எழிலி-nimbostratus

[எழிலி-nimbostratus]

kalaicho,_thelivoam01 68. எழிலி-nimbostratus

 

முகிலியல் (science of clouds)

  முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர் இலமார்க்கு (Jean-Baptiste Lamarck 1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும் இவ்வேறுபாடுகள் தோற்றத்தின் அடிப்படையில் கூறப்பட்டனவே தவிர தன்மையின் அடிப்படையில் விளக்கப்படவில்லை. யோவான் மேசன் (Sir (Basil) John Mason), என்னும் அறிஞர்தான் முகில்களின் இயற்பியல் (The Physics of Clouds) என 1957இல் நூலை வெளியிட்டு, முகில்களின் வகைகளைச் சரியாக விளக்கினார். (1994 இல்தான் இதனை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளனர்.) <http://www.natpu.in/?p=5014> மழையியல் பற்றி நன்கு அறிந்திருந்த பழந்தமிழர்கள் முகில் அறிவியல் குறித்தும் சிறப்பான அறிவுடையவராக விளங்கியுள்ளனர்.

  முகில்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் சூட்டிய பெயர்களை எல்லாம் அவற்றின் அறிவியல் சிறப்பை உணராமல் முகிலைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள்-ஒரு பொருள் பன்மொழி-என நாம் எண்ணி விட்டோம். சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள-முகில்களின் வேறுபாட்டை உணர்ந்து முகில் தன்மைக்கும் தோற்றத்திற்கும் இருக்கும் உயரத்திற்கும் ஏற்றாற்போல் உணர்த்தும்-முகில் கலைச் சொற்களை நாம் பார்ப்போம்.

எழிலி (33)

  உயரங்களின் அடிப்படையில் பத்து அடுக்குகளாக முகில் கூட்டத்தை வகுத்துள்ளனர். அவற்றுள் தாழ்நிலையில் உள்ள முகில் வகையான எழிலி பற்றி முதலில் பார்ப்போம். எழிலி என்னும் சொல்லை 33 இடங்களில் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர். ஓரிடத்தில் (புறநானூறு 173.5-7) மழை என்னும் பொருளிலும், மற்றோர் இடத்தில் (அகநானூறு 43:1-8) கார்ப்பருவம் என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ள இச்சொல், பிற இடங்களில் முகில் என்னும் பொருளில்தான் வந்துள்ளது.

தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி (நற்றிணை : 153. 5)

எழிலி தோயும் இமிழ் இசை அருவி (புறநானூறு : 369.23)

தண்ணியல் எழிலி தலையாது மாறி (பதிற்றுப்பத்து : 18.6)

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி (முல்லைப்பாட்டு : 5)

பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; (அகநானூறு : 23.2)

தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, (குறுந்தொகை : 214.2)

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி (நற்றிணை : 5.5)

இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ? (கலித்தொகை : 16.8)

வலன் உயர் எழிலியும், மாக விசும்பும் (பரிபாடல் : 1.50)

ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறி (ஐங்குறுநூறு : 411.12)

பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி (முல்லைப் பாட்டு : 4-5)

சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்

தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப (குறுந்தொகை: 314:1-2)

மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,
மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி,           (பதிற்றுப்பத்து : 18:8-10)

குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி

நுண் பல் அழி துளி பொழியும் நாட!          (ஐங்குறுநூறு: 251:1-2)

 

  மேலே குறிப்பிட்ட முதல் பாடலில், தலைவியின் நெஞ்சம் தலைவியிடம் இருந்து எழுந்து தலைவனிடம் சென்றதைக் குறிப்பிடும் பொழுது, புலவர் தனிமகனார், கடலிலிருந்து எழுந்து செல்லும் எழிலியாகிய முகிலைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி 

மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் 

செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும் 

தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி 

தென்புல மருங்கிற் சென்றற் றாங்கு 

நெஞ்சம் அவர்வயின் சென்றன

  ‘‘கீழ்க் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம் அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல’’ என விளக்கம் தருகிறார் பின்னத்தூர் நாராயணசாமி (ஐயர்) அவர்கள்.

   ‘‘ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலைக்குடித்து வலமாகவெழுந்து மலைகளை இருப்பிடமாகக்கொண்டு பெய்யுங்காலத்தே உலகத்தை வளைந்தெழுந்த கடிய செலவினையுடைய மேகம்’’ என முல்லைப்பாட்டு உரையில் முன்னதாகவே நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளார்.

  எனவே, கடல் மட்டத்தில் உருவாகக்கூடிய முகிலே எழிலி என்பதாகும். கடல் மட்டத்தில் உருவாகி எழுந்து மேலே செல்லும் முகிலிற்கு நிம்போசிராட்டசு-nimbostratus என 20ஆம் நூற்றாண்டில்தான் வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர் மேல்நாட்டார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் கண்டறிந்த எழில் என்பதற்கு nimbostratus என்ற வரைவிலக்கணமே சரியாகும்.

எழிலி-nimbostratus

 – இலக்குவனார் திருவள்ளுவன்