக உணவு வழங்காமல் இருப்பது உள்ளத்திற்கு கேடு.

செவியுணவின் நிறைவைக் கூறும் திருவள்ளுவர் வயிற்றுக்கான உணவின் அளவையும் உணர்த்துகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், “வயிற்றை நமது அடிமையாக வைத்து நாம் கொடுப்பதை உண்ணச் செய்தல் வேண்டும். நாம் அதன் அடிமையாகி அதனை நிரப்புவதற்காகவே வாழ்ந்து கொண்டிருத்தல் கூடாது. வயிற்றுக்கு அடிமையானோர்க்கு வாழ்வே கிடையாது.” என்கிறார்.

எழுத்து மொழி தோன்றாக் காலத்தில் செவிவழியே செய்திகளும் கருத்துகளும் பரவின. எழுத்து மொழி தோன்றிய பின்னரும் கல்வியில் கேள்வியும் சரி பாதியானது. எழுதுவதைப் படிக்கும்  பொழுது இருக்கும் உணர்வை விட உணர்ச்சியாக அவற்றைப் பேசும் பொழுதும் இனிமையாகப் பாடும் பொழுதும் கேட்டால் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. உள்ளம் அவற்றை ஈர்ப்பதற்கான நேரமும் குறைகிறது. எனவே, கேள்விச்செல்வம் சிறந்ததாகத் தொடர்ந்து வேண்டப்படுகிறது.

செவி உணவு கிடைக்காத பொழுது வயிற்றுக்கு உணவு அளி!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 21.09.2019