(சென்ற இதழின் தொடர்ச்சி)

எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்து அவற்றில் நூல்களும் எழுதிச்சென்ற அரிச்டாட்டில் எனும் அருங்கலை வல்லுநர்தான் இம் மீனியலையும் (Greek : Icthya = a fish logos-a discourse > Icthyology) தொடங்கி வைத்தார். முனைவர் குந்தர்(Dr. Gunther) என்பார், “அரிச்டாட்டில் தொகுத்து வைத்த மீனைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகப் பொருத்தமாகவும் உண்மையாகவும் உள எனக் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நெய்தல் நிலத்தில் கருப்பொருட்களில் ஒன்றாக மீன் கூறப்பட்டுள்ளது. பெருங்கடற்பரப்பில் சேயிறால் நடுங்கக், கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலையுடைய பரதவர் அயிலை துழந்த அம்புளியையும் கொழுமீன் தடியையும் உண்டு மகிழ்ந்த நாடு இது. அப்பரதவர் கோடடு மீன் கொண்டி மணம் கமழ்பறக்கத்துப் பகுக்கும் வழக்கமுடையவர்.

நந்தமிழ்ப் புலவரோவெனின் கழிச்சுறா எறிந்து அத்திரியின் (கோவேறுகழுதை) தாட்களைப் புண்படுத்துவதைக் கண்டு “கழிச்சுறா எறித்த புண்தான் அத்திரி”

நக்கீரனார்.

வயச்சுறா பொருந்தத் தாக்கி எறிந்தென வலவன் அழிப்ப” எனச் சுறாவின் தாக்குதலுக்கு உவமையும் கூறி மகிழ்ந்தனர்.

கொழுங்கண் அயிலை மீனையும் இறவின் முடங்குபுறத்தையும் கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும் இருங்கழி பலவற்றையும் வரிவெண்தாலி வலை செத்து வெரூம், பெருங்கடற்கரையது சிறு வெண்காக்கை பலவற்றையும், “இனமீன் இகன்மாற வென்ற சினமீன் ஆகிய எறி சுறாவினையும் கண்ட நுண்மாண் நுழை புலத்தினர் ஆவர் நம்புலவர். இம்மட்டோ?

தேன் நெய்யொடு கிழங்கு மாறியவர் மீன் நெய்யொடு நறவு மறுகவும்” கழனியிலும் இலஞ்சிகளிலும் பொய்கைகளிலும் கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர், “மீன் நிணந் தொகுத்த ஊன் நெய் ஒண்சுடரி” “மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறுதீ விளக்கில்” துஞ்சுதலையும் “வன்கை திமிலர் கொழுமீன் குறை இய துடிகண் துணியலை” நாவாய் ஏற்றியதையும் அறிவியல் நுட்பத்தோடு பாடி வைத்துச் சென்றுள்ளார்.

கொழுமீன் என ஒரு மீன்சாதியே இருந்ததாக அறிய வருகிறோம். “கொழுமீன்உண்ட வண்ணங்களே”(திருச்சிற்றம்பலக் கோவை), “கொழுமீன் குறைய ஒதுங்கி” (சிறுபாணாற்றுப்படை), “நெய்த்தலைக் கொழுமீன்”, “கொழுமீன் சுடுபுகை” (நற்றிணை), “நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்” (பெரியபுராணம்)ஆகியன காண்க.

கெடிறுஎனவும் ஒரு மீனினத்தை அறிகிறோம். இதன் செதிள் மருங்கே நச்சுடைய இரு முட்கள் இருக்குமாம். எனவே, இதனை விழுங்கிய பறவை, இதன்முட்கள் வயிற்றில் தைத்தலால் பெரிதும் துன்புறுதல் இயல்பு. இதனை இக்காலத்தில் கெளுத்தி என வழங்குவர்.

சனியன்பிடித்த நாரை கெளுத்தி மீனை விழுங்கிற்றுகும்” எனக் கூறுவர். இதனையே ஐங்குறுநூறு, “பெருங்கடற்கரையது சிறுவெண்காக்கை இருங் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்” எனக் கூறும். எனவே, மீனின அறிவில் மேலைநாட்டவர்க்குத் தமிழ்ப் புலவர் எவ்வகையிலும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்லர். இன்னும் பல கூறலாம். விரிவஞ்சி விடுத்தோம்.

இவ்வாறு தொன்மை மிக்க மீனியல் பல்லாற்றானும் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருத்தலை விவரமாக நோக்குவோமாக!

(தொடரும்)

குறள்நெறி: 01.10.1964 : பக்கம் 3