திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

 8

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் )

நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர்.

நிலைநிற்றல் என்னும் பொருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது. திருவள்ளுவர், நிலம் என்பதை, நிலம், நிலத்து, நிலன் முதலான வெவ்வேறு சொற்களில் 25 முறை கையாண்டுள்ளார்.

நியூட்டனின் மூன்றாவது விதியானது “ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு.”  என்பதைக் கூறுகின்றது. நிலத்தை நாம் அடிக்கும் பொழுது அதன் எதிர் வினையாக அந்நிலம் அழுந்தாமல் உறுதியாக நிற்பதால் நம் கையை எதிர்த்து அது தாக்குவதாக அமைகிறது. எனவேதான் கைக்கு வேதனை உண்டாகிறது.

திருவள்ளுவர் பொறுமைக்கும் நிலத்தைத்தான் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 151)

எனத் தன்னைத் தோண்டுபவரையும் பொறுமையுடன் நிலம் தாங்கிக் கொள்வதுபோல், தம்மை இகழுபவர்களையும் பொறுத்தல் தலைசிறந்த பண்பு என்கிறார்.

நீருக்கு என்று தனித்த நிறமோ, சுவையோ, மணமோ இல்லை என்பது அறிவியல் உண்மை. இந்த உண்மையை உவமையாகக் கூறி,

நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பது ஆகும் அறிவு (திருவள்ளுவர், திருக்குறள் 452)

என உணர்த்துகிறார்.

இதற்குத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்,

“தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும்.” என விளக்கம் தருகிறார்.

நிலம் வளம் நிறைந்தது. என்றாலும் தானாக அதனை வெளிப்படுத்தாது. நாம் முயன்று அவ்வளங்களை வெளியே கொண்டுவந்தால்தான் பயன்படுத்த இயலும். இதனைத் திருவள்ளுவர்,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும். (திருவள்ளுவர், திருக்குறள் 1039)     என விளக்குகிறார்.

“நில உரிமையாளன் நிலத்திற்குச்செல்லாமல் சோம்பலுடன் இருப்பானால், மனைவியிடம் பாராமுகம் காட்டினால் அவள் பிணக்கு கொள்வதுபோல் பிணங்கிப் பயன்தராது” என்கிறார்.

குறுந்தொகையில்(பா.40)  

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

எனப் புலவர் செம்புலப்பெயனீரார் செம்மண் நிலத்தில் விழும் மழைநீர் அதன் தன்மை பெறுவதுபோல அன்பு நெஞ்சங்கள் இரண்டறக் கலந்தன  என்கிறார்.

இதுபோல் திருவள்ளுவர், நிலமும் நீரும் பொருந்திக் கலக்கும் அறிவியல் தன்மையைப்

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து (திருவள்ளுவர், திருக்குறள் 1323)

என்று விளக்குகிறார்; நிலமும் நீரும் கலப்பதுபோல் தலைவியும் தலைவனும் இரண்டறக்கலந்தால், அதனிலும் இன்பம் மேலுலகத்திலும் கிடையாது என்கிறார்.

பொறுமையின் இலக்கணமான நிலமே தன்னை அறைந்தவர்க்குத் துன்பம்தருகின்றது. நாமோ நம் இனத்தை அழித்தவர்க்குத் தண்டனை வழங்க வழிவகுக்காமல் இருக்கிறோமே எனப் பார்த்து நிலம் நம்மைக் கண்டு நகைக்கிறதோ?

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 29.07.19