திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

 

 7

 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306)

 சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதன் இயல்பில்  நெருப்பு உள்ள இடத்தையும் நெருப்பு பரவும் இடத்திலுள்ள அனைத்தையும் அழிக்கும். இதுதான் நெருப்பின் தன்மை. இத்தகைய நெருப்பின் அறிவியல் வரையறைதான் சேர்ந்தாரைக் கொல்லி என்பது. சினத்தைச் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ எனச் சொல்வதன் மூலம், கொள்பவரை மட்டுமன்றிச் சேர்ந்துள்ள பிறரையும் கொல்லும் சினத்தீக்கு இடங்கொடுக்காதே என்கிறார் திருவள்ளுவர்.

“சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்” என்கிறார் உரையாசிரியராகிய மணக்குடவர். ஏமப்புணை என்றால் பாதுகாப்பான படகு அல்லது கரையேற்ற உதவும் கப்பல். தன்னைத் துன்பக்கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்கும் நலம் விரும்பிகளாகிய கப்பலையும் சினம் அழித்து விடும் என்பதன் மூலம் “சினத்தால் நீ மட்டுமல்ல, உன்னைச் சார்ந்து இருப்பவரும், உனக்குப் பாதுகாப்பாக நின்று துணைபுரிவோரும் அழிவர். எனவே, சேர்ந்தாரைக்கொல்லியாகிய சினத்திலிருந்து விடுபடு” என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு கட்டடத்தில் ஏற்படும் சிறு தீப்பொறி கட்டடத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள உயிர்களையும் பொருள்களையும் கட்டடங்களையும் அழித்து விடுகிறது. காட்டில் ஏற்படும் நெருப்புப் பொறி காட்டிலுள்ள மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள் என அனைத்தையும் அழித்து விடுகிறது. நெருப்பு, தான் சேர்ந்துள்ள இடத்தை அழித்து விடும் கொடுமையான ஒன்று. அக்கொடுமைக்கு இணையானதுதான் சினம் என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர், பிறிதொரு குறளில்,

இன நலம் எல்லாப் புகழும் தரும்” (குறள் 457)

என்கிறார்.  தான் எடுத்த செயல்களைச் சிறப்பாக முடித்து வெற்றியையும் புகழையும் தரும் இனத்தாரும் சினத்தைக் கொண்டவரால் அழிவர் என அதன் பெருந்தீமையை உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

இதற்கு முந்தைய குறட்பாவில்,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் (திருக்குறள் 305)

 என்று சினம் தன்னையே கொல்லும் என்றார் திருவள்ளுவர்; இக்குறட்பா மூலம், “உன்னை மட்டுமல்ல, உன் அரவணைப்பில் உள்ளவர், உன்னைத் துன்பத்திலிருந்து மீட்டு உதவுநர் என அனைவரையும் சினம் அழிக்கும்” என்று பெரு எச்சரிக்கை விடுக்கிறார். ஒருவர் கேட்டிற்கு ஆளாகும் பொழுது அவரை நம்பியிருப்பவர்க்கும் கேடு வரும் என்பது இயற்கைதான். ஆனால் சினத்தால் வரும் கேடு அவருக்கு உதவியாக இருப்பவரையும் அழிக்கும் கொடுமை வாய்ந்தது என இதன் மூலம் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

தன்னல நோக்கில் சினம் கூடாதுதான். ஆனால் பேரளவு இன அழிப்பு நடந்த பின்னரும் அறச் சீற்றம் கொள்ளாமல் அமைதி காக்கும் இன்றைய  தமிழர்களைப்பற்றி இன்றைக்குத் திருவள்ளுவர் இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 28.07.2019